Skip to main content

உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி கவிதைகள்


அழகியசிங்கர்


ஒன்று




கட்டிலில் கிடந்த புத்தகங்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருந்தன
'எப்போது எங்களைத் தொடப் போகிறாய்\
என்றன ஒவ்வொன்றும் முறைப்பாக.
நாற்காலியில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த
நான், 'இருங்கள் சற்று நேரம் சும்மா, யோசிக்கிறேன்,'
என்றேன்.  'போதும் நீ யோசித்தது...அல்லயன்ஸ்
போட்ட குபரா புத்தகத்தையே இப்போதுதான் தொடுகிறாய்.'
'உனக்குத் தெரியுமா? சிறிது வெளிச்சம் என்ற வாசகர்
வட்டம் நூலை எப்போதோ படித்துவிட்டேன்,'
'இருக்கட்டும்..இன்று உலகப் புத்தகத் தினம்..
உன்னைச் சுற்றிலும் அமைதி இழந்த உலகம்..
எங்களிடம் வந்தால் நாங்கள் அளிப்போம்
ஆறுதல் உனக்கு..'

இரண்டு

பக்கத்து வீட்டு மல்லிகாவிடம்
காட்டினேன் என் முழுச் சிறுகதைத் தொகுதியை
ஒன்றும் சொல்லாமல் முகத்தைச் சுழித்தாள்
எதிர் வீட்டு ராமனிடம் நீட்டினேன்
'நான் இந்தத் தெருவில் நடக்க வேண்டாமா?'
என்றார் எக்காளமாய்
கோடி வீட்டு கோவிந்தனிடம் சொன்னேன்
'இன்னும் கதை எழுதுவதை நிறுத்தவில்லையாய்,'
என்றான் படுபாவி

மூன்று

அந்தத் தெருவில் உள்ள
லைப்ரரி முன்னால்
புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்
சிலுசிலுவென்று காற்று வந்தது.
வெயில் சுளீரென்று அடித்தது
கோடான கோடி ஜனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள்
புத்தகங்கள் என்னைப் பார்த்தன
நான் புத்தகங்களைப் பார்த்தேன்
ஏனோ தெரியவில்லை கொட்டாவி விட்டேன்

நான்கு

ஐயா, வணக்கம்.
எதிர்வீட்டில் குடியிருந்த அலுவலக நண்பரை அழைத்தேன்
என்ன?
உலகப் புத்தகக் காட்சி.  உங்கள் வீட்டு எதிரில்
சரி சரி
வரவேண்டும் ஒரு முறை
சரி சரி
வாங்க வேண்டாம் புத்தகம்.  என்னைப் பார்த்தால் போதும்
சரி சரி









Comments