03.06.2021
துளி 199
சைக்கிள் தினம் என்பதால் என் அப்பாதான் ஞாபகத்திற்கு வருவார்.
86 வயதுவரை அவர் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். அப்பா சைக்கிள் ஓட்டும்போது கொஞ்சம் பயமாக இருக்கும்.
சைக்கிள் அவரை ஓட்டுகிறதா அல்லது அவர்தான் ஓட்டுகிறாரா?
நான் அவர் சைக்கிளை பெடல் பண்ணி ஆரம்பிக்கும்போது பார்க்கவே பயப்படுவேன்.
காலைத் தூக்கிப் போடும்போது எங்காவது தவறி விழுந்து விடுவாரா என்ற பயம் எனக்கு இருக்கும்.
கண்ணை மூடிக்கொண்டு விடுவேன்.
அவர் மேட் இன் இங்கிலாந்து சைக்கிள் வைத்திருந்தார். அந்த சைக்கிளுக்கும் எனக்கும் ஒரே வயது.
அப்பாவைப் பற்றி ஞாபகப்படுத்தும்போது எனக்கும் அந்த சைக்கிளும் ஞாபகத்திற்கு வருகிறது.
அதில் ஏறி ஒருவர் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றால் குதிரை மீது ஏறி ஓட்டுவதற்குச் சமம்.
அப்பா அவருடைய சைக்கிளில் மாம்பலம் முழுவதும் வலம் வருவார். காய்கறி கடைகளுக்குப் போய் காய்கறி வாங்குவார். ஓட்டலுக்குப் போய் வீட்டுக்குத் தெரியாமல் டிபன் சாப்பிடுவார். கோயில்களுக்குப் போவார்.
சின்ன வயதில் என் கனவு கூட சைக்கிள்தான். ஆரம்பத்தில் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது சைக்கிளிலேயே எல்லா இடங்களுக்கும் செல்வதாகக் கற்பனை செய்வேன்.
ஒருமுறை நான், மனைவி இருவரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். என்னால் அழுத்தி வேகமாக ஓட்ட முடியவில்லை.
ஒரு தருணத்தில் பேலன்ஸ் இல்லாமல் சைக்கிள் விழுந்து விட்டது. நான் ரொம்பவும் துடித்து விட்டேன். என் மனைவி அப்போது குழந்தை பெறும் நிலையிலிருந்தார் . எதாவது ஆகியிருக்குமோ என்ற பயம். நல்ல காலம் ஒன்றுமாகவில்லை.
டூ வீலர் வாங்கிய பிறகு எனக்குச் சைக்கிள் ஓட்டும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. என்னிடமிருந்த சைக்கிளை என் பெண் ஓட்டினாள். என் பையன் ஓட்டினான்.
என்னைவிட்டு சைக்கிளும் ஓடி விட்டது. இப்போது நினைத்துப் பார்த்தால் என்னால் சைக்கிளே ஓட்ட முடியாது என்று தோன்றுகிறது.
அப்பாவிடம் வருகிறேன்.
ஒரு திருமண நிகழ்ச்சி க்கு அப்பா சைக்கிளில் கிளம்பினார். சைதாப்பேட்டை. நெரிசல் மிகுந்த சாலையில் அப்பா போகும்போது தொப்பென்று விழுந்து விட்டார்.
உடனே மருத்துவ மனைக்கு அழைத்துக்கொண்டு போனோம். மருத்துவ மனையில் எக்ஸ்ரே பார்த்தபோது எலும்பு முறிவு என்று தெரிந்தது.
மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்பப்பா. கொடுமை.
இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். அப்பாவுக்கு சுகர் , பிபி எதுவும் கிடையாது. எளிமையான மனிதர். எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. வெற்றிலை பாக்குக் கூட போட மாட்டார்.
சைக்கிளை நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.
என் திருப்திக்காகச் சைக்கிளைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதினேன். ஒரு கதை எழுதினேன். என் கதையில் மேட் இன் இங்கிலாந்து என்று அப்பாவின் சைக்கிள் பெயர் அடிக்கடி வரும்.
இதோ அப்பா இறந்துபோய் 4 ஆண்டுகள் ஓடிவிட்டன.
என் சைக்கிள் கவிதையை இங்குத் தருகிறேன்.
சைக்கிள்கள்
தெருவில்
சில சைக்கிள்கள்
ஞாபகக் குதிரையேறி
பால்ய வீதிக்குச் சென்றேன்
ஏறவும் இறங்கவும்
தெரியாமல்
திசைத் தெரியாத திசைக்கு
ஓடியது குட்டிச் சைக்கிள்
பார்த்தவர்களை உற்சாகக்
குரல் கொடுத்துக் கத்தியது
பள்ளத்தில் வீழ்ந்தது
வளைந்தது முன் சக்கரம்
கசிந்தது ரத்தம் முட்டிக்காலில்
வல்லமை காட்ட
பின்னால் இழுத்துச் சென்றவளுடன்
மோதியது சுவரில்
பயத்தின் அலறல்
ஒலித்தது எங்கும்...
கனவில்
உலவிய இன்னொரு சைக்கிள்
எங்கும் நிற்காத இடங்களுக்கு
பறந்தது
தாண்டிய குளத்தைத்
தாமரை கண்டது
மலைமுகடுகளில்
ஏறிக்குதித்தது
பனிச்சறுக்கில்
வழுக்கி வழுக்கிப்
போயிற்று....
Comments