Skip to main content

ஆறாம் நாளின் வாசிப்பனுபவம்..(07.09.2019)




அழகியசிங்கர்





வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது.  என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி கொஞ்சமாவது எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
முந்தாநாள் படித்த ஒருநாள் கழிந்தது என்ற புதுமைப்பித்தன் கதையை இன்னும் ஒருமுறை படிக்க வேண்டுமென்று தோன்றியது.  ஆனால் நேரமில்லை.  அடுத்த புத்தகத்திற்குப் போக வேண்டும்.  என்னால் ஒரு மணி நேரத்திற்கு மிகக் குறைவான பக்கங்கள்தான் படிக்க முடிகிறது.  அதாவது 40லிருந்து 50 பக்கங்கள் வரைதான் படிக்க முடிகிறது.  100 பக்க நாவல் படிப்பதாக இருந்தால் இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடுகிறது.  ஆங்கிலப் புத்தகமென்றால் இன்னும் மோசம்.  
நாவல் என்னால் உடனே படித்து எழுத முடியாது.  ஒரு நாவல் 100 பக்கங்கள் இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும். நான் ஒரு நாளைக்குப் புத்தகமே படித்துக்கொண்டிருந்தால் வீட்டிலிருப்பவர்கள் உதைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  நான் நிதானித்துதான் புத்தகம் படிக்க வேண்டும்.  வீட்டில் உள்ளவர்களின் கட்டளையை மீறாமல் படிக்க வேண்டும்.  படித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டில் உள்ளவர்கள் காப்பிப் பொடி இல்லை வாங்கிக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் அதை முதலில் முடித்துவிட்டுத்தான் திரும்பவும் படிக்க வேண்டும்.
அதனால் நான் நாவல் படிப்பதை விட ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு படிக்கலாம். நாவல் என்றால் முழுதாகப் படிக்க வேண்டும்.  அதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகதைத் தொகுப்போ கட்டுரைத் தொகுப்போ என்றால் படித்தவரை எதாவது எழுதிப் பார்க்கலாம்.  இன்னும் படிக்கப் படிக்க இன்னும் எழுதலாம்.  ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் படித்து முடித்து விடலாம்.
இந்த முறை நான் படிக்க எடுத்துக்கொண்டது ஒரு கவிதைத் தொகுப்பு.  என் கண் முன்னால் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டிருந்து எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்று விழித்துக்கொண்டிருந்தேன்.  இந்த ஒரு மணி நேரம் தினமும் படிக்கிற ஸ்கீம் சரியாக இருந்தது.  மர்ம நபர் என்ற தேவதச்சன் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
இந்தப் புத்தகத்தை அற்புதமான முறையில் உயிர்மை தயாரித்து இருக்கிறது.  350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  தேவதச்சன் அவர் கவிதைகளைக் குறித்து ஒன்றும் எழுதவில்லை.  ஒவ்வொரு கவிதையும் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்ற குறிப்பு கூட இல்லை.  
ஒவ்வொரு கவிதையையும் படிக்கும்போது இந்தப் புத்தகம் முடிந்து விடக் கூடாது என்று தோன்றியது.  இப்படியொரு மயக்கம் எனக்கு எந்தக் கவிதைத் தொகுப்பு படிக்கும்போதும் உண்டாகவில்லை.  நான் 52 கவிதைகள் மட்டும்தான் படித்துள்ளேன்.  அதாவது கிட்டத்தட்ட 72 பக்கங்கள்.  
நேற்று நாமக்கல் கவிஞர் கவிதையை எடுக்கும்போது ரொம்பவும் முயற்சி செய்து அவர் கவிதை என் மனதிற்குப் பிடித்த கவிதைகள் தொகுப்பில் இடம் பெற வேண்டுமென்று சேர்த்தேன்.  அவருடைய எல்லாக் கவிதைகளும் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தன.  பாரதி, காந்தி, காமராஜ், நேரு, தமிழ் என்ற தலைப்புகளில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.  
ஆனால் தேவதச்சன் கவிதையை எடுத்துக்கொண்டால் என்ன இப்படி எழுதியிருக்கிறார் என்ற வியப்பே ஏற்பட்டது.  ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  யார் கவிதை எழுத முயற்சி செய்தாலும் ஒரு முறை தேவதச்சன் கவிதையை வாசிக்க வேண்டும்  ஒவ்வொரு கவிதையிலும் அளவுக்கு அதிகமான வரிகள் இல்லை.  கவிதையை எந்த இடத்தில் முடிக்க வேண்டுமென்ற இடத்தில் முடித்திருக்கிறார்.
இவர் கவிதைகளை மனதிலிருந்து எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.   நான் 52கவிதைகளைப் படித்தாலும் திரும்பவும் ஒரு முறை முதலிலிருந்து படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நான் படித்தவரை 52 கவிதைகளிலிருந்து எந்தக் கவிதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொண்டு பேசலாம்.  ஆனால் சிரிப்பு என்ற ஒரு கவிதையை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

       சிரிப்பு

கண்ணாடி டம்ளர்
கீழே விழுந்து 
உடைந்தது
"கண்ணாடி கண்ணாடி" என்று 
கத்தவில்லை அது
"டம்ளர் டம்ளர்" என்று 
குரல் உயர்த்தவில்லை
சிறு இடத்தில் சந்தி
ஓடிய பழுப்பு நிறத் தேநீர்
"தேநீர் தேநீர்" என்று 
அரற்றவில்லை
கிளங்
என்று 
கேட்கிறது
அசரீரிச் சிர்பொன்று, பிறகு
இரண்டாவது முறை அது
கேட்கவில்லை

இந்த ஒரு கவிதையிலேயே எல்லாமும் அடங்கி இருக்கிறது. கச்சிதமாக எழுதுகிறார், புரியும்படியாக எழுதுகிறார்.  வாசிப்பவனை வித்தியாசமாக யோஜனை பண்ண வைக்கிறார்.  இதுதான் தேவதச்சன்.

 

Comments