Skip to main content

பன்னிரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (13.09.2019) Friday



அழகியசிங்கர்




கடந்த பத்து நாட்களாகப் படிக்கத் தொடங்குகிறேன்.   அதனால் என்னை அறியாமலேயே தினம் தினம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தானாகவே எழுகிறது.  என்னன்ன புத்தகங்கள் படித்துக்கொண்டு வருகிறோம் என்று பார்க்கிறேன்.  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.   முன்பெல்லாம் நான் வைத்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பெரும்பாலும் படிப்பதில்லை.  பார்த்துக்கொண்டிருப்பேன்.  எப்பவாவது புரட்டிப் பார்ப்பேன்.  பயணத்தின் போது தீவிரமாகப் படிக்கப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.   கடந்த பத்து நாட்களாக நான் படிக்கத் தொடங்கிய பிறகு எனக்குதத் தானாகவே எதாவது படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

சும்மா இருக்கும்போதுகூட பத்திரகையில் உள்ள கட்டுரைகளைப் படிக்கத் தோன்றுகிறது. வேண்டுமென்று தோன்றுகிறது.  பொதுவாக பத்திரிகைகளைப் புரட்டிப் பார்ப்பேன்.  

சனிக்கிழமை தமிழ் ஹிந்துவும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஹிந்து, தினமலர், தினமணி, திங்கட் கிழமை தினமணி. முன்பு என்றால் புரட்டிப் பார்ப்பதோடு சரி, இப்போது நடுப்பக்த்தில் படிக்கத் தொடங்குகிறேன்.     9ஆம் தேதி செப்டம்பர் மாதம் தினமணி எடுத்துப் படித்தேன். மக்களாட்சி மேன்மை அடைய க பழனித்துரை எழுதிய கட்டுரையை வாசித்தேன்.  பின்னடைவல்ல, பாடம் என்ற தலையங்கக் கட்டுரையை வாசித்தேன். பா ஜ க மீண்டும் தனித்துப் போட்டி என்ற ஜெ ராகவன் கட்டுரையை வாசித்தேன். இது என்னுள் நடந்த மாற்றமென்று கருதுகிறேன்.

பன்னிரண்டாம் நாளின் வாசிப்பு அனுபவத்தை 14ஆம் தேதி தான் வாசிக்க முடிந்தது.  இவர்கள் என்ற நகுலனின் புத்தகம். 142 பக்கங்கள் கொண்ட க்ரவுன் சைஸ் புத்தகம்.  நேரத்தையெல்லாம் பார்க்கவில்லை.  படித்துக்கொண்டிருந்தேன்.  முதல் 1 மணி நேரத்தில் 40 பக்கங்கள் படித்தேன்.  பிறகு மூடி வைத்துவிட்டேன்.  12 மணிக்கு சாப்பிட்டபிறகு நன்றாகத் தூங்கிவிட்டேன்.  3 மணிக்கு எழுந்து ஒரு இடத்திற்குப் போனேன்.  திரும்பி வரும்úôது 6.30 மணி ஆகிவிட்டது.  திரும்பவும் நகுலனின் இவர்கள் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

எப்படியாவது முடிக்க வேண்டுமென்று எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கொஞ்சம் தூக்கம் வந்தது.  உண்மையில் தூங்கி வழிந்துகொண்டு படித்தேன்.  புத்தகத்தைப் படித்து முடித்தபின் சரியாக பத்து மணி ஆகிவிட்டது.  இனிமேல் படுத்துத் தூங்கத்தான் வேண்டுமென்று படுத்துக்கொண்டு விட்டேன்.

வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வில்லை.  சரி இனிமேல் புத்தகத்தைப் பற்றி எதாவது சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இந்த நாவல் முழுவதும் எழுத்தாளர்களைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் பேசுகிறார் நவீனன் என்ற பெயரில்.  ஒருவரை ஒருவர் சந்திக்கிற பேசுகிற நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.  நாவலின் பின்னால் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ராமநாதன் என்ற பெயரில் க.நாசுவை ஒரு பாத்திரமாக மாற்றிக்கொண்டு எழுதுகிறார்.  இந்த நாவலில் கேசவ மாதவன் என்ற பெயரில் எந்த எழுத்தாளர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.    நகுலன் இப்படித்தான் எல்லோர் பற்றியும் சொல்லிக்கொண்டு போகிறார்.  

இன்னொரு கதாபாத்திரம் நல்லசிவம் பிள்ளை.  இது மௌனியாக இருக்குமென்று நினைக்கிறேன்.  இப்படி தான் சந்தித்த எழுத்தாளர்களை கதாபாத்திரங்களாக மாற்றி விடுகிறார்.  

'ராமநாதனைப் பார்த்தபின் பரிசுத்த ஆவியாக இருந்த நான் நிழலாக மாறினேன் என்றால் நல்லசிவன் பிள்ளையைப் பார்த்த பின் நிழலாக இருந்தவன் பேயாக மாறினேன் என்று சொல்ல வேண்டும்,'  என்று எழுதியிருக்கிறார்.

நகுலனின் புத்தகங்களை ஒரு முறை இல்லாமல் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அலுப்பாகவே இருக்காது.  இவர் புத்தகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டு விட மாட்டார்கள்.

க நா சு வைப்பற்றி அவர் சொல்கிற விஷயங்கள் வேடிக்கையாகக் கூட இருக்கும்.  

இப்படி எழுதுகிறார் : 'சில சமயங்களில் எனக்குத் தோன்றாமல் இருந்ததில்லை.  இவர் ஆண்-பெண் வேறுபாடையே ஒப்புக் கொள்கிறரோ என்று, அவருக்கு நோட்புக் எழுதும் பழக்கம் உண்டு.  தினம் எதாவது எழுதிக்கொண்டிக்க வேண்டும் என்பார்.'

இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள்.  ü நான் யார் என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.

நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் üநேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை,ýஎன்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்.

பளிச்சென்ற வரிகள் பக்கம் பக்கமாகத் தொடர்கிறது.  

'அந்தப் பெரிய கோவிலில் என்னை முதலில் கவர்ந்தது கட்டற்ற ஒரு வெட்டவெளிதான்.

ராமநாதன் என்ன சொன்னார்?  அனுபவத்தைத் தேடிக்கொண்டு நீ எங்கும் போக வேண்டாம்.  அது உன் முன் இரைந்து கிடக்கிறது,

பெக்கட்டைப் படிக்கிறபோது எழுதுவதற்கு ஒன்றுமில்லை.  ஆனாலும் எழுது, எழுது என்று ஏன் இந்த நச்சரிப்பு.  அவனும் எழுதவில்லையா? பக்கம் பக்கமாக, 'ஒன்றும் இல்லாததை பற்றி.

மரம் நிற்கிறது என்ற தலைப்பைப் பிடித்துக்கொண்டு அப்பாவைப் பற்றி பலவற்றைச் சொல்கிறார்.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார: தன்னைப்போல்தான் அம்மாவும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.  அவனுக்குத் தோன்றியது - "சுயம் - நசித்துக்கொள்வதின்" மூலம் தான் தன் சுயத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று நினைத்துக்கொண்டதாகத் தோன்றியது.  இதற்குச் சூழ்நிலையென்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  இதே அடிப்படையில் தான் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவனுக்கு இந்தச் 'சுயம் - நசித்துக்' கொள்வது என்பது ஒரு மகத்துவமான தத்துவமாகப் பட்டது.  

நகுலன் உண்மையிலே எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.  

Comments