Skip to main content

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9

அழகியசிங்கர்




1. எது சிறந்த கேள்வி சிறந்த பதில்
நீங்கள் கேட்பது சிறந்த கேள்வி. நான் சொல்வது சிறந்த பதில்

2. தமிழில் இப்போது படிப்பவர்கள் குறைந்துகொண்டு போகிறார்களா?
உண்மைதான்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற மூன்று பிரிவினரில் பெண்கள்தான் படிக்கிறார்கள். 

3. நீங்கள் பணத்தை ஏமாந்து விட்டீர்களே? கிடைத்ததா?
கிடைக்கவில்லை.  முன்பே எதிர்பார்த்ததுதான்.  போலீஸ் கமிஷனரிடம் போய் புகார் கொடுத்தேன்.  ஒரு மாதம் ஓடிவிட்டது. போலீசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.  போன் செய்தாலும் எடுப்பதில்லை.  இதை எதிர்பார்த்ததுதான்.  போலீசு முயற்சி செய்தால் எந்தக் கணக்கிற்குப் போனதோ அதைக் கண்டுபிடிக்கலாம்.  தினமும் பலர் ஏமாந்து போகிறார்கள்.

4. சமீபத்தில் ஏற்பட்ட மரணங்களைப் பற்றி
மரணம் தினம் தினம் யாருக்காவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள் மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  ஒரு மரணம் ஒரு விபத்து.  விருட்சம் லைப்பரரி அடுக்கத்தில் பக்கத்தில் குடியிருந்தவர்.  எழுபது வயதிற்கு மேல் இருக்கும். யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருப்பார். அவருடைய மரணம் ஆழ்வார்பேட்டையில் ஒரு விபத்தில் நடந்தது.  அவர் 75 வயதுக்குமேல் ஆனவர்.  சுறுசுறுப்பு மிக்கவர்.  அவரே டூ வீலரில் போய்க்கொண்டிருக்கும்போது பின் பக்கம் கார் மோதி மரணம் அடைந்து விட்டார்.   இன்னொரு நண்பர் ஆந்திரா வங்கியில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று வந்தவர். ஆகஸ்ட் 3அம் தேதி விருட்சம் சந்தாவை குரியர் தபாலில் பணத்தை வைத்து அனுப்பியவர்.  13ஆம் தேதி பாத்ரூமில் வைத்திருந்த ஆசிடை எடுத்துக் குடித்துவிட்டார்.  

5.  எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள் போலிருக்கிறதே..
எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள்.  ஆனால் வாசக எண்ணிக்கை அதிகமாகவில்லை.   ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களைத்தான் இன்னொரு எழுத்தாளன் படிக்க வேண்டுமென்ற சூழல் வந்துவிட்டது.

6.  இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
முகநூல்தான்.  முகநூலில் எழுதத் துவங்குபவனுக்கு  எதையும் எழுத முடியும் என்ற துணிச்சலான எண்ணம் ஏற்பட்டு விடுகிறது.  அவன் ஒரு அதிகாரம் படைத்தவனாக மாறி எழுதத் துவங்குகிறான். வாசிப்பவனைத்தான் காணும். 

7. உங்கள் புத்தகம் படிக்கும் வேகம் குறைந்து விட்டதா அதிகமாகி விட்டதா?
குறைந்துகொண்டே போகிறது.  என் நண்பர் கூறியபடி வாசக மராத்தான் என்று ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.  தினமும் குறைந்தது ஒரு மணி நேரமும். மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் படிக்கலாமென்று நினைக்கிறேன்.

8. படிப்பைத் தவிர வேற சிந்தனை இல்லையா?
வேற சிந்தனை இல்லை.   தலையைக் கொண்டு போகிறமாதிரி வேலை எதுவும் கிடையாது.  எதுவும் செய்து முடிக்க வேண்டுமென்ற கவலையும் இல்லை.  படிக்கிறதைத் தவிர வேற வேலை இல்லை.

9. சமீபத்தில் என்ன சினிமா படம் பார்த்தீர்கள்?
அமேசன் ப்ரைமில் என் நண்பர் உதவியால் உறுப்பினன் ஆகிவிட்டேன்.  அதில் பல படங்களைப் பார்க்கிறேன்  அது குறித்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.  சமீபத்தில் பார்த்த படம் ஆடை.  இந்தப் படத்தை ஆடையில்லாமல் ஒரு நடிகை (அமலா பால்) நடிக்கிறார்.   துணிச்சலான முயற்சி.  வேடிக்கை என்னவென்றால் கொஞ்சங்கூட ஆபாசமாகத் தெரியவில்லை.  இது இந்தப் படத்தின் வெற்றியாகக் கருதுகிறேன்.
10.  திரைப்படத்தை விட சிறுகதை மேல் என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள்.
உண்மையில் திரைப்படத்தையும் சிறுகதையும் தொடர்புப் படுத்திச் சொல்லக்கூடாது.  ஒரு சிறுகதையைப் படிக்கும்போது ஒரு சித்திரம் தோன்றுகிறது.  இது மாதிரி ஏகப்பட்ட சிறுகதைகளில் ஏகப்பட்ட சித்திரங்கள்.  சில நிமிடங்களிலேயே கதை முடிந்து விடும். ஒரு சிறுகதையைப் படிக்கும்போது உடனே ஒரு மனப் பிம்பம் ஏற்பட்டு நமக்குள்ளே கதை நிகழ்கிறது.  சினிமாப் படம் நாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.  

11. இதோடு முடித்துக்கொள்ளலாமா?
முடித்துக்கொள்ளலாம்.  இன்னும் தொடரலாம் பின்னால். 
 


Comments