Skip to main content

நேற்று பார்த்த நாடகம்

அழகியசிங்கர்
 




நேற்று மாலை 'பகவான் ஸ்ரீ ரமணர்' நாடகம் பார்த்தேன்.   தி.நகரில் உள்ள முப்பாத்தம்மாள் கோயில் எதிரில் உள்ள கிருஷ்ணகானசபாவில்.  ஒரே கூட்டம்.  உட்கார்ந்து பார்க்க இடம் கிடைக்காது திரும்பித்தான் போகவேண்டுமென்று நினைத்தபோது இடம் கிடைத்தது.  
பாம்பே ஞானம் என்பவர் தயாரித்த நாடகம்.  முழுவதும் பெண்கள் நடித்த நாடகம்.  ஒரு சில பாத்திரங்களில் ஒருவரே பல வேடங்களிலும் நடிக்கிறார். 
உண்மையில் ரமணரைப் பற்றி வரலாறுதான் இந்த நாடகம்.  விறுவிறுப்பாக இரண்டு மணி நேரங்களுக்குக் குறைவில்ûலாம்ல் இந்த நாடகம் நடந்து முடிந்தது.  நாடகத்தில் இசை எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் வந்து செல்கிறது.
இந்த நாடகத்தைப் பார்த்தபோது ஒன்று தோன்றியது இந்த நாடகத்தில் ரமணரைப் பற்றி இவ்வளவு தூரம் சொன்னது நல்லது என்று.  முழு வரலாற்றையே கொண்டுவந்து விடுகிறார்.  
எனக்கு முதலில் நாடகத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை.  அதாவது இலவசமாகப் பார்ப்பதற்கு அனுமதிச்   சீட்டு.   ஒரு நாடகத்தைப் பார்க்க இலவசமாக அனுமதிக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருந்தது.    நாடகம் விட்டு வீட்டிற்கு வரும்போது மட்டும் விருப்பப்பட்டவர்கள் நாடகத்தைப் பார்த்தவர்கள் நன்கொடை அளிக்கலாம் என்று குறிப்பிட்டார்கள்.  
எல்லா நடிகர்களும் சிறப்பாகவே நடித்தார்கள்.  குறை சொல்லும்படி ஒன்றுமில்லை. இதேபோல் திருப்தித் தரும்படியான நாடகங்கள் இன்னும் பல வரவேண்டும்.  
இப்போதெல்லாம் நாடகங்களை யாரும் பணம் கொடுத்துப் பார்ப்பதில்லை என்பது முக்கியமான விஷயமாக  எனக்குத் தோன்றியது.   அந்தக் காலத்தில் பரீக்ஷா நாடகங்களை நான் உயர்வாகவே கருதுகிறேன்.  மேடை நாடககங்ளில் தென்படும் பொதுவான தன்மைகளிலிருந்து,  பரீக்ஷா நாடகங்கள் வித்தியாசமான பார்வையை வைத்திருந்தன.
பொதுவாக என்னிடம் ஒரு கேள்வி ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது.  இப்போதெல்லாம் தமிழில் தரமாக நாடகங்கள் தயாரிக்கப் படுகின்றனவா?
சில ஆண்டுகளுக்கு முன் அம்ஷன்குமார் ஒரு வங்காளி நாடகத்தைத் தமிழில் கொண்டு வந்தார்.  அதுமாதிரியான முயற்சி ஏன் வருவதில்லை என்பதும் தெரியவில்லை.
ஒரு நாடகத்தைப் பார்க்க ஒருவர் ஒரு இடத்திலிருந்து நாடகம் பார்க்கிற இடம் வரை வர பெரும்பாடாக இருக்கிறது. இந்தத் தருணத்தில் நாடகம் பார்ப்பவரை நாடகங்கள் ஏமாற்றக்கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
ரமணரைப் பற்றிய நாடகம் என்பதால் நான் சென்றேன்.  எனக்கு ரமணர் மீது உள்ள அபிமானம் என்பதுதான் ஒரு காரணம்.  நான் எப்போதும் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன்.  அந்தப் புத்தகம் பெயர் 'ரமண விருந்து.'  
அந்தப் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு பகுதியைப் படித்துவிட்டு மூடி விடுவேன்.   அப்புத்தகம் ஒரு கலகலப்பான மனநிலையை உருவாக்கும். 

Comments