Skip to main content

பத்தாம் நாளின் வாசிப்பனுபவம் (11.09.2019)





அழகியசிங்கர்





522 பக்கங்கள் கொண்ட திரௌபதியின் கதையைப் படித்துக்கொண்டு வருகிறேன். ஒரிய மொழியில் பிரதிபாராய் எழுதி ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா மொழி பெயர்த்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் இரா பாலச்சந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார்.
அவ்வளவு சுலபமாய் இந்த நாவலைப் படித்து விட முடியாது.  எவ்வளவு நாட்கள் ஆகுமென்று தெரியாது. இதைத் தவிர குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  தினமும் எதாவது எழுத நினைக்கிறேன்.  
மற்றவர்களும் இந்தப் பகுதியில் தங்களுக்குத் தோன்றுவதை எழுதலாம்.  நான் இருக்கும் குடியிருப்பில் நான் மட்டும்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.  எங்கள் அடுக்கத்தில் 6 குடும்பங்கள் இருக்கின்றன.  20 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.  யாரும் புத்தகம் என்ற ஒன்றைத் தொடுவதில்லை.  அதுவும் தமிழ்ப் புத்தகம் என்றால் காத தூரம் ஓடுவார்கள்.
அதேபோல் புத்தகம் என்று எதை எடுத்துப் படிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.  புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.  நான் படித்துக்கொண்டு போவதைப் பார்த்து பேத்தி கேட்கிறாள்.   üüஎன்ன தாத்தா நீ படித்துக்கொண்டே இருப்பியா?ýý என்று.  எனக்கு திகைப்பாக இருக்கிறது.  உண்மையில் நான் படிக்கிறது படிப்பே இல்லை.  பெரும்பாலான நேரத்தை நான் வீணடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  பேத்தியின் கேள்வி என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
நான் 11ஆம் தேதிக்கு ஓஷோவின் ஞானக் கதைகள் எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  128 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.
34 கதைகள் கொண்ட ஞானக்கதைகள் இவை.  ஒவ்வொரு கதையில் கடைசியில் ஓஷோவின் குறிப்புகள் வருகின்றன.  புத்தரைப் பற்றியும் பல அறிஞர்களின் கதைகளைப் படிக்கும்போது பரவசமான உணர்வு ஏற்படுகிறது.  எல்லாக் கதைகளும் அரைப்பக்கம், கால்பக்கம், முக்கால் பக்கம்தான் ஆனால் அதன் முலம் தெரிய வருகிற நீதி நம்மை யோசிக்க வைக்கிறது.
34வது கதையைச் (கடைசிக்கதை) சற்று பார்ப்போம்.  இரண்டு சிறுவர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.  
"இது தங்களுடைய அப்பாவிற்கு தெரியவந்தால் உதைப்பார்களே?" என்கிறான் ஒரு பையன்.
"அதனாலென்ன அவர்களைத் திருப்பி அடித்தால் போயிற்று," என்கிறான் இன்னொருவன்.
அதற்கு முதல் பையன் குறிப்பிடுகிறான்.  "நாம் அவ்வாறு செய்ய முடியாது.  ஏனெனில் தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டுமென்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?" என்கிறான்.
இங்கு கதையில் ஒரு டுவிஸ்ட்.  "சரி அப்படியானால் ஒன்று செய்வோம்.  நீ என்னுடைய அப்பாவை அடி.  நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்."
இந்த டுவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை.  இதற்கு ஓஷோ என்ன குறிப்பிடுகிறாரென்றால், "கள்ளம் கபடமற்ற தன்மை என்பது புரியாத புதிர் போன்றது.  அது வாழ்க்கையின் ரகசியங்களின் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது," என்கிறார்.
இதுமாதிரி இப்புத்தகத்தில் 34 கதைகள் இருக்கின்றன.  திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய புத்தகமாகத்தான் எனக்குப் படுகிறது. 

Comments