அழகியசிங்கர்
இன்று இரண்டு எழுத்தாளர்களின் பிறந்தநாள். ஒருவர் அசோகமித்திரன். இன்னொருவர் வைதீஸ்வரன். இந்த இரண்டு எழுத்தாளர்களையும் எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். வைதீஸ்வரனுக்கு தற்போது 82 வயது ஆகிறது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே நாளில் 82வயது நடந்துகொண்டிருக்கும் போது அசோகமித்திரனுக்கு ஒரு விழா எடுத்தேன். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில். நான் முதன் முதலாக ஒரு எழுத்தாளரின் பிறந்தத் தினத்தை அவர் உயிரோடு இருக்கும்போது கொண்டாடியதும் அந்தத் தருணத்திதான்.
அசோகமித்திரனின் எழுத்தாள நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள். பலரைப் பேச அழைத்தேன். எல்லோரும் வந்திருந்து அசோகமித்திரனுக்குக் கௌரவம் அளித்தார்கள். கூட்டத்தை ரசிக்கவும் பலர் வந்திருந்தார்கள். அக் கூட்டத்தை க்ளிக் ரவி என்ற என் நண்பர் வீடியோவில் படம் பிடித்தார். அதன் ஒரு பகுதியை எல்லோருக்கும் தெரியும்படி இப்போது வெளியிட முடியுமா என்று பார்க்கிறேன்.
நான் நடத்திய எல்லா இலக்கியக் கூட்டங்களையும் விட அது சிறப்பான கூட்டமாக இப்போது எனக்குத் தோன்றுகிறது. அம்ஷன்குமார் அசோகமித்திரன் குறித்து எடுத்த ஆவணப்படத்தை அன்று ஒளி பரப்பினோம்.
இப்போது நினைத்தாலும் அதுமாதிரியான கூட்டத்தை வேறு யாருக்காவது நடத்த முடியுமா என்பது தெரியவில்லை. அந்தத் தருணத்தில் நான் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தேசியமயமான வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
தினமும் டூ வீலரில் வங்கிக் கிளைக்குச் சென்று கொண்டிருப்பேன். எளிதாக பாரதியார் இல்லத்தைக் கூட்டத்திற்காக ஏற்பாடு செய்தேன்.
இந் நிகழ்ச்சியை வீடியோவில் பிடிக்க நண்பர் க்ளிக் ரவியை ஏற்பாடு செய்தேன். அசோகமித்திரனிடம் அளவுகடந்த அன்பு கொண்ட அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
குறைந்த நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் பேசி அசத்தினார்கள். அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றி சிலர் பேசினார்கள். சிலர் அவருடன் கிடைத்த நட்பைப் பற்றி பேசினார்கள். இப்படி எல்லோரும் பேசினோம். அத்தனையும் ஒளிப் படமாய்ப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கிறேன்.
இது மாதிரியான நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ததற்குக் காரணம் பல நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்ததுதான். கூட்டம் ஆரம்பிக்கும் முன், பார்த்தசாரதி கோயிலிருந்து சுவாமி புறப்பாடு ஒரு நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது. ஆரம்பத்தில் அந்த வீடியோ அதிலிருந்து ஆரம்பித்து பின் எல்லோரும் பேசுவதைப் படம் பிடிப்பது வரை முடியும்.
ஒவ்வொருவரும் பேசுவதை இப்போதும் எல்லோரும் கேட்டு ரசிக்கலாம்.
அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியை இப்போது அளிக்க முடியுமா என்று பார்க்கிறேன். இன்று அசோகமித்திரன் இல்லை. ஆனால் என் கனவில் அவர் வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
Comments