அழகியசிங்கர்
நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை.
தமிழில் எழுதியிருக்கும் அவருடைய கட்டுரையை இன்னொரு முறை யாராவது முயற்சி செய்து தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும்.
அவர் எழுதிய இரண்டு இடங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
‘இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜன வாதமாகியதும் ருசிகரமான காதல் கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது.’
மேலே குறிப்பிட்டது பிரமிளின் வாசகங்கள்.
இன்னொரு இடத்தில்
‘வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான். புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டிக்கிறான். ஆனால், ருசிகரமான அனுபவமோ மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம் ஆகியவற்றைச் சார்ந்தது.’
1976ல் இப்படி எழுதுவதுதான் ஒரு ஸ்டைல் போலிருக்கிறது. அதில் பிரமிள் கடுமையாக இயங்கிக் கொண்டிருந்தார்.
இந்தப் புத்தகத்திற்கு வைதீஸ்வரனும் முன்னுரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முன்னுரை 2018ல் வெளிவந்திருக்கிறது.
நிலை
அமர்ந்திருக்கும் வரப்பு.
வரப்பின் மேல் சிலுக்கும் செடி
அரக்குச் சிவப்பாய்
ஒளிரும்
மேற்குச் சிதறல்கள்
அண்ணாந்த கண்
தொலைவில் அதிசயிக்க
வேகம் கொள்ளும் பறவைகள்
வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்
முயங்கிக் கிடக்கும் உருவங்கள்,
தொலைவில் மேயும் மாடு,
கன்று.
எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.
எங்கோ மூலையில்
கட்டிப் போட்ட
வீட்டு நாய் மட்டும்
குரைத்துக்கொண்டேயிருக்கிறது.
எங்கோ மூலையில் கட்டிப் போட்ட வீட்டு நாய் குரைப்பதால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றனவா என்ற கேள்விக்குறி எழுகிறது. எல்லாவற்றையும் கவனிக்கிற மாதிரி கட்டிப்போட்ட வீட்டு நாயையும் கவனிக்கிறாரா?
(இன்னும் வரும்)
Comments