Skip to main content

மஞ்சேரி எஸ் ஈசுவரன்



மைதிலி






(பழம் பெரும் எழுத்தாளர் மஞ்சேரி எஸ்  ஈசுவரன் எழுதிய சிங்காரி என்ற புத்தகத்திஙூருந்து மைதிஙூ என்ற சிறுகதையை இங்குக்கொடுத்துள்ளேன். சிங்காரி என்ற இப் புத்தகம் 1946ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. -  அழகியசிங்கர்)


படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று. சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள். சில வீடுகளில், அரையும் குறையுமான உடுப்போடு வந்து பதில் சொல்லுவார்கள். இப்படி எத்தனையோ குடும்பங்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணும் மனமும் கூடச் சலித்து விட்டது. கடைசியாக, வீடு என்ற பெயர் கொண்ட ஒரு வளையை-அல்ல, இரண்டு எலி வளைகள் கொண்ட ஒரு பெரிய வளையை-வாடகைக்கு அமர்த்தினேன். நவாப் காலத்தில் நிர்மாணமான ஒரு பழைய கட்டிடத்தின் கொல்லைக்கட்டு அது.

கொசு உபத்திரவமும், நடுத்தர வகுப்பாரின் ஜம்பமும் நிறைந்தது திருவல்லிக்கேணி என்றாலும், அதனிடத்திலே எனக்கோர் அலாதி அபிமானம். ஏனென்றால், ஐம்பது வருஷங்களுக்கு முன், என் தகப்பனார் வழியைச் சேர்ந்த உறவினர் ஒருவர், கிராமத்தை விட்டு, திருவல்லிக்கேணி யில்தான் வந்து குடியேறினார். பின்னால் வேறு சிலரும் அவரைப் பின்பற்றி வந்து, அங்கங்கே இடம் பிடித்துக் கொண்டார்கள். என்றாலும், அவர்கள் சம்பாதித்த பூஸ்திதிகளையும் பணங் காசுகளையும் சேமித்து, ஸ்தாபிதம் செய்து கொள்ளவில்லை ; செய்திருந்தார்களானால், பல்லவ ராஜ பரம்பரையைவிட, அவர்கள் வம்சம் நீடித்திருந்திருக்கும். பணங்காசு சேர்ப்பதிலே தான் மட்டம்; பூர்ணாயுளாவது உண்டா? முப்பது வயதுக்குள்ளே, அத்தனை பேரும் மாண்டு விட்டார்கள். ஆனால் நான் மட்டும் அந்தக் குடும்ப கண்டத்திலிருந்து, சொற்பக் காய்ச்சலோடு தப்பித்துக் கொண்டேன். அது டிங்கி ஜுரமுமல்ல; இன்புளூயன்ஸாவும் அல்ல- இரண்டும் சேர்ந்த ஒரு கதம்பம்.  வைத்திய நண்பர், 'பாரா-டைபாயிட்' என்று பிடிவாதமாய்ப் பெயர் சூட்டினார்.  "என்னவோ பாண்ணாங்கட்டி?'' என்று நான் எரிச்சலோடு சொல்லி விட்டு, காய்ச்சலுடன் போராடினேன். படுக்கையண்டை விட்டு அகலாமல், என் மனைவி பணிவிடை செய்தாள். நான் அந்தப் பூட்டுக்குப் பிழைத்தேன்.

அந்த ரகசியத்தை இனி மறைப்பானேன்; சொல்லி விடுகிறேன், நாகரிகம் முற்றிக் கலியாணம் என்ற சம்பிரதாயமே அடிபட்டுச் சீர்குலைந்து வரும் இந்தக் காலத்தில், கிரகஸ்தன் என்றால் ஆச்சர்யமாய்த்தான் இருக்கும். என்றலும், நான் ஓர் எளிய கிரகஸ்தன்தான். கிரகஸ்தனுக்கு இந்த நாட்டில்-ஏன், அநேகமாய் உலகம் பூராவிலும் தான்-- இருக்கும் இன்பங்களும் துன்பங்களும் எனக்கும் இருந்தன.

வீட்டைப்பற்றி அல்லவா சொல்ல வந்தேன். வர்ணனையாகவோ அலங்காரமாகவோ சொல்வதானால், அதை வங்கு, வளை, குச்சு என்றெல்லாம் சொல்லலாம். ஆனால், பிச்சைக்காரனுக்கு இச்சைபோல் கிடைக்குமா? அதேபோல் தான், ஓர்- என். ஜி. ஓ. (நான்கெஜடட் ஆபீ ஸர் ) ஆகிய என் நிலைமையும். கெட்ட கழுதைக்குப் பட்டுக் குஞ்சலமா என்று கேட்காதீர்கள். ஒரு குமாஸ்தா, என்னை ஒரு நான்கெஜடட்-ஆபீஸர் என்று திவ்யமாய்ச் சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. அதாவது, வின்ளாமல் விரியாமல் மாதம் முப்பது ரூபாய் தாராளமான சம்பளத்தில் ஆரம்பித்து, இருபது வருஷத்துக்குப் பிறகு ஐம்பத்தைந்து ரூபாய்ச் சிகரத்தை எட்டிப்பிடிக்கும் உத்தியோகம். ஹைஸ்கூல் பையன்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் கிராப் (ரேகை) கணக்கில், இது ஓர் அழகான அப்பியாசமாக இருக்கலாம். ஆனால், இங்கே காலம் போகிறபோக் கில், காலத்துக்கும் சம்பளத்துக்கும் கிராப் போட்டால், காலம் திணறிப் போகும். நமது அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் எவரோதான்,    இந்த அற்புதமான சம்பளத் திட்டத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். கடுமையான ரேஷனிங் (பங்கீடு) முறையை, யுத்த காலத்தில்தான் அனுஷ்டிக்கிறார்கள். யுத்தமில்லாத சாதாரண காலத்திலேயே, குமஸ்தாக்களின் விஷயத்தில் அந்த நிபுணர் இதைச் செய்து காண்பித்துவிட்டார். அந்த மகானுபாவரின் ஏற்பாட்டினால்தானே, இரண்டே அறைகளுள்ள ஜாகையில் பனிரண்டு ரூபாய் வாடகை கொடுத்துக்கொண்டு இன்னமும் நான் வசித்து வருகிறேன். வருங்காலத்திலாவது எனக்கு ஏதேனும் விமோசனம் உண்டா?  எப்போதுமே நிரந்தரமாய் இந்த அல்பச் சம்பளத்திலே தான் வாழ வேண்டும். அப்படி வாழ்பவனுக்கு, நல்லது கெட்டதே தெரியாமல் அறிவு மழுங்கித்தான் போகும். வாழ்க்கையே சலிப்புத்தான் தட்டும். அதை, பெரிய வேதாந்தம் போல் வேஷம் வேண்டுமானால் போடலாம். விஷயம் இதுதான்: சதா சர்க்காரைச் சபிப்பது என் தொழிலாய்ப் போய்விட்டது. ரகஸ்யமாய்த்தான் அப்படிச் சபிப்பேன். இல்லையானால், இந்தப் படியளக்கிறார்களே, இதற்கும் அல்லவா ஆபத்து வந்துவிடும்!

உத்தியோகம் என்ற நாடக மேடையில் கூடஅவ்வளவு இல்லை; குடும்பம் என்ற அந்தரங்க அறைக்குள் தான் ஒரு குமாஸ்தாவின் வாழ்க்கைக் காட்சிகள் மகா உருக்கமாயிருக்கும்.

சம்பந்தமில்லாமல் மனசு போன போக்கில் என் னென்னவோ சொல்லிவிட்டேன்! ஆமாம்; அதிலும் ஓர் இன்பம் இருக்கத்தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பேசும்போது தானே, இந்த இன்பத்தை நான் அனுபவிக்க முடியும்? கச்சேரிக் காகிதக் கட்டுகளிலே இப்படிக் கனவிலாவது நான் எழுத முடியுமா?

என் மனைவி அவ்வளவு கெட்டிக்காரியல்ல. கெட் டிக்காரத்தனம் அதிகமாய் இருப்பவளிடம், பெண்மையின்   கவர்ச்சி போய் விடுகிறது. கெட்டிக்காரப் பெண்தான் செய்வதே சரியென்று எப்போதும் சாதிப்பாள் ; பெண் இல்லாவிட்டால் புருஷன் வாழவே முடியாது என்பது பொல் நடப்பாள். இந்தத் தூர்க் குணத்தை நம்மால் சகிக்க முடியாது. ஆனால், என் மைதிலியை அசடு என்றும் சொல்லிவிட முடியாது. ஏதோ கொஞ்சம் கெட்டிக்காரத்தனம் அவளுக்கு இருக்கத்தான் இருந்தது. தலைச்சன் பிறந்த பிறகுதான், அது போய்விட்டது. சிறிகளை அவர்களின் இஷ்டம்போல் விட்டுவிடவேண்டும்' என்ற கொள்கை கொண்டவர்கள் என் பெற்றோர். ஆகையால், என் விருப்பப்படி குடித்தனம் நடத்த, எனக்கு அவர்கள் அனுமதி கொடுத்துவிட்டார்கள். என் வேட்டகதிலிருந்தும், எந்தவித உபத்திரவமுமில்லை. என் மனைவியின் தாயார் மாத்திரம் உயிரோடிருந்தாள். பூகம்பம் வற்பட்டால் கூட, அந்தக் கிழவி, கிராமத்திலேயிருந்த தங்கள் பிதிரார்ஜித வீட்டைவிட்டு நகரமாட்டாள். கிழவிக்கு மூன்று பசுமாடும் ஒன்பது ஏக்கரா நிலமும் இருக்தது. எனவே, கூட்டுக் குடும்பம் என்ற பன்றித் தொழுவத்தில் நாங்கள் உழலவில்லை. ஆனால், என் உறவினர்களோ அல்லது மனைவியின் தூரபந்துக்களோ யாராவது எப்போதேனும் வந்து, கொஞ்சம் புழுதி கிளப்பிவிட்டுப் போக வேண்டும் என்று சில சமயம் நான் ஆசைப்படுவதுண்டு.

நான் வீடு திரும்பியவுடனே, "வீடு எப்படி இருக்கு? வெள்ளை அடிச்சிருக்கா? குழாயிலே தண்ணி வரதா?'' என்று மூச்சு விடாமல் மைதிலி பல கேள்விகள் கேட்டாள்.

"எல்லாம் இருக்கவேண்டியபடி இருக்கு'' என்று மையமாகப் பதிலளித்து விட்டு, "வீட்டுக்காரன், நல்லவனாய்த் தோணறான்.  நாம்ப ஜாகை போரத்துக்கு முன்னாலே, எல்லா ரிப்பேரும் செய்துடறதாச் சொல்றான்', என்று முடித்தேன்.

"இடம் விஸ்தாரமா இருக்கோல்லியோ?"

"ஆஹா! நிறைய இருக்கு'' என்று அவளுக்குச் சொன்னேன். ஆனால், நாலு கைக்குட்டைகளை விரித்தால் என்ன விஸ்தீரணம் இருக்குமோ அதற்கு ஒன்றும் பழுதில்லை என்றுதான், மனதுக்குள்ளே கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.

பஞ்சாங்கத்தைப் பார்த்து, புது வீட்டுக்குக் குடி போக, நல்ல நாளாய் ஒன்று கண்டுபிடித்தோம்.

குடிபோவதற்கு வேண்டிய திட்டமெல்லாம் போட் டாயிற்று. ஒரு கை வண்டி இரண்டு நடை போய் வர வேண்டியது. முதல் நடையில் என் புஸ்தகங்களும் மரச் சர்மான்களும் உடுப்புப் பெட்டிகளும் பின்தொடர, என் மனைவியும் குழந்தையும் முன்னால் ஒரு ரிஷாவில் ஊர்வலம். புது வீட்டுக்குப் போய், சமையல் செய்வதற்கு முன், சுபமாக என் மனைவி பால் காய்ச்சவேண்டும். அந்தச் சமயத்தில், இரண்டாவது நடையில், எங்கள் சொத்தில் மிச்சம் மீதியுள்ள சகல சாமான்களையும் ஒரு துளியும் விடாமல் எடுத்துக் கொண்டு, நான் கிளம்ப வேண்டியது.

அவ்விதமே, இரண்டாவது நடையில் கைவண்டியுடன் நான் கடைசியாக வந்து கொண்டிருக்கிறேன். வீடு மாற்றும் பரபரப்பிலும் அவசரத்திலும், வண்டியில் எந்தச் சாமானை எப்படிப் போட்டு நிரப்பினேன் என்றே எனக்கு ஞாபகமில்லை. ஆனால், நடு வழியிலே அதைத் தெரிந்து கொள்ள நேரிட்டது.

காலை எட்டுமணி இருக்கும். தெருவெல்லாம் தேனீக் களைப்போல் ஜனங்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது கால் நடைவேகத்தில், கைவண்டி நகர்ந்து கொண்டிருந்தது. நான் அதற்குப் பின்னே நடந்து கொண்டிருக்கிறேன். திடீரென்று, யாரோ கலகல . என்று சிரிக்கும் ஒலி கேட்டது, ஒரு வீட்டு வாசல் நிலைப்படியண்டையில்  என் கைவண்டியைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன்தான் அப்படிச் சிரித்தான் என்று கண்டேன். அவன் பக்கத்தில் ஒரு ஸ்திரீ நின்றுகொண்டிருந்தாள். முப்பத்திரண்டு பல்லும் தெரியும்படி அவளும் சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் சொல்லிய எதையோ கேட்டுத்தான் அவள் சிரிக்கிறாள் என்று தோன்றியது. வண்டியில் அலங்கோலமாய்க் குவித்திருந்த சாமான்களை, அவன் தன் கையை நீட்டி அவளுக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். மீண்டும் அவன் உரக்கச் சிரித்தான். அல்பப் பயல்! உடனே எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. முதலில் கோபத்தால் என் முகம் சிவந்தது; பிறகு வெட்கத்தால் வெளுத்தது.

குவித்திருந்த சாமான்களைப் பார்த்தேன். அவைகளின் நடுவே புகைபிடித்த மண் அடுப்பு, சாக்கடைவாய் மாதிரி வாயைப் பிளந்துகொண்டிருந்தது. அதிலிருந்து இரண்டு துடைப்பங்கள் துருத்திக்கொண்டு வெளியே நீட்டியிருந்தன. அதன் பக்கத்திலே, கட்டவிழ்ந்த ஒரு விறகுக் கட்டு, கொடிக் கம்பியில் மாட்டிக்கொண்டிருந் தது. ஒட்டடையடிக்கும் குச்சியன்று, தலைவிரிகோல மாய்க் கிடந்தது. பார்ப்போர் அருவருக்கும்படி, கரி டின் நசுங்கியிருந்தது. தகர டப்பாக்கள் நிறைந்த ஒரு கந்தல் சாக்கு, ஒட்டுகள் போட்டு, தலை போன முண்டம் மாதிரி ஆடிக்கொண்டிருந்தது. வாளிகள் ஒன்றோடொன்று மோதி லொடலொட என்று சப்தமிட்டுக் கொண்டிருந்தன. பிரப்பம் தொட்டில், குப்பைக் கூடைபோல் ஒரு பக்கத்தில் முடங்கியிருந்தது. ஓரங்கள் நைந்து பிய்ந்த பாய்களின் சுருள் ஒரு புறம். இவையெல்லாம் போதா வென்று, அழுக்குப் புடவை மூட்டைகள் வேறே! சீ! என்ன ஆபாசம்! அதுவும் பட்டப் பகல் வெளிச்சத்தில் அவைகளின் ஆபாசம் பல மடங்கு அதிகரித்துக் காட்டி யது. அவை எவ்வளவு அருவருப்பா யிருந்தன! இலைகளைப் பார்த்துத்தான், அந்த அல்பன்கூட ஏளனம் செய் யும்படி யாகிவிட்டது. என் குடும்ப வாழ்வின் அந்தரங்கமே அல்லவா அங்கே அம்பலமாகிவிட்டது! இது என் கிரகஸ்தாசிரம கௌரவத்துக்கே ஹானி! அவமானம்!

என் முகம் கோபத்தால் சிவந்தது; வெட்கத்தால் வெளுத்தது. இப்படிக் கோபமும் வெட்கமும் முகத்திலே போராடிக் கொண்டிருக்க, வண்டியை வண்டிக்காரன் இழுத்து வருகிறபோது வரட்டுமென்று பின்னால் விட்டு விட்டு, நான் வேகமாய் முன்னே போனேன். பாதி திறந்திருந்த கதவைக் கடந்து உள்ளே பாய்ந்தேன். அடுப்பிலே கொதித்துக்கொண்டிருக்கும் பாலைக் கிளறி விட்டுக்கொண்டு குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள் மனைவி.

''மூடம், அசடு, வடிக்கட்டின மூடம்!'' என்று, என் மானம் போய்விட்டதற்குக் காரணமான அவளைப் பார்த்து இரைந்தேன்.

அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்

. "சமத்தே! உன் புத்தியைக் காட்டிலும் கழுதைக்குக்கூட.....'' என்று நான் கர்ஜித்தேன்.

முதலில் அவள் கண்களில் பெருத்த ஆச்சரியம்      தோன்றியது; பின்பு ஒரு திகில். இன்னும் ஒரு நிமிஷம் அப்படியே சென்றிருந்தால், அவள் அசந்து கீழே விழுந்திருப்பாள்.

என்ன மூர்க்கத்தனமாய் நடந்து விட்டோம் என்று, அப்போதுதான் என் மனதை உறுத்தியது. அகாரணமாய்க் கோபித்துக்கொண்டு விட்டேனே! அவளைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டு, வெட்கத்தோடு அவள் கண்களை நோக்கினேன். என் மனது இளகிய குறிப்பை, அந்த என் பார்வையிலே அவள் கண்டு கொண்டாள். என் முகத்தையே விழுங்கி விடுவதுபோல் ஆவலோடு பார்த்து, ஒரு புன்முறுவல் பூத்தாள்; அவளுக்கே உரிய அந்த மோகனப் புன்முறுவல், என்னை அடிமை கொண்டு விட்டது. நான் புனர்ஜன்மம் எடுத்தேன்.

பால் தீய்ந்துபோன வாசனை வந்தது. அதை மோப்பம் பிடித்த ஒரு பூனை ஆவலோடு நாற்புறமும் முகர்ந்து கொண்டும், தன் மீசையை நக்கிக்கொண்டும் உள்ளே தோன்றியது.

" அடடா! கவனமில்லாதெ போச்சே! பால் பொங்கி வழிஞ்சுடுத்தே!'' என்று சொல்லி, என் அணைப்பிலிருந்து மனைவி விலக முயன்றாள்.

''பொங்கினால் பொங்கட்டும். அதுதான் நல்ல         சகுனம்'' என்று சொல்லி, அவளை இறுகப் பிடித்துக்கொண் டேன்.

சற்று நேரத்துக்கு முன்னே ஒரே அலங்கோலமாய் எனக்குத் தோன்றிய சமயலறை, இப்போது ஏதோ ஓர் ஆனந்த மாளிகைபோல் காட்சியளித்தது. அடுப்பு ஒரு கனவைப்போல் தள தள என்று ஜொலித்தது; அதிலிருந்து நீல ஜ்வாலை கொழுந்துவிட்டு நின்றது.

குழந்தை, ஏதோ ஆனந்தம் தாங்காமல் கூச்சலிட்டுக் கொண்டு, தன் குழிந்த கைகளைப் பரப்பிய வண்ணம்; பக்கத்திலிருந்த பாயிலே விழுந்து உருண்டது. நாங்கள் இருவரும் அதைப் பார்த்தோம்; உடனே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

கைவண்டி, சரசர என்று சத்தமிட்டுக்கொண்டு வாசலிலே வந்து நின்றது. வண்டிக்காரன் கூப்பிட்டான்.

நாங்கள் பிரிந்து விலகி நின்றோம்.

வீடு மாற்றின தினத்தன்று, நான் ஏன் அப்படி வெறிப்பிடித்தது போல் சீறினேன் என்று, பின்னால் வமதிலி என்னை ஒரு போதும் கேட்கவேயில்லை. நல்ல லெயோக, அவள் கெட்டிக்காரியல்ல. அவளுடைய உள் என்பே எனக்கு அளவில்லாச் செல்வமாகும்.

Comments