Skip to main content

மஞ்சேரி எஸ்.ஈச்வரனின் மைதிலி என்கிற சிறுகதை...



அழகியசிங்கர்




அபூர்வமாக சில புத்தகங்கள் என் கண்ணில் தட்டுப்படும். அப்படியொரு புத்தகம் என் கண்ணில் தட்டுப்பட்டது. அது  மஞ்சேரி எஸ்.ஈச்வரனின் எழுதிய 'சிங்காரி' என்ற சிறுகதைத் தொகுப்பு.  

இந்தப் புத்தகம் ஜøலை 1946ல் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தைத் தயாரித்தது சக்தி காரியாலயம். 
 
மஞ்சேரி எஸ்.ஈச்வரனின்எல்லா கதைகளையும் ஆங்கிலத்தில்தான் எழுதி உள்ளார்.  அவர் கதைகளை  தி.ஜ.ர மொழி பெயர்த்துள்ளார்.

அவர் கதைகளை மொழிபெயர்த்த விபரத்தை இங்குக் குறிப்பிடுகிறார்.

ஈச்வரனின் ஆங்கிலம், ஆங்கிலேயர் பாராட்டும் ஆங்கிலம்.  தாம் ஆங்கிலத்தில் எழுதிய கதையை, ஈச்வரன் என்னிடம் ஒப்படைத்து விட்டுத் தம்பாட்டுக்குப் போவதில்லை.  என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுவார்.  வரி வரியாக, வார்த்தை வார்த்தையாக, ஆங்கிலத்தில் தாம் இட்ட தமது உள்ள உணர்ச்சியும் கருத்தும் வேகமும் வரணமும் தமிழிலில் வந்தாலன்றி, என்னை அடுத்த வாக்கியத்துக்குப் போக விட மாட்டார்.  தமிழ்ச் சொற்களும் வாக்கிய அமைதியுமே என்னுடையவை.  ஆங்கில மூலத்தின் எதிரொலியை அவற்றிலே எழுப்பியவன் நண்பர் ஈஸ்வர்தான். உண்மையிலே மொழியைப் பெயர்த்த பொறுப்பு மட்டிலுமே என்னுடையது.  கதைகளின் தமிழ் உருவப் பொறுப்பு, அவரையே சாரும். 

ஈச்வரனின் சிறுகதைகள் பெரும்பாலானவற்றிலும், பல சம்பவங்களே இருப்பதில்லை - அசாதாரண நிகழ்ச்சிகள் தான் சம்பவங்கள் என்றால், அவருடைய கதைகளில் சம்பவமில்லை என்று குறிப்பிடுகிறார் தி.ஜ.ர.

மைதிலி  என்ற கதை ஒரு இடத்திலிருந்து வீடு காலி செய்து வேற வீடு செல்கிறார்.  அந்த வீடு திருவல்லிக்கேணியில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஒரு அற்புதமான கதையாக மாற்றி உள்ளார். இது சாதாரண நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சியை ஹாஸ்ய உணர்வுடன் எழுதி உள்ளார்.  இந்தக் கதையைப் படிப்பவர்கள் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விடுவார்.

அவர் குடிபோகும் வீட்டைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.  நவாப் காலத்தில் நிர்மாணமான ஒரு பழைய கட்டிடத்தின் கொல்லை கட்டு என்கிறார்.

திருவல்லிக்கேணிக்குக் குடி வருகிறார்.  திருவல்லிக்கேணியை வர்ணிக்கிறார்.

'கொசு உபத்திரவமும், நடுத்தர வகுப்பாரின்; ஜம்பமும் நிறைந்தது திருவல்லிக்கேணி; என்றாலும் அதனிடத்திலே எனக்கோர் அலாதி அபிமானம்.  ஏனென்றால் ஐம்பது வருஷங்களுக்கு முன், என் தகப்பனார் வழியைச் சேர்ந்த உறவினர் ஒருவர், கிராமத்தை விட்டு, திருவல்லிக்கேணியில் தான் வந்து குடியேறினார்.  பின்னால் வேறு சிலரும் அவரைப் பின்பற்றி வந்து, அங்கங்கே இடம் பிடித்துக் கொண்டார்கள்.  என்றாலும், அவர்கள் சம்பாதித்த பூஸ்திதிகளையும் பணங் காசுகளையும் சேமித்து, ஸ்தாபிதம் செய்து கொள்ளவில்லை.  செய்திருந்தார்களானால், பல்லவ ராஜ பரம்பரையைவிட, அவர்கள் வம்சம் நீடித்திருந்திருக்கும்.  பணங்காசு சேர்ப்பதிலேதான் மட்டம்.  பூர்ணாயுளாவது உண்டா? முப்பது வயதுக்குள்ளே, அத்தனை பேரும் மாண்டு விட்டார்கள்.  நான் மட்டும் அந்தக் குடும்ப கண்டத்திலிருந்து சொற்பக் காய்ச்சலோடு தப்பித்துக் கொண்டேன்...

மனைவியைப் பற்றி வர்ணிக்கிறார் :

என் மனைவி அவ்வளவு கெட்டிக்காரியல்ல.  கெட்டிக்காரத்தனம் அதிகமாய் இருப்பவளிடம், பெண்மையின் கவர்ச்சி போய் விடுகிறது.  கெட்டிக்காரப் பெண், தான் செய்வதே சரியென்று எப்போதும் சாதிப்பாள்.  பெண் இல்லாவிட்டால் புருஷன் வாழவே முடியாது என்பதுபோல் நடப்பாள்.  இந்தத் துர்க்குணத்தை நம்மால் சகிக்க முடியாது.

குடிபோகிற இடத்திற்குப் போவதற்கு கை வண்டியை ஏற்பாடு செய்கிறார்.  இரண்டு முறை கை வண்டி வரவேண்டுமென்று ஏற்பாடு செய்கிறார்.  முதல் முறை அவர் மனைவியும் குழந்தையும் போகிறார்கள். அப்போது வண்டியில் எடுத்துக்கொண்டு போகிற சாமான்களையும் இட்டு நிரப்பி அனுப்பி விடுகிறார்.

இரண்டாவது நடையில் எடுத்துக்கொண்டு போகும்போது இப்படி எழுதுகிறார் :

அவ்விதமே, இரண்டாவது நடையில் கைவண்டியுடன் நான் கடைசியாக வந்து கொண்டிருக்கிறேன்.  வீடு மாற்றும் பரபரப்பிலும் அவசரத்திலும், வண்டியில் எந்தச் சாமானை எப்படிப் போட்டு நிரப்பினேன் என்றே எனக்கு ஞாபகமில்லை.  ஆனால் நடு வழியிலே அதைத் தெரிந்து கொள்ள நேரிட்டது...

தெருவில் சாமான்கள் எடுத்துக்கொண்டு போகும் கை வண்டியைப் பார்த்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஏன் அப்படிச் சிரிக்கிறார்கள் என்று கதைசொல்லி அந்த வண்டியைப் பார்ப்பான்.  

குவிந்திருந்த  சாமான்களுக்கிடையே புகைபிடித்த மண் அடுப்பு இருக்கும்.  அது சாக்கடையாய் வாய் பிளந்து கொண்டிருக்கும்.  அதைப் பார்த்துத்தான் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

வண்டிக்கு முன்னே போய் மனைவியிடம் கோபித்துக் கொள்கிறான் கதைசொல்லி.  காரணமில்லாத கோபம். வெறிபிடித்தவன் மாதிரி நடந்து கொள்கிறான்.  பின் அவளைப் பார்த்தவுடன் சல்லாபமடைந்து கட்டி அணைத்துக் கொள்கிறான்..

அடுப்பில் வைத்த பால் தீய்ந்துபோன வாசனை.  அதை மோப்பம் பிடித்த பூனை ஒன்று வருகிறது.  அப்போதுதான் அதை அவள் கவனித்தாள்.  அவன் பிடியிலிருந்து விலக நினைக்கிறாள்.  அவன் இறுகப் பிடித்திருக்கிறான்.  பால் பொங்கினால் பொங்கட்டும்  என்கிறான். 

கைவண்டி சரசரவென்று சத்தமிட்டுக்கொண்டு வாசலிலே வந்து நின்றது.  வண்டிக்காரன் 
கூப்பிட்டவுடன்தான் சுய நினைவு வந்து பிரிந்து விலகி நிற்கிறார்கள்.

ஆனால் வீடு மாற்றின தினத்தன்று அவன் ஏன் அப்படி வெறிபிடித்தவன் போல் சீறினேன் என்று பின்னால் மைதிலி கண்டுகொள்ளவே இல்லை.  இப்படி முடிக்கிறார் கதாசிரியர்.  நல்ல வேளையாக அவள் கெட்டிக்காரியல்ல.  அவளுடைய உள்ளன்பே எனக்கு அளவில்லாச் செல்வமாகும். 

இந்தக் கதை ஒரு நிகழ்ச்சிதான்.  அந்த நிகழ்ச்சியை விவரிப்பதன் மூலம் சிறப்பாக எழுதிச்செல்கிறார்.  பல விஷயங்களைக் கொண்டு வருகிறார்.  ஒரு இடத்தில் வண்டி வரும்போது தெருவெல்லாம் தேனீக்களைப் போல் ஜனங்களின் நடமாட்டம் என்கிறார். எப்படி ஒரு சாதாரண நிகழ்ச்சி கதையாக மாற்ற முடிகிறது என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.

Comments