Skip to main content

அஞ்சலட்டைக் கதைகள் 18


அழகியசிங்கர்






இது என் 18வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்


கதை 18

குரு பூர்ணிமா நாள் 


இன்று குரு பூர்ணிமா நாள்.  புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி கொரானா காலத்தில் மாட்டிக்கொண்டு விட்டார்.  குரு பூர்ணிமா நாளில் ஆழ்ந்த தியானத்தில் இருக்க வேண்டுமென்று நினைத்தார்.

கொரானா அதிகம் பரவியுள்ள மேற்கு மாம்பலத்தில்தான் சுபூதி தங்கி உள்ளார்.  ஒரு நண்பரின் வீட்டில்.  நண்பர் தில்லிக்குச் சென்றவர் அங்கயே தங்கியிருக்கிறார்.  சுபூதி தனியாக நண்பரின்  வீட்டில் தங்கியிருக்கிறார்.

அந்தத் தெருவில் இரண்டு வீடுகளில் கொரானா தொற்று வந்துவிட்டதால்  சுபூதி வீட்டில் உள்ள வாசல் கதவுகளையும் பூட்டி விட்டார். ஜன்னல்களையும் சார்த்தி விட்டார். 

ஆழ்ந்த தியானத்திற்கு எந்த இடம் சரியாக இருக்குமென்று யோசிக்கும்போது மொட்டை மாடிக்குப் போகலாமென்று தோன்றியது அவருக்கு.

“     வீட்டின் மொட்டைமாடி சரியாக இருக்குமென்று பட்டது.  காலையில் குளித்து விட்டு மொட்டை மாடியில் நுழைந்தார். நிழலாக இருக்குமிடம் எங்கே என்று பார்த்தார்.  ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்தார்.  குரு பூர்ணிமா நாளான இன்று புத்தர் பெருமானை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

உடனே மௌனமானார். தன்னை மறந்தார்.  சூனியத்தில் மூழ்கிவிட்டார். அதனுடன் ஒன்றுபட்டு விட்டார்.

சிறிது நேரத்திற்குப் பின் அவரைச் சுற்றிலும் பூக்கள் சொரிய ஆரம்பித்தன. பூக்களான பூக்கள்.  வாசனை நிரம்பிய பூக்கள்.  பூக்களாலே அவர் மூடப்பட்டு விட்டார்.

அவருக்கு உணர்வு திரும்பியது.  இந்த மொட்டை மாடியில் எப்படி இவ்வளவு பூக்கள்.   சுற்றிலும் பார்க்கப் பார்க்க ஆச்சரியமும் வியப்பும் அடைந்தார். 

அப்போது அசிரியின் குரல் கேட்டது :

"தங்களின் சூனியத்தின் சொற்பொழிவிற்காகப் பூக்களைப் பொழிந்து எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

சுபூதி மேலும் வியப்படைந்து கூறுகிறார் 

"ஆனால் நான் சூனியத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே!"

அசிரி சிரித்தவாறு சொன்னது :

"நிச்சயமாக நீங்கள் சூனியத்தைப் பற்றிப் பேசவில்லை.  நாங்களும் சூனியத்தைப் பற்றிக் கேட்கவில்லை.  ஆனால்  இதுதான் உண்மையான சூனிய மாகும்."

சுபூதியின் மீது மேலும் மலர்கள் மழையைப் போல் சொரிந்து கொண்டிருந்தன.

Comments