Skip to main content

நானும் என் கவிதைகளும்....


அழகியசிங்கர்



நவம்பர் 2013ல் நான் கொண்டு வந்த கவிதைப் புத்தகத்தின் பெயர் 'வினோதமான பறவை.'  அந்தப் புத்தகத்திற்கான விமர்சனம் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை.  யாரும் அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  அதற்கு உண்மையான காரணம் கவிதைத் தொகுதிகள் ஏராளமாக ஒவ்வொரு ஆண்டும் புத்தகமாக வந்து கொண்டிருப்பதுதான்.   என் வீட்டின் கீழ்ப் பகுதியில் பத்திரப் படுத்திய  'வினோதமான பறவை'  என்ற என் கவிதைத் தொகுதியை   வெள்ளம் வந்து நாசப்படுத்தி விட்டது.  விற்காமலேயே புத்தகப் பிரதிகள் தண்ணீரில் போய்விட்டது.  
நான் திரும்பவும் இந்தப் புத்தகத்தை நவம்பர் 2016ல் கொண்டு வந்தேன்.  இந்த முறை இன்னும் சில கவிதைகளையும் சேர்த்தேன்.  வெள்ளம் பற்றிய கவிதைகளையும் சேர்த்தேன்.  முன்பு நான் கொண்டு வந்த üஅழகியசிங்கர் கவிதைகள்ý தொகுதியுடன் இந்தத் தொகுதியையும் சேர்த்தால்  300க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருப்பேன்.  எப்படி என் கதைகள் எல்லாவற்றையும் சேர்த்து 664 பக்கங்களுக்குப் புத்தகமாகக் கொண்டு வந்தேனோ அதேபோல் கவிதைகளையும் தொகுக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்.  
இத் தருணத்தில் ஏப்ரல் மாதம் வெளிவந்துள்ள 'பேசும் புதிய சக்தி' என்ற பத்திரிகையில், வினோதமான பறவை புத்தகத்தில் வெளிவந்த கவிதைகளைக் குறித்து கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.  என் கவிதைகளை சரியானபடி புரிந்துகொண்டு எழுதி உள்ளார்.  அவருக்கு என் நன்றி. 

Comments