அழகியசிங்கர்
பெரும்பாலும் நான் பிரபஞ்சனை ஓட்டல் வாசல்களில் அல்லது பேப்பர் கடை வாசலில், அல்லது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வழக்கம். அந்தத் தருணங்களில் இலக்கிய நண்பர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் இருவரும் பேசுவோம். பிரபஞ்சன் சிறுகதைகளின் மீது காதல் கொண்டவர். புதுமைப்பித்தன் கதைகளை எப்படி ரசிப்பது என்பதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் அவர் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். தொடர்ந்து வாசிப்பது எழுதுவதுதான் அவர் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து இருந்திருக்கிறார்.
பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் சந்திக்கும் போது அவர் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு காட்சி அளிப்பார். பின் இருவரும் சேர்ந்து காப்பி குடிப்போம். அவரைப் பார்த்து நான் விருட்சம் இதழ் பிரதியைக் கொடுப்பேன். உடனே அதற்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்வார். இதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்காமல் கொடுத்தாலும் அவருடைய நல்ல பழக்கம் சிறு பத்திரிகைகளை மதிப்பது.
15.08.2000ஆம் ஆண்டு ந பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழா நடத்தினோம். அதில் சிறப்பாக உரை நிகழ்த்தியவரில் பிரபஞ்சனும் ஒருவர்.
சமீபத்தில் வேடியப்பன், எஸ் ராமகிருஷ்ணன், பவா செல்லதுரை எல்லோரும் சேர்ந்து பிரபஞ்சனுக்கு ஒரு விழா நடத்தினார்கள். முதன் முறையாகத் தமிழ் எழுத்தாளரை கௌரவப்படுத்த பணமுடிப்பு கொடுத்தார்கள். அந்த அரிய நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டு அவருடைய சிறுகதைத் தொகுதியின் மூன்று தொகுதிகளையும் விலைக்கு வாங்கினேன். அவரை நெருங்கிப் பேசலாமென்று நினைத்தேன். கூட்டம் அதிகமாக அவரைச் சூழ்ந்து இருந்ததால் அவரிடம் நெருங்கிப் பேச முடியவில்லை.
முதலில் பிரபஞ்சன் ஒரு தேர்ந்த ரசிகர். அவர் படித்தப் புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் அவர் எழுதி இருக்கிறார்.
இன்று காலையில் அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு வருந்துகிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Comments