Skip to main content

ஆகஸ்ட் 8ஆம் தேதியை மறக்க முடியாது..



அழகியசிங்கர்




பொதுவாக ஆகஸ்ட் 8 ஆம் தேதியை என்னால் மறக்க முடியாது.  இன்று அவர் உயிரோடு இருந்தால் 79 வயதாயிருக்கும்.  அவர் பெயர் ராம் மோகன் என்கிற ஸ்டெல்லா புரூஸ்.  
என் நண்பர் ஆத்மாநாம் என்கிற கட்டுரையில் ஸ்டெல்லா புரூஸ் இப்படி எழுதியிருக்கிறார். üதற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும்.ý என்று எழுதிய ஸ்டெல்லா புரூஸ÷ம் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.  இந்த வேடிக்கை ஏன் நடந்தது?
இம்மாதிரியான ஒரு துயரமான சம்பவம் நடப்பதை முன்கூட்டியே அறிந்தாலும் யாரும் தடுக்க முடியாது.  ஸ்டெல்லா புரூஸ் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.  
மனைவியை இழந்த துக்கத்தை அவரால் தாங்கத்தான் முடியவில்லை.  ஆனால் என்ன சோகம் என்றால் கூட அவருக்கு யாருமில்லை.  அவருக்கு ஆறுதல் சொல்ல.  அவர் எல்லா உறவுகளையும் துண்டித்துவிட்டு வந்ததால் இந்தத் துயரத்தைச் சந்திக்கும்படி ஏற்பட்டது.  
ஸ்டெல்லா புரூஸ் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்.  மிகச் சிறிய இடம், கொஞ்சம் பணம், படிக்கப் புத்தகங்கள், இசை.  இது போதும். ஆடம்பரமான வாழ்க்கை கிடையாது.   அவர் பல ஆண்டுகளாக அவருடைய தந்தையார் வியாபாரத்தைத் தொடராமல் விலகி வந்துவிட்டார்.  அவர் 40 வயதுவரை திருமணமும் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாமல் இருந்தார்.   அவர் ஏழ்மைதான் அவரைக் கொன்று விட்டது என்ற தவறான பிரச்சாரம் பலர் செய்கிறார்கள்.  அது தவறான தகவல். அவருடைய சேமிப்பு அவர் ஒருவருக்குப் போதுமானதாக இருந்திருக்கும்.   எழுதியும் அவரால் சம்பாதித்திருக்க முடியும்.  அவருடைய எழுத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கு வகித்துள்ளார்.  ஜே கிருஷ்ணமூர்த்தியைப் படிப்பவர்கள்  நிச்சயமாகத் தற்கொலை செய்திருக்க மாட்டார்கள்.  ஆனால் இவர் விஷயம் வேறு விதமாகப் போய்விட்டது.  ஆனந்தவிகடனில் தொடர் கதை வந்துகொண்டிருக்கும்போது ஏராளமான ரசிகர்கள் அவருக்கு; அதுவும் முதல் நாவலான ஒரு முறைதான் பூக்கும் வரும்போது   ஏராளமான பெண் ரசிகர்கள்.  பல வாசகர்களுடைய குடும்பப் பிரச்சினைக்குக் கூட தீர்வு சொல்லியிருக்கிறார்.
ஆனால் தனக்கென்று மீளாத ஒரு துயரம் வரும்போது எதிர்த்து நின்று சமாளிக்க முடியவில்லை.  உதாரணமாக ஸ்டெல்லா புரூஸ் இறந்து போய் அவர் மனைவி ஹேமா உயிரோடு இருந்திருந்தால் ஹேமா தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். 
என் நண்பர் ஆத்மாநாம் என்ற புத்தகம் ஒரு சுயசரிதமான நூல்.  அதை வாசகர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். 152 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் ரூ.100தான்.  சுவையான பல சம்பவங்களைக் கொண்டது. இந்த நாளில் அவரை ஞாபகப்படுத்தும்படி எப்போதும் எழுதுகிற மாதிரி இந்தக் கட்டுரை எழுதி உள்ளேன். 
அவர் தற்கொலை செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஓடிவிட்டன. 
 

Comments