Skip to main content

ஐந்தாம் நாளின் வாசிப்பனுபவம்..(06.09.2019)

அழகியசிங்கர்




வாசிப்போம் வாசிப்போம் என்ற பகுதியில் சேர்ந்தபோது நான் இதுவரை ஐந்து புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன்.  இன்னும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கப் படிக்க படித்துக்கொண்டிருக்கும் பழக்கம் ஏற்பட்டு விடும்.  இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
1 மணி நேரம் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க வேண்டும்.  அப்படி ஆரம்பித்தால் பல புத்தகங்களைப் படிக்கலாம். சிலருக்கு நேரம் இருக்காது.  அது மாதிரி சமயங்களில் நேரம் கிடைக்கும்போது பிட்டு பிட்டாகப் படிக்கலாம்.
பிறகு படித்துவிட்டு எதாவது எழுதலாம்.  எழுதத் தோன்றவில்லை என்றால் படித்துவிட்டேன் என்று குறிப்பிடலாம்.  எழுதுவோர்க்கு எந்தவிதமான தடையும் இல்லை.  ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு மோசமாக எழுதலாம்.  அல்லது அந்தப் புத்தகத்தைப் புகழ்ந்து எழுதலாம்.  ஒரு புத்தகத்தில் பாதி படித்திருந்தால் எதுவரை படித்துள்ளீர்களோ அதுவரை எழுதலாம்.  எல்லாம் உங்கள் விருப்பம்.
வழக்கம்போல் நேற்று படித்ததை இன்று எழுதும் பழக்கத்தை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்.  நேற்று நான் படித்தது.  மூன்று சிறுகதைகள்.  அதில் ஒரு நீண்ட கதை.  எல்லாமே புதுமைப்பித்தன எழுதியது.
ஏன் திடீரென்று புதுமைப்பித்தனை எடுத்துக்கொண்டு படித்தேன் என்பதற்கு வருகிறேன்.  வெளி ரங்கராஜன் அவர்களின்  புத்தகத்தில் புதுமைப்பித்தன் கதைகள் நீக்கம் என்ற ஒரு அத்தியாயம் இருக்கிறது.  அதில் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்திலிருந்து துன்பக்கேணி, பொன்னகரம் என்ற இரண்டு கதைகளை நீக்கி விட்டு ஒருநாள் கழிந்தது என்ற கதை அதற்குப் பதிலாக சேர்த்துக்ளாளர்கள் என்று ரங்கராஜன் குறிப்பிட்டிருந்தார்.
ஏன் அதுமாதிரி செய்தார்கள் என்று எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.  இதற்கு விடை அக் கதைகளைப் படிப்பதுதான்.  அக் கதைகளைப் படிக்கும்போது அவர்கள் செய்தது நியாயமாகப் பட்டது. 
நாம் வாசிக்கும்போது ஆழமான மனப்பதிவை ஏற்படுத்திக் கொண்டு விடுவோம்.  மேலே குறிப்பிடப்பட்ட கதைகள் மாணவர்கள் படிப்பதை பல்கலைக் கழகம் விரும்பவில்லை.  பொன்னகரமாகட்டும் துன்பக்கேணி ஆகட்டும் கதைகளின் தன்மை அப்படி.  மாணவர்களின் மனதை டிஸ்டர்ப் செய்கிற தன்மை அக் கதைகளில் இருக்கிறது.  இப்படி டிஸ்டர்ப் செய்கிற விஷயம் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உண்மையில் ஒருவர் கேட்கலாம் நம் அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து பலரை டிஸ்டர்ப் பண்ணாதா என்று. 
உண்மைதான் அறிமுகப்படுத்தும்போது இம்மாதிரியான கதைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது சரியில்லை என்று பல்கலைக் கழகம் நினைத்திருக்கலாம். 
பொன்னகரம் என்ற கதையை எடுத்துக்கொள்ளுவோம்.  என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே .  இதுதான் ஐயா, பொன்னகரம்.  என்று முடியும்.  எப்படி இதுமாதரியான கதையை பல்கலைக் கழகம் ஏற்றுக்கொள்ளும். 
இரண்டாவது நீண்ட கதை துன்பக்கேணி.  சேரி மக்களைப் பற்றிய கதை.   தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய கதை.  அவர்களுக்கு ஏற்படும் பாலியல் பலாத்காரம். இதெல்லாம் சமூகத்தில் நடப்பதில்லையா என்று கேட்கலாம்.  நடக்காமில்லை.  இதைவிட மோசமாகக் கூட நடக்கிறது.  படிக்கிற மாணவ சமுதாயத்திற்கு இதெல்லாம் போக வேண்டுமா?  
அதற்குப் பதில் ஒருநாள் கழிந்தது என்ற கதை அட்டகாசமான கதை.  சர்வசாதாரணமாக நகைச்சுவை உணர்வுடன் கூடிவந்த கதை.  புதுமைப்பித்தன் காலத்தில் வறுமை ஒரு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  இந்த மூன்று கதைகளிலும் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்படுகின்றன.  பொதுவாக எல்லாக் கதைகளிலும் புதுமைப்பித்தனின் நையாண்டித் தனம் தெரியாமல் இல்லை.  சமூகத்தின் மீது கோபம் வெளிப்படுத்தும்போது கூட நக்கலாக வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
சில உதாரணம் :
....வாசவன் பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லா வாசிகளுக்குக் கூடத் தெரியாது.  ஜில்லாப் படத்தைத் துருவித் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது.. (துன்பக் கேணி)
.....சில சில சமயம் முதிர்ந்த விபசாரியின் பேச்சுகளுடன் களங்கமற்ற அவள் உள்ளமும் வெளிப்பட்டது..(துன்பக்கேணி)
.....சென்னையில் ஒட்டுக் குடித்தனம் என்பது ஒரு ரசமான விஷயம்.  வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் üதிருக்கழுக்குன்றத்துக் கழுகுý என்று நினைத்துக்கொள்ளுவானோ என்னமோ....(ஒரு நாள் கழிந்தது)
இன்னும் புதுமைப்பித்தன் கதையைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
இதுவரை இந்தக் குழுவில் சேராதவர் இப்போது கூட இந்த வாசிக்க வாசிக்கக் குழுவில் சேர்ந்து ஒவ்வொரு நாளும் படிக்கும் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடலாம்.

Comments