Skip to main content

மணல் வீடு வழங்கிய பரிசு..


அழகியசிங்கர்
நேற்று சென்னை வந்து சேர்ந்தபோது இரவு மணி 11 ஆகி விட்டது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மணல்வீடு அமைப்பினர் சிறப்பாகக் கூட்டத்தை நடத்தி முடித்தனர். 
நவீன விருட்சம் என்ற சிற்றேடு 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.  இது ஒரு காலாண்டு இதழ்.  இதுவரை 109 இதழ்கள் வந்துள்ளது.  இப்போது வரப்போகிற இதழ் 110வது இதழ். 
நவீன விருட்சம் என்ற இதழிற்குத்தான் இந்த ஆண்டு மணல் வீடு அஃக் பரந்தாமன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவம் செய்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மணல் வீடு ஒரு சிற்றேட்டின் பங்களிப்பைக் கௌரவம் செய்கிறது.  இந்த ஆண்டு விருட்சத்திற்குக் கௌரவம் அளித்துள்ளது.
நானும் மனைவியும் 2ஆம் தேதியே ஈரோடு சென்றடைந் தோம்.  40 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு அருகில் உள்ள பவானி ஊரில் அரசாங்க உத்தியோகத்தில் 4 மாதங்கள் பணிபுரிந்த அனுபவம். ஊழலின் கேந்திரம் அந்த அரசாங்க உத்தியோகம்.  எப்போது மாற்றல் கிடைத்து சென்னைக்கு வரமுடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.  அப்பாவிற்கு வாரத்திற்கு ஒருமுறை புலம்பல் கடிதம் எழுதுவேன்.  அப்போது தினமும் பவானி அம்மன் கோயிலுக்குச் செல்வேன்.  மூன்று ஆறுகள் (காவேரி, பவானி, கோயிலிருந்து ஊற்றெடுக்கும் இன்னொரு ஆறு) சங்கமிக்கும் இடத்தை சுதந்திரமாகப் பார்த்து ரசிப்பேன்.  
40 ஆண்டுகளுக்கு மேல் இப்போது அங்குப் போகும்போது அந்த இடமே மாறி எனக்கு அந்நியமாய் தோன்றியது.  திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று காவல் துறையிடமிருந்து எச்சரிக்கை.  தலையும் புரியவில்லை.  காலும் புரியவில்லை.  அப்போதெல்லாம் ஆற்றைக் கடந்து ஒரு பாலத்தின் வழியே குமாரபாளையம் என்ற ஊருக்குச் செல்வேன்..  அந்த ஊர் என்னை வசீகரித்த ஊர்.  ஆனால் இப்போதோ புரியாத ஊரைச் சுற்றிப் பார்த்ததுபோல் தோன்றியது.  ஈúôடிலுள்ள ராணா விடுதிக்குத் திரும்பி வந்து விட்டோம்.  
அடுத்தநாள் பரிசளிப்பு விழா.  நாங்கள் தங்கியிருந்த ராணா விடுதி நிகழ்வரங்கில்.  மருத்துவர் ஜீவானந்தம் உரை நிகழ்த்த, விழா இனிதே துவங்கியது.  நா விச்வநாதன். கமலாலயன், அழகியபெரியவன், பிர்வீன் பஃறுளி, ஷாஅ, தேவி பாரதி, மோகனரங்கன், என் அழைப்பின் பேரில் சென்னையிலிருந்து வந்திருந்த மருத்துவர் பாஸ்கரன் என்று பலர் நவீன விருட்சம் இதழையும் என்னையும் புகழ்ந்து தள்ளி விட்டார்கள். என்னால் என்னையே நம்ப முடியவில்லை.  முத்தாய்ப்பாக நாஞ்சில் நாடன் பேசினார்.  அவர் கையால் பரிசை வழங்க பெற்றுக்கொண்டேன்.    இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த ஹரி கிருஷ்ணன் பம்பரமாய் சுழன்று இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்தார்.  காலை பத்து மணிக்கு ஆரம்பித்த விழா இரண்டு மணிக்கு முடிந்தது.  எல்லோருடைய பேச்சுக்களையும் ஆடியோவில் பதிவு செய்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பின்னால் கேட்பேன். 
ü இந்த விழா முடிந்தவுடன் ஈரோடில் நடக்கும் புத்தகக் காட்சிக்குச் சென்றோம்.  நீதியரசர் மகாதேவன் உரை.  அந்த உரை நிகழும் இடமெல்லாம் கூட்டம்.  என்னமோ தெரியவில்லை அன்று உடல் அசதியாக இருந்தது.  அதனால் புத்தகக் காட்சியை வேகமாகசு; சுற்றி பொது மேடை நடக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து விட்டேன்.
ஈரோடு புத்தகக் காட்சியில் 4 புத்தகங்கள் வாங்கினேன். அவை பின்வருமாறு.  1500 பக்கங்கள் கொண்ட தகழி சிவசங்கர பிள்ளையின் கயிறு, வா மு கோமு சிறுகதைகள்,  தொ மு சி ரகுநாதன் எழுதிய பாரதி காலமும் கருத்தும், சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் (புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றி) என்னுடன் திருவள்ளுவர் என்கிற புத்தக ஆர்வலர் வந்திருந்தார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை.  புத்தக ஆர்வலர் திருவள்ளுவர் எங்களை அங்குள்ள கோயில்களைச் சுற்றிப்பார்க்க அழைத்துப்போனார்.  3 கோயில்களைப் பார்த்தோம்.  அவர் வரவில்லை என்றால் 3 கோயில்களைப் பார்த்திருக்க முடியாது. முதலில் நாமக்கல் ஹனுமார் கோயிலுக்குப் போனோம்.  திறந்த வெளியில் அனுமாரைப் பார்த்தபோது அசந்து விட்டேன்..  ஒரே கூட்டம். இன்னும் கண்முன்னே ஹனுமார் நடனமாடிக்கொண்டிருக்கிறார்.  இரண்டாவதாக திருச்செங்கோடிற்குச் சென்றோம்.  காலை 8.30 மணிக்குக் கிளம்பினோம்.  இரண்டு கோயில்களைச் சுற்றி பார்த்துவிட்டு வரும்போது மணி 1க்கு மேல் ஆகிவிட்டது.  திருச்செங்கோடில் திருவள்ளுவர் வீடு. அங்குச் சென்றோம். 
திருவள்ளுவர் அவர் வீட்டில் ஒரு லைப்ரரியே வைத்திருக்கிறார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள்.  அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையே ஏற்பட்டது. அவர் தாத்தா காலத்திலிருந்து புத்தகங்கள் சேகரித்து வருகிறார்.  திருவள்ளுவர் சொன்னார் எனக்குப் பிறகு என் குடும்பத்தில் யாருக்கும் படிப்பதற்கு ஆர்வமிருக்காது என்று. 
அங்கிருந்து கொடுமுடி என்ற இடத்திற்குச் சென்றோம்.  கிளம்புவதற்கு முன் நல்ல விருந்தளித்தார்.  60 அல்லது 70 கிலோ மீட்டர்கள் உள்ள கொடுமுடி என்ற இடத்திற்கு வந்தோம். கோயிலை தரிசித்தப் பிறகு  ராணா விடுதிக்குத் திரும்பினோம்.  அன்று முழுவதும் சுற்றி சுற்றி ஒரே களைப்பாகிவிட்டது.    உடம்பு சூடாகி விட்டது.  குரோசின் வாங்கி வைத்துக்கொண்டேன்.  நான் மாத்திரைகளை விழுங்குவதை விரும்ப மாட்டேன்.  மாத்திரை வாங்கியும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  அன்று சரியான தூக்கம் இல்லை. 
அடுத்த நாள் மாலை நாலரை மணிக்குத்தான் சதாப்தி.  எங்கும் சுற்றவில்லை.  ரெஸ்ட்.  சாப்பாடு கூட இட்லி,  தயிர்சாதம்தான்.  ஒரு சின்ன ஓட்டலில்.  நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் சின்ன ஓட்டல்கள்தான் தென்பட்டன.  சில ஓட்டல்களில் சைவம் அசைவம் இரண்டும் சேர்ந்திருந்தன.  நாங்கள் எடுத்துக்கொண்டு வந்த பைகளில் புத்தகப்பைதான் ஒரே கனம்.   சதாப்தியைப் பிடித்து நாங்கள் வீடு வந்துசேர்ந்தபோது இரவு 11.30. சதாப்தியில் தொ.மு.சி ரகுநாதன் எழுதிய பாரதி காலமும் கருத்தும் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வந்தேன்.    ஒரே தூக்கம்.
நான் இதில் தெரிந்துகொண்டது என்னவென்றால், போகிற இடமெல்லாம் தூக்கமுடியாமல் புத்தகங்கள் வாங்கக் கூடாது.  கோயில் போவதென்றால் ஒருநாளைக்கு ஒரு கோயில்தான்  போக வேண்டும்.  சாப்பிடுவது ஜாக்கிரதையாகச் சாப்பிடவேண்டும். தேவையான அளவிற்கு ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விழாவிற்கு வந்திருந்த மற்ற எழுத்தாள நண்பர்களை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பேட்டி எடுத்தேன். நா விச்வநாதன், அழகிய பெரியவன், ஷாஅ, தேவி பாரதி என்று  மொத்தத்தில் நல்ல அனுபவம்.  பரிசு கொடுத்து சிறப்பித்த மணல்வீடு இலக்கிய அமைப்புக்கு நன்றி பல.   

Comments

Popular posts from this blog