Skip to main content

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 1

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 1


அழகியசிங்கர்




இன்று பாரதியாரின் பிறந்த தினம்.  நான் தயாரித்த üமனதுக்குப் பிடித்த கவிதைகள்ý புத்தகத்தின் 4 பிரதிகளை நான்கு கவிதை எழுதுபவர்களுக்கு பாரதி மீது பற்று உள்ளவர்களுக்கு அவர்கள் வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து புத்தகப் பிரதியைக் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  பின் அதை முகநூலிலும் வெளிப்படுத்தலாமென்று நினைக்கிறேன்.  நான் வசிக்கும்  மேற்கு மாம்பலத்தில் அவர்களும் வசிக்க வேண்டும். முடியுமா?
இத் தொகுதியில் வெளியான கவிஞர்களுக்கு இப் புத்தகத்தை இப்போது தரப் போவதில்லை.  சில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு அனுப்ப உள்ளேன்.
இத் தொகுதியில் நான் தேர்ந்தெடுத்த  பாரதியாரின் பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.

கண்ணன் - என் காதலன்

சி சுப்பிரமணிய பாரதி

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தேற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்துவிட்ட பாலம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்க வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?


Comments