Skip to main content

அஞ்சலட்டைக் கதைகள் 19




அழகியசிங்கர்





இது என் 19வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 


அப்பாவுக்கு ஒரு கடிதம்..



மாதவன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினான்.  இரவு பத்து மணிக்கு மேல்.  மாயவரத்தில் அவன் தங்கியிருந்த வீட்டிலிருந்து..ஒரு கார்டில்தான்.

அன்புள்ள அப்பாவிற்கு,

நமஸ்காரம்.  இந்த வாரம் ஊருக்கு வர மாட்டேன்.  சமீபத்தில் உங்கள் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை.  இன்னும் இரண்டு ஆண்டுகளில் நான் பதவி மூப்பு அடைந்து சென்னைக்கு வந்துவிடுவேன்.  

என் மாற்றலுக்காக ஏன் நீங்கள் நம் வீட்டின் எதிரிலிருக்கும் அரசியல் பிரமுகரிடம் கெஞ்சுகிறீர்கள்.  அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  உங்களுக்கு இப்படி கெஞ்சுவது அவமானமாகத் தோன்றவில்லையா? 

என்ன பெரிய வேலை?  நான் இப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்.  அதைவிடக் கொடுமை என்னவென்றால் எங்கள் சேர்மனிடம் ஊர் மாற்றும்படி தமிழில் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறீர்கள்.  இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?  எல்லாம் பதமா சொல்லித்தான் தெரியும்.  நீங்கள் படிக்க அவளிடம் எழுதிய கடிதத்தைக் காட்டினீர்களாம்.  மேலிடத்தில் இருப்பவர்களெல்லாம் இதெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.  அங்கு அந்தக் கடிதத்தை யாராவது பார்த்தார்கள் என்றால், என்னுடைய நண்பர்களாக இருந்தால் கேலியாகப் பேசுவார்கள். இன்னும் 2 ஆண்டுகள்தான்.  பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தால் ஆண்டுகள் ஓடிவிடும்.

இந்தக் கடிதம் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.
                                     (90 வயது அப்பாவிற்கு எழுதிய கடிதம்)



அன்புடன்,

மாதவன்.

Comments