அழகியசிங்கர்
üநீங்களும் படிக்கலாம்,ý என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகம் கொண்டு வந்தேன். 21 புத்தகங்களைப் படித்து என் மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் படித்திருந்தேன். இந்தப் புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தேன். இதைப் படித்து அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. 'ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு என்ன எழுதுவது என்பது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. சிலசமயம் என்ன எழுதுவது என்றுகூடத் தோன்றாது. நீங்கள் சுலபமாக எழுதி விடுகிறீர்கள்,' என்று அவர் குறிப்பிட்டார். உண்மையில் என்னாலும் சுலபமாக எழுத முடிவதில்லை. ஒருசில புத்தகங்களைப் பலமுறை படித்தப்பிறகுதான் எழுதுவது குறித்து தெளிவு ஏற்படுகிறது.
அதுமாதிரி சவாலான புத்தகம் முபீன் சாதிகாவின் üஉளம் எனும் குமிழிý என்ற தொகுப்பு. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. இப் புத்தகம் படித்தபிறகும் என்ன எழுதுவது என்ற குழப்பம் எனக்கு இருக்கத்தான் செய்தது. புத்தக அறிமுக நிகழ்வில், அமிர்தம் சூர்யாவும், சண்முக விமல்குமாரும் என்ன சொல்ல போகிறார்கள் என்று யோசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அமிர்தம் சூர்யா ஒரு நண்டை ரசித்துச் சாப்பிடுவதுபோல் முபீன் கவிதைகளைப் படித்து உணரலாம் என்று குறிப்பிட்டது எனக்கு வேடிக்கையாகப் பட்டது. விமல்குமார் கட்டுரையாக வாசித்ததால் சரியாக கவனிக்க முடியவில்லை.
முபீன் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசும்போது மனதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நோக்கமின்றி தன்னிச்சையாக எழுதப்பட்ட கவிதைகள் என்கிறார். பொதுவாகக் கவிதைகள் எந்த நோக்கமுமின்றிதான் எழுதப்படுகின்றன. ஆனால் ஒருசிலர் மனதிலேயே ஒரு கவிதையை உருவாக்கி அதைக் கவிதையாக மாற்றுகிறார்கள். ஒரு சிலரிடம் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போது எதாவது நோக்கம் ஏற்பட்டு விடும். நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கின பிறகு எப்படி கவிதை ஒவ்வொருவருக்கும் உருவாகிறது என்பது குறித்து யோசித்துக்கொண்டே இருந்தேன். எனக்கும் கவிதை ஒரு புரிபடாத ஒன்றாகத் தோன்றுகிறது.
பொருளும் பொருளற்ற நிலையும் கவிதைக்குரிய அம்சங்களாகத் தோன்றுகிறது என்கிறார் முபீன். யாராவது இவரது கவிதைகளை அர்த்தப்படுத்திச் சொன்னால், அதை நிராகரித்தும் விடுகிறார். 'நீங்கள் சொல்கிற அர்த்தம் எனக்குச் சம்பந்தமில்லை,' என்கிறார்.
இவருடைய கவிதைத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதைக்கும் தலைப்பு இருக்கிறது. மொத்தம் 105 கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார்.
நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவனின் வீட்டிற்குச் செல்வேன். நண்பனின் தாயார் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களை என்னிடம் காட்டுவார். அவர் முறையாகத் தமிழ் படித்தவர் இல்லை. "எப்படி இது மாதிரியான பாடல்கள் சாத்தியம்?" என்று அப்போது கேட்டிருக்கிறேன். "மனதில் முருகன் அருளால் உருவாகிறது," என்று சொன்னதாக ஞாபகம். உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு ஊரில் இருக்கும் முருகன் கோயிலைப் பற்றியும், முருகனைப் பற்றியும் பாடல்கள் எழுதியிருந்தார். அவர் அந்தக் கோயிலிக்கே போகாமல் இதையெல்லாம் மனதிலிருந்து எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். என்னால் உண்மையில் நம்ப முடியாமல் இருந்தது. முபீனும் அப்படித்தான் நம்ப முடியாமல் கவிதை எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது.
பக்கம் 45ல் உள்ள 'வேள்விக்களம்' என்ற கவிதையைப் பார்ப்போம். அதில் கடைசிப் பாராவை பார்ப்போம்.
பிண்டமாய் பொதியும் சக்கை
அண்டத்தில் வதியும் சங்கை
கண்டத்தில் பதியும் திக்கை
தண்டத்தில் சதையும் ஆக்கை.
இக் கவிதை வரிகளைப் படிக்கும்போது கவிதைக்கும் இறை உணர்வுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கவிதை எழுதுபவருக்கே புரிந்துகொள்ள முடியாத ஆச்சரிய உணர்வை கவிதை உண்டாக்கியிருக்கும். முபீன் கவிதைகளைப் படிக்கும்போது திருமூலர், குன்னக்குடி மஸ்தான் சாகீப் அவர் உருவில் வந்து கவிதை எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது.
உளம் எனும் குமிழி - கவிதைகள் - முபீன் சாதிகா - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011 - அலைபேசி : 9444640986 - மொத்தப் பக்கங்கள் : 176 - விலை : ரூ.150
Comments