Skip to main content

மறக்க முடியாத மதுரை


அழகியசிங்கர்





நான் சென்னைவாசி.  பெரும்பாலும் சென்னையை விட்டு எங்கும் போவதில்லை.  ஏன் இந்த மாம்பலத்தை விட்டுக்கூட எங்கும் போக முயற்சி செய்வதில்லை.  ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன்.  உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்றெல்லாம் போவேன்.  எதாவது காரணம் இருக்க வேண்டும்.  அப்படி ஒரு காரணத்தை வைத்துக்கொண்டுதான் மதுரை சென்றோம்.  (மனைவியையும் சேர்த்து).
பாண்டியன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கிளம்பினோம்.  மறுநாள் காலையில் மதுரையை அடையும்போது ரொம்ப தாமதமாகப் போய்ச் சேர்ந்தது.  ரயில்வே நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள காலேஜ் ஹவுஸ் என்ற ஓட்டலில் போய்த் தங்கினோம்.  பின் அவசரம் அவசரமாக கல்யாணத்திற்குப் போனோம்.  நேற்று பந்த்.  ஒரு கடையும் திறக்கவில்லை.  மதுரை வெறிச்சென்றிருந்தது.  வெயில் பயங்கரமாக இருந்தது.  இந்த வெயில் என் வயசை ஞாபகப்படுத்துவதுபோல் தோன்றியது.  பின் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து, தெப்பக்குள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம்.  கோயில் எதிரில் இருந்த தெப்பக்குளத்தில் தண்ணீரே இல்லை.  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  மதுரையில் ஒவ்வொரு கோயிலும் வசீகரமாக இருப்பதுபோல் பட்டது.  உண்மையா இது.  அல்லது என் பார்வையில் கோளாறா என்பது புரியவில்லை.  அங்கிருந்து திரும்பவும் ஆட்டோ பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குப் போனோம்.  ஒரே கூட்டம்.  வியாழக்கிழமை என்பதால் நந்திக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.  சிவனை வணங்கிவிட்டு, நந்தி முன் வந்து நின்றேன்.  அபிஷேகம் செய்த நீரை மூஞ்சியில் அடித்தார்கள்.  
திரும்பவும் கல்யாணமண்டபத்திற்கு வந்து அங்குக் கல்யாணச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு காலேஜ் ஹவுஸ் சென்றோம்.   மதியம் 3 மணிக்கு ஒரு காரை வைத்துக்கொண்டு மதுரையில் உள்ள  முக்கியமான கோயில்களைச் சுற்றினோம்.  இதன் நடுவே கசடதபற ஆசிரியார் கிருஷ்ணமூர்திக்குப் போன் செய்தேன்.  அவர் மதுரையில் வசிப்பவர்.  போனை எடுத்த அவர், சிரித்துக்கொண்டே, நாங்கள்  சென்னைக்கு வந்துவிட்டோம்.  இனிமேல் சென்னையில்தான் இருப்போம் என்றார்.  
முதலில் காரில் திருமலை நாயக்கர் அரண்மனைக்குச் சென்றோம்.  பார்த்து திகைத்துவிட்டேன்.  அவ்வளவு பெரிய இடத்தில் ஒரு சின்ன இடமாகக் கொடுத்தால்  நான் பத்துபேர்களைக் கூப்பிட்டு இலக்கியக் கூட்டம் நடத்துவேன்.  அல்லது கவிதைகளை வாசிக்க வைப்பேன்.  ஆனால் அந்த அரண்மனைக் குறித்து விபரம் தெரியுமா என்று அங்குள்ளவர்களைக் கேட்டேன்.  யாருக்கும் தெரியவில்லை.  சரி நெட்டில் தேடுவோம் என்று விட்டுவிட்டேன்.  பின் அங்கிருந்து அழகர் கோயில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், கடைசியாக மீனாட்சி கோயில் என்றெல்லாம் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.  அழகர் கோயிலிலும், திருப்பரங்குன்றத்திலும் குரங்குகள்.  ஆனால் சாதுவான குரங்குகள்.  எங்கே புகைப்படம் எடுத்தால் கையிலிருந்து காமெராவைப் பிடுங்கி விடுமோ என்று பயந்து எடுக்கவில்லை.    இந்தக் கோயில்கள் எல்லாம் நேற்று மட்டும் விசேஷமாகத் தெரிந்தன. 
இறுதியாக நாங்கள் மீனாட்சி கோயிலுக்குச் சென்றோம்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மீனாட்சி அம்மனைத் தரிசித்தோம்.   
நாங்கள் திரும்பவும் நடந்து வந்து அந்தக் கோயில் இருக்கும் வடக்கு வாசல் தெருவில் உள்ள பாபா இட்லிக் கடையில் இட்லிகளும் ஒரே ஒரு தோசையும் பாலும் வாங்கிச் சாப்பிட்டோம்.  நம்ப மாட்டீர்கள்.  ஒரு இட்லி விலை ரூ.6.  தோசை விலை ரூ.25.  பால் விலை ரூ.10. ஜே ஜே என்று மதுரை இரவு நேரத்தில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது.
இன்று காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை வந்துவிட்டோம்.  வண்டி கிளம்பிய பின் பாதி நேரம் தூங்கி தூங்கி வந்தேன்.  பின் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதிய üகனவு ராட்டினம்ý என்ற நாவலை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அந்த நாவலை படிக்கும்போது 'கனவு' ராட்டினம் போல் சுற்றுவதாகத்தான் தோன்றியது. கனவு பற்றி இப்படி ஒரு நாவல் எழுத முடியுமா என்று யோஜனையாக இருந்தது.  74பக்கங்கள்தான் படித்தேன்.  பின் சென்னை வந்துவிட்டது.  வண்டியை விட்டு இறங்கினோம்.  

Comments