அழகியசிங்கர்
பாரதி காலமும் கருத்தும் என்ற தொ.மு.சி ரகுநாதன் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இன்று பாரதி பிறந்தநாள் என்பதால் இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.
420 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. ஆராய்ச்சி ரீதியாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன். இதைப் படிக்கும்போது இப்போது ஆராய்ச்சி ரீதியாக எழுதி வரும் தமிழறிஞர்களுக்கு தொ.மு.சிதான் முன்னோடியாகத் திகழ்கிறார் என்று தோன்றுகிறது.
நான் 80 பக்கங்கள்தான் இப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். ஒரே மூச்சாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தொ.மு.சி இந்தப் புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார். இந்நூலில் நான் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தீவிரத் தேசியவாதத்தோடு சேர்ந்து வலுப்பெற்று வந்த இந்திய நாட்டுப் புரட்சி இயக்கத்தில் பாரதிக்கு ஈடுபாடும் தொடர்பும் இருந்ததா என்ற கேள்விக்கே விடைகாண முற்பட்டிருக்கிறேன்.ý
இதை 1905 முதல் 1911 அரசியல் கட்டத்தில் பாரதியின் அரசியல் மற்றும் இலக்கிய வாழ்வை மட்டுமே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
1. தேச பக்தியின் வித்து என்ற தலைப்பில் முதலில் பாரதிக்கு எப்போது தேசபக்தி வித்து ஏற்பட்டது என்பதை விவரித்துக் கூறுகிறார்.
ஸ்வேதச கீதங்கள் என்ற முதல் கவிதைத் தொகுதியை 1908ல் வெளியிடுகிறார். அந்த நூலில் ஸமர்ப்பணம் என்ற தலைப்பில் பாரதி மறைமுகமாக விவேகானந்தருடைய தர்மபுத்திரி ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாவிற்கு ஸமர்ப்பிக்கிறார். அடுத்து பாரதியின் இரண்டாவது கவிதைத் தொகுதியான üஜென்ம பூமிý (ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம்)யை நேரிடையாக நிவேதிதாவிற்கு சமர்ப்பிக்கிறார்.
இதனை அடுத்து 1910 பிப்பரவரி மாதத்தில் பாரதி புதுச்சேரியிலிருந்து தனது üஞானரதம்ý என்ற வசன நூலின் முதற்பதிப்பை வெளியிட்டபோதும் அதன் முதற்பக்கத்தை
ஓம்
ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு
ஸமர்ப்பணம் செய்யப்பட்டது
என்று சமர்ப்பணக் கூற்றுக்கு மட்டுமே முழுமையாக ஒதுக்கியிருக்கிறார்.
இதிலிருந்து 1908, 1909, 1910 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வெளியிட்ட தனது முதல் நான்கு நூல்களுக்கு நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். நிவேதிதா தேவியின் மீது பாரதிக்கு உள்ள தனிப்பெரும் பக்தி நமக்குப் புலனாகிறது.
பாரதி எப்போது சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார் என்ற தர்க்கத்தை தொ மு சி அழகாக முன் வைக்கிறார்.
1905ல் காசியில் நடைபெற்ற காங்கிரசுக்குப் பாரதி சென்றதாகவும் அப்போது திரும்பும்போது டம்டம் என்னும் ஊரிலிருந்த சகோதரி நிவேதிதா தேவியாரைச் சந்தித்ததாகவும் அந்த அம்மாவின் உபதேசத்தில் உள்ளம் லயித்து விடுவதாகவும், அதன் பின் தமது குருவாகவும் ஏற்றுக் கொண்டு விடுவதாகவும் தொ.மு.சி குறிப்பிடுகிறார்.
எனினும், சுதேச பத்தியையே நிவேதிதா தேவிதான் பாரதிக்கு ஊட்டினாரா? அவரது உபதேசத்தினால்தான் பாரதி தேச பக்தனாக மாறினாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் தொ.முசி.
நிவேதிதா தேவியைச் சந்திப்பதற்கு முன்பே பாரதி தேசியப் பாடல்களை எழுதத் தொடங்கிவிட்டான் என்ற முடிவுக்கும் வருகிறார்.
பாரதியின் தேசபக்தி கடன் வாங்கிய சரக்கல்ல. அது அவருடைய சொந்தச் சொத்து என்று பாரதியின் நண்பர் துரைசாமி அய்யர் கூறியதாக வ ரா குறிப்பிடுகிறார்.
சொல்லப்போனால் அவருடைய சொந்த வாழ்க்கையே தேச பக்தியை உண்டாக்கியது என்கிறார் தொமுசி.
இதற்கு நாம் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரின் வாழ்க்கையையும் பாரதியின் இளமைக் காலத்தையும் கூர்ந்து நோக்கவேண்டும் என்கிறார். 1880ல் வாக்கில் சின்னச்சாமி எட்டயபுரத்தில் ஒரு பஞ்சாலையை நிறுவினார். அது தென்னிந்தியாவில் மிகவும் முதன்மையான அலைகளில் ஒன்றாக இருந்தது.
சின்னச்சாமி அய்யரின் தொழில் முயற்சி தோல்வியடைந்தது. அவர் தொடங்கிய ஆலை அவரது பணத்தையெல்லாம் தின்று தீர்த்தது. அதனால் அவர் மனமிடித்து இறந்தார். இதை பாரதியார் தம் சுயசரிதத்தில் மிக உருக்கமாகக் கூறியிருக்கிறார்.
ஊணர் செய்த சதியால் தன் தந்தை செல்வம் யாவும் இழந்தனன் என்று பாரதி வெதும்பிப் பாடியிருக்கிறார். பாரதிக்கு அவர் தந்தை (1897 ஜøன்) திருமணம் நடத்தி முடித்து விடுகிறார். தந்தை இறந்தபோது பாரதிக்கு வயது பதினாறு முடியவில்லை.
இந்தக் காரணத்தை முன்னிட்டு தேசபக்திக்கான அடிப்படை அவனது பதினான்காவது வயதிலேயே அவரது இதயத்தில் பதிந்து விட்டது என்கிறார் தொ.மு.சி.
புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை முதல் பத்திரிகை என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார்.
சுதேசமித்திரனில் இருந்த பாரதி அதே காரியாலயத்திலிருந்து வெளிவந்த üசக்ரவர்த்தினிý என்ற மாதப் பத்திரிûயின் பொறுப்பாசிரியாராகவும் இருந்தார். ஆனாலும் இதிலும் சரி மித்திரனிலும் சரி அவர் தம்முடைய மனம்போல் தமது தீவிரமான கருத்துக்களைக் கொட்டித் தீர்க்க இடமிருக்கவில்லை என்று பாரதி நடத்திய பத்திரிகைகள் என்ற தலைப்பில் ரா அ பத்மநாபன் எழுதியிருக்கிறார்.
பாரதி 1906 ஏப்ரல் மாதத்தோடு சுதேசமித்திரனில் தான் வகித்துவந்த உதவியாசிரியர் பதவியை உதறித் தள்ளிவிட்டு 1906 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சுதேசமித்திரனில் பணியாற்றியது சரியாக ஒன்றரை வருடம். அதேபோல் சக்ரவர்த்தினி பத்திரிகையிலிருந்தும் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகி விடுகிறார்.
இந்தப் புத்தகம் படிக்க படிக்க விறுவிறு என்றிருக்கிறது. பல அரிய தகவல்களை தொமுசி எடுத்து வைக்கிறார். ஒருவர் இப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் கீழேயே வைக்கத் தோன்றாது. நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. 80 பக்கங்கள் படித்திருக்கிறேன்.
Comments