Skip to main content

துளி : 18 - மனதுக்குப் பிடித்த கவிதைகள் தொகுதி 1


அழகியசிங்கர்





கடந்த ஓராண்டாக நான் முயற்சி செய்த புத்தகம்தான், 'மனதுக்குப் பிடித்த கவிதைகள்' என்ற புத்தகம்.  போன புத்தகக் காட்சியின்போது ஒரு நிறுவனம் ஒரு கவிதைத் தொகுப்பு நூலைக் கொண்டு வந்திருந்தது.  அதில் பல கவிஞர்களின் கவிதைகளை அந்தப் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  அந்தப் புத்தகத்தை உருவாக்கியவர்களும் என் நண்பர்கள்தான்.  ஆனால் கவிதை என்றால் இதுதான் என்று ஒரு சிலரை புறக்கணித்து ஒரு அதிகாரத்தைச் செலுத்தி உள்ளார்கள்.
அப்போது ஒரு முடிவு செய்தேன்.  நாமே ஏன் இப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வரக்கூடாது என்பதுதான் அது.  நான் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைச் சேகரித்து வைத்திருந்தேன்.   அதில் தோன்றும் கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை மட்டும் தேர்ந்தெடுத்து முகநூலில் குறிப்பிட்டு வர ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் விருட்சம் என்ற பத்திரிகையை கவிதைக்காகத்தான் கொண்டு வந்தேன்.
சிலசமயம் உற்சாகமாகவும், சிலசமயம் மறந்து போயும் இந்தப் பதிவை உருவாக்கிக் கொண்டிருந்தேன்.  என்னுடைய முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்ந்து கொண்டிருந்தது.  முதலில் ஒரு நூறு கவிதைகளைக் கொண்டு வரலாமென்று கொண்டு வரத் துவங்கினேன்.  முடித்தும் விட்டேன். 
நூறு கவிஞர்களுடன் இந்தத் தொகுதி முடியாது என்று எனக்குத் தெரியும்.  அதனால் 100 கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பை முதல் தொகுதி என்று முடித்துள்ளேன்.
இதோ இரண்டாவது தொகுதி திரும்பவும் துவங்க உள்ளேன். முதல் தொகுதியில் விட்டுப்போன கவிஞர்களின் கவிதைகள்  இரண்டாவது தொகுதியிலும் மூன்றாவது தொகுதியிலும் திரட்டப்படும்.   பெரும்பாலும் புதுக்கவிதைகள்தான் இதில் இடம் பெறும் என்றாலும் மரபுக் கவிதைகளையும் சேர்க்க முடிவு செய்துள்ளேள்.  முதல் தொகுதியிலேயே பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளைச் சேர்த்துள்ளேன்.  
கவிதைத் தொகுதிகளிலிருந்துதான் இத் தொகுப்பை உருவாக்கி உள்ளேன்.  பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளைத் தொகுத்தால் இன்னும் அதிகமாகப் போகும்.
நான் ஒவ்வொரு முறையும் கவிதைத் தொகுதிகளில் போய் கவிதைகளைத் தேடும்போது கவிதைகளிலேயே மூழ்கி விடுவேன். படிக்க படிக்க கவிதைகள் அற்புதமான உணர்வை வெளிப்படுத்துவதாகத் தோன்றும்.  ஏன் பரவசநிலையைக் கூட அது உருவாக்கி விடுகிறது.  நிச்சயமாக இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் அந்த நிலையை உணரக்கூடும்.
ஒரு முறை அசோகமித்திரனுடன் அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கவிதையின் ஒரு வரியைக் கூறி ஆனந்தப்பட்டார்.  அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். பொதுவாக நாங்கள் கவிதைகள் குறித்துப் பேச மாட்டோம்.  அவர் சொன்ன பாடலின் வரி பாரதியாருடையது.  
கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய ஒரு வரி 'ஆசை முகமறந்து போச்சே.'  எனக்கும் அந்தப் பாடலில் வரி வித்தியாசமாகப் பட்டது.  ஆசை முகமறந்து போவது என்றால் என்ன ஆகும்.  வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடும்.
அவருடன்  பேசிவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் அந்தக் கவிதையை என் தொகுப்பில் சேர்த்தேன்.  அதேபோல் என் நண்பர் குவளைக் கண்ணன் எழுதிய கவிதை ஒன்று.  அவர் இறந்து போனாலும் அவர் கவிதை மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இத் தொகுப்பில் அவர் எழுதிய கவிதையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  
நாம் எல்லோரும் கவிதைகளைக் கொண்டாடுவோம். பாரதியாரின் பிறந்த தினமான இந்த மாதத்தில் இத் தொகுப்பு வருவது பொருத்தமாக உள்ளது.  பாரதி பிறந்தத் தினம் 11. இன்று இதை டைப் அடிக்கும்போது தேதி 9.
100 கவிதைகள் கொண்ட முதல் தொகுப்பு 150 பக்கங்களைத் தொட்டு விட்டது.  இத் தொகுப்பின் விலை ரூ.120 என்று வைத்திருந்தாலும், ரூ.100க்குத் தர விரும்புகிறேன்.  இத் தொகுப்பு வேண்டும் என்பவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.  குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். தொலைப்பேசி எண்: 9444113205.

Comments