அழகியசிங்கர்
திரும்பவும் சந்திக்கிறார்கள். தாவோ தே ஜிங் குறித்து உரை நிகழ்த்துகிறார்கள்.
மோகினி : இந்தப் புத்தகத்தின் பெயர் தாவோ தே ஜிங் . அதில் தே என்பதற்குத் தனி விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. தே என்பது ஒழுக்கம் அல்லது நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது. சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும். இனிய பண்பு அது என்கிறார். 54வது பாடல் இப்படி மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அந்தப் பாடலின் ஒரு பகுதியைச் சொல்ல விரும்புகிறேன்.
தே (ஒழுக்கம்) உனது வாழ்வில் நிலைபெறட்டும்.
நீ உண்மையானவன் ஆவாய்
தே உனது குடும்பத்தில் நிலை பெறட்டும்
உனது குடும்பம் செழிக்கும்
தே உனது நாட்டில் நிலைபெறட்டும்
உனது நாடு வலம் கொழிக்கும்
தே பிரபஞ்சத்தில் நிலை பெறட்டும்
பிரபஞ்சம் இசையமைக்கும்
எனவே
உன்னைப் போல் பிறரைக் காண்..
இங்கு தே என்று குறிப்பிடுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நேர் பேச்சில் இந்த நூலாசிரியருடன் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இதை அடிக்கடி சொல்வார். அப்போது தாவோவே இவரிடம் புகுந்துகொண்டு நேரில் சொல்வது போல் இருக்கும். இதை உணர வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
மோகினி : 49வது பாடலுக்கும் விளக்கம் அளித்திருக்கிறார் ஆசிரியர். அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தாவோ தே ஜிங் நூலில் தாவோ என்பதற்கு வழி என்று பொருள். தே எனில் ஒழுக்கம். ஒழுக்கம் என்பது தன்னலமின்மை என்பதைக் குறிக்கும். இந்த இடத்தில் பாரதியாரிடமிருந்து உதாரணத்தைக் கொடுக்கிறார். தன் செயல் எண்ணித் தவிப்பது தீர வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதி வைத்த பிரார்த்தனையை முன் வைக்கிறார்.
தனக்காக அன்றிப் பிறர்க்காக வாழும் வாழ்க்கையைத் தனது தவமாக அல்ல, இயல்பாகக் கொள்கின்றன தாவோவில் இசைவு கொண்ட உயிர்கள். பிறருக்காக வாழும் வாழ்க்கையை முன்மொழிகிறது தாவோ.
இந்த இடத்தில் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இது சாத்தியம் என்கிறார்.
உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகிறார். அவரவர் இடத்தில் மகிழ்ச்சியுடன் வாழும்படி குறிப்பிடுகிறார்.
பக்கத்து நாட்டை எட்டிப் பார்க்கவும் இவர்கள் பிரியப்படுவதில்லை என்கிறார்.
செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது ஆபத்தின் அறிகுறி. அது சமநிலைச் சமுதாயத்திற்கு எதிரான போக்கு.
எல்லாவற்றிலும் சமநிலையை விரும்பும் விரும்பும் லாவோட்சு சமூகத்திலும் அதைத்தானே
விரும்புவார்.
Comments