Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 121


அழகியசிங்கர்  


மாலை - காலியிடம்


அபி





உண்மை
தன் பழைய இடத்துக்குத்
திரும்பி வந்து விட்டது
எப்போதும் காலியாயிருக்கும் இடம்

அது இல்லாத இடம் எது
என்பது பெரியோர் வாதம்.
வாதம் தெரியாமல்
எவர் பேச்சையும் கவனிக்காமல்
இதையே கவனித்திருக்க நேர்கிறது,
திரும்புவதை, திரும்புவதை மட்டும்.

புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்
இடைச்சிறுவர்கள்
பசியின் பார்வையில் எரியும் விறகு
கடைசி மஞ்சள் கிரணத்தின்
தயங்கிய மூச்சு
--எதுவாயினும்
என்மீது பட்டவுடன்
விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.

இடம் இல்லாதிருந்ததில்
இடம் பரவிக்கொண்டது,
காலியிடம்

வாசலில் தொடங்கி
வானம் அடங்கி
தான் இன்றி இருண்டு கிடக்கும்
மனசின் வெளிவரை
எங்கும்

காலியிடம் காலியிடம்

நன்றி : அபி கவிதைகள் - கலைஞன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை. தி நகர், சென்னை 17 - பக்கங்கள் : 242 - விலை : ரூ.100 - இரண்டாம் பதிப்பு : 2009

Comments