Skip to main content

இரண்டு வித்தியாசமான கவிதைத் தொகுப்புகள் - 1


அழகியசிங்கர்




நேற்று (07.04.2018) எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில்  இரண்டு கவிதைத் தொகுதிகளின் அறிமுக நிகழ்வு.  ஒன்று எஸ் சண்முகம் அவர்களின் 'ஈர்ப்பின் பெருமலர்' என்ற கவிதைத் தொகுப்பு.  இன்னொன்று கவிஞர் முபின் சாதிகா எழுதிய 'உளம் எனும் குமிழி' என்ற தொகுப்பு.
இந்த இரண்டு தொகுதிகளையும் வாசிக்கிறவர்களுக்கு ஒரு ஒற்றுமை இந்தத் தொகுதிகள் மூலம் தெரியவரும். அதாவது கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாசகர்கள் கவிதைத் தொகுதியைப் புரியவில்லை என்று சொல்லலாமா கூடாதா என்ற கேள்விதான்.
அப்படி ஒரு வாதத்தின் அடிப்படையில் இத் தொகுதிகளை அணுகக் கூடாது என்ற நிபந்தனை முன்வைத்துத்தான் இத தொகுதிகளைப் படிக்க வேண்டும்.   சண்முகம் கவிதைகளை நான் 'பொம்மை அறை' என்ற தொகுப்பின் மூலம் அறிவேன்.  அப்போது அத் தொகுதியைப் படித்தபோது அது குறித்து எதாவது விமர்சனம் எழுத வேண்டுமென்று எழுதினேன். ஆனால் அவர் கவிதைகளை முழுவதும் புரிந்துகொண்டுதான் எழுதினேனா என்பது தெரியவில்லை.  ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் எழுதியதாக ஞாபகத்திற்கு வருகிறது  அத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு கவிதையில் தென்படும் வரி இன்னொரு வரியுடன் தொடர்பை ஏற்படுத்தவில்லை என்று எழுதினேன் என்று நினைக்கிறேன்.   ஒருவிதத்தில் கவிதை புரியவில்லை என்று சொல்வது, கவிஞனைப் பலமானவனாகவும், வாசிப்பவனை பலவீனமாகக் காட்டக்கூடியதா என்று தோன்றும்.   பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி அந்தக் காலத்தில் என் நண்பர்கள், அவர் கவிதைகள் புரியவில்லை என்று சொல்லிவிடாதீர்கள் என்று கூறுவார்கள்.  
சண்முகம் கவிதைகள் அப்படி இல்லை.  ஒரு கணக்கு மாதிரி ஒரு வாய்ப்பாடு மாதிரி ஒருவிதப் புதிர்தன்மை கொண்டகவிதைகளாக அவர் எழுதியிருப்பாரோ என்று எனக்குத் தோன்றுகிறது அதனால் ஒரு முறைக்கு இரு முறைகள் படிக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.  கவிதையின் முடிச்சு தானாகவே அவிழ்ந்து விடுவது மாதிரியாகவும் தென்படுகிறது.   
இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் தனித்தனியாக இருக்கின்றன.  எந்தக் கவிதைக்கும் தலைப்பு இல்லை.  ஒரு கவிதைக்கும் இன்னொரு கவிதைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா அல்லது தொடர்பு இல்லாத நிலையில் இருக்கிறதா என்பதை அறிய முடியவில்லை.  மேலும் ஒரு கவிதையை வாசிக்கும்போது கவிதையில் ஒரு ஓட்டம் இருக்கிறது.  தொடர்பற்ற வரிகள் இல்லை. முன்பு அவர் எழுதிய 'பொம்மை அறை' கவிதைகளில் தொடர்பற்ற வரிகள் இருப்பதுபோல் தோன்றும். இப் புத்தகத்தில் உள்ள பல கவிதைகளைப் படிக்கும்போது அது மாதிரியான சங்கடம் ஏற்படவில்லை.  உதாரணமாக  பக்கம் 58ல் ஒரு கவிதை.
மாடிச்சுவர் மீது ஒற்றைக் கால் ஊன்றி நிற்கும்
முகிலின் கருநிறத்து அண்டங் காக்கை
சிரம்சிலுப்பி மழைத்துளிகளை
உகுத்தபடியே திசைகளை வெறிக்கிறது.

தரிசனமிழந்த முகமொன்றைக் காண
நான் வானில் குவிய
மழையொலி

என் மனதின் சகுனமாய்
அந்த அண்டங் காக்கை.

மிகச் சிறிய கவிதையைத் தந்துள்ளேன்.  இங்கு üதரிசனமிழந்த முகமொன்றைக் காணý என்று ஏன் குறிப்பிடுகிறார்.  இவருடைய பெரும்பான்மையான கவிதைகளில் எதிரில் ஒருவர் இருப்பதுபோலவும் அல்லது இல்லாததுபோலவும் ஒரு தோற்றப் பொலிவை வெளிப்படுத்துகிறார்.  நாம் யாருடனோ பேசத் தயாராகிறோம்.  கவிஞருடனா அல்லது கவிஞர் காட்டும் வேற ஒருவருடனா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.  108 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பில் எத்தனை எண்ணிக்கைக் கொண்ட கவிதைகள் என்ற பட்டியல் இல்லை. எழுதப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை.  மன லயம் கொண்ட இக் கவிதைகளை நாம் மெதுவாகத்தான் படிக்க முடியும்.  இங்கு க நா சுவைப் பற்றியும் பிச்சமூர்த்தி பற்றியும் குறிப்பிட வேண்டி உள்ளது.  க நா சு உரைநடையிலிருந்து கவிதைகள் எழுதியவர்.  இன்று பலர் க நா சுவின் பாணியைப் பின்பற்றுகிறார்கள்.  உரைநடையில்தான் கவிதைகளை உருவாக்குகிறார்கள்.  ஆனால் பிச்சமூர்த்தியோ செய்யுள் வடிவத்தைக் கவிதையில் கொண்டு வருகிறார். 

அதேபோல் சண்முகம் செய்யுள் வடிவத்தில் கவிதைகள்  எழுதி உள்ளார்.  உரைநடையின் தெற்ப்புகள் கவிதைகளில் தென்படவே இல்லை.  உதாரணமாக ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு கவிதையின் வரியை நான் படிக்கிறேன்.  அதாவது 90 பக்கத்திலிருந்து ஒரு கவிதை.  அதில் ஒரு வரி üநான் நடையிடும் வழியெங்கும்ý என்கிறார்.  இப்படி ஒரு வரியை க நா சுவோ கநாசுவைப் பின்பற்றுபவர்களோ எழுதவே மாட்டார்கள். 
சண்முகம் கவிதையைக் குறித்து ஜமாலன்,  முபீன், எம் டி முத்துக்குமாரசுவாமி, வெளி ரங்கராஜன், பரமேஸ்வரி முதலிய பலர் பேசினார்கள்.  முபீன் பல பக்கங்கள் கொண்ட கட்டுரையாகப் படித்தார். பேச்சின் முடிவில் எம்டிஎம் பேசியதை ஒருவர் இன்னொருமுறை கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது.  

(ஈர்ப்பின் பெருமலர் - கவிதைகள் - எஸ் சண்முகம் - பக்கங்கள் : 107 - விலை : ரூ. 120 - வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - தொலைபேசி : 9841450437)




Comments