Skip to main content

பதின்மூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (14.09.2019)


அழகியசிங்கர்




இந்த முறை சிறுகதைத் தொகுப்பு. கார்த்திக் பாலசுப்ரமணியன் என்ற இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு.  தொகுப்பின் பெயர்  டொரினா.
சி சு செல்லப்பா ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் சிறுகதைகளைக் குறிப்பிட்டு (முன் கதைச் சுருக்கம் மாதிரி) கதைகளைப் பற்றியும் எதாவது சொல்லியிருப்பார்.
ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு புத்தகத்திலேயே கதையின் முடிவில் குறிப்புகள் எழுதி உள்ளேன். 
போன ஆண்டு மார்ச்சு மாதம் இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன்.  ஒரு வருடத்தில் எல்லாம் மறந்து விட்டது.  திரும்பவும் படித்தபின்தான் ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. 
முடிந்தவரை சிசு செல்லப்பா பாணியில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.
இரு கோப்பைகள் என்ற முதல் கதை.  வயதானவர்கள் பற்றிய கதை.  இப்படியெல்லாம் சம்பவம் எதிர்பாராமல் நடக்கும். நடக்கிறது. மார்க்கும், சோஃபியாவும் வயதான கணவன் மனைவி.  இருவரும் பக்கத்தில் உள்ள குடியிருப்பில் இருக்கிறார்கள்.  நடைப்பயிற்சி செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி விடுகிறார்கள்.  சோஃபியா கொஞ்சம் களைப்பாக இருக்கிறதென்று படுத்துக்கொள்கிறார்.  திரும்பவும் எழுந்து கொள்ளவில்லை.  
நான் எழுதிய குறிப்பு : கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை இக் கதை தவிர்த்து விடுகிறது. முதியவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சோக சம்பவங்களை அப்பட்டமாகச் சொல்லாமல் சொல்கிறார்.  கதையின் முடிவு இயல்பாக உள்ளது. ஆனால் இன்னொரு கோப்பை ஏன்?

2. முடிச்சுகள்.. குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கிளம்புகிறான்.  அவன் ஒரு வேலையில் சேர்வதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சியைத் துவங்குகிறான்.  அப்படி ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி பேராசிரியர் ஜோஷி ஆணையிடுகிறார். அப்பாவை வழித் தாத்தாவைப் பற்றி விபரம் சேகரிக்கப் போகிறான்.  அப்பாவின் அப்பா - தாத்தா -  ஒரு காரணமும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போய்விடுகிறார்.  அவரைப் பற்றிப் பல தகவல்களைச் சேகரிக்கிறான்.  இறுதியில் சோழிச் சித்தரைப் பார்க்கிறான்..
கதை முடிவில்தான் புதிர் அவிழ்கிறது.  சோழிச் சித்தராக அவர் தாத்தா மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.  படிப்பவர்கள் முடிவை யோசிக்க முடியாத கதை.

3. பார்வை - பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு நானூறு கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தன் பெண்ணைப் பற்றி கவலை ஏற்படுகிறது.  அம்மா பார்த்துக் கொள்கிறாள். இருந்தாலும் குழந்தைக்கு சுரம். உடனே போய்ப் பார்க்க முடியாத அவஸ்தை.  வேலை கெடுபிடி. இப்படி ஆரம்பிக்கிறது கதை. உதவி இயக்குநராக இருக்கும் தன் கணவனின் கனவை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்.   கொஞ்சம் சீக்கிரமாக வீட்டிற்குப் போக வேண்டுமென்று பேருந்தில் வருகிறாள்.  500 ரூபாய் நோட்டிற்கு சில்லரைத் தர முடியவில்லை நடத்தினரால்.  ஏதோதோ பேசுகிறான்.  அதைக் கேட்கப் பிடிக்காமல் வேற வழியில்லாமல் துக்கத்தைத் தாங்க முடியாமல்  பஸ்ஸில் எல்லோர் முன்னும் அழுகிறாள்.  அழுகை ஒரு வடிகால் என்பதுபோல் எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்டு போன விதம் நன்றாக உள்ளது. 
.இத் தொகுப்பில் உள்ள இன்னும் சில கதைகளைப் பற்றி நாளை எழுதுகிறேன்.   


Comments