Skip to main content

தீராநதியில் வெளிவந்த கட்டுரை



அழகியசிங்கர்
                                                       
                                       


இந்த மாதம் தீர நாதியில் இரண்டு படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன.  தயவுசெய்து தீராநதி வாங்கிப் படிக்கவும்.

அதில் ஒருவர் காசியபன்.  இவரைப் பற்றி நான் என் நேர் பக்கம் புத்தகத்தில் எழுத மறந்து விட்டேன்.  இப்போது எழுதி அக் கட்டுரை தீரா நதியில் வெளிவந்துள்ளது.  நாம் ஒரு புத்தகம் கொண்டு வருகிறோம்.  அப்படி கொண்டு வரும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  ஆனால் அது விற்காமல் இருப்பதை எண்ணி வருத்தமாகவும் இருக்கிறது.  காசியபனின் முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி விற்கவில்லையே என்ற திகில் உணர்வு எனக்கு ஏற்பட்டது உண்மைதான்.  அதன் விளைவாக அக் கட்டுரை எழுதினாலும் அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதைத் தெரியப் படுத்துகிறேன்.  பெரிய கட்டுரை என்பதால் நவீன விருட்சம் லிங்கில் போய்ப் படிக்கவும்.

முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா?..............


என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, இன்று தமிழில் ஒரு வருடத்தில் 5000 கவிதைப் புத்தகங்கள் வருவதாகக் கூறினார்.  என்னால் நம்ப முடியவில்லை.  நிச்சயமாக இருக்காது என்று கூறினேன். அவர் அவர் கூறிய கருத்தில் உறுதியாக இருந்தார். அப்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன் காசியபனின்  முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியைப் பற்றி.  
காசியபனின் அசடு என்ற நாவலை நான் படிக்க ஆரம்பித்தபோதுதான் எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.  திருவனந்தபுரத்திலிருந்து அவர் சென்னைக்கே குடி வந்துவிட்டார்.  அவரும் அவர் மனைவி மட்டும் வயதான காலத்தில் பல இடங்களில் தனியாக குடி இருந்தார்கள்.  அவர் குடும்பத்துடன் உரிமையாகப் பழகியவனில் நானும் ஒருவன்.  அவர் மைலாப்பூரில் குடியிருந்த போது அவர் வீட்டிற்கு அடிக்கடி போகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. 
காசியபன் நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதி உள்ளார்.  அவருடைய அசடு நாவலை நான் திரும்பவும் கொண்டு வந்தபோது அதற்கு லைப்பரரி ஆர்டர் முதலில் கிடைக்கவில்லை.  ஆயிரம் பிரதிகள் அடித்து விட்டோம். என்ன செய்வது என்ற திக் பிரமை என்னை விட காசியபனுக்கு அதிகமாக இருந்தது.  ஏனெனில் அத்தப் புத்தகக் கட்டுகளை அவர் வீட்டுப் பரணிலில்தான் வைத்திருந்தேன்.  பின் நான் அவரை அழைத்துக்கொண்டு லைப்ரரி ஆர்டர் தருகிற அதிகாரியைப் போய்ப் பார்த்தேன். 
üüஇவர்தான் காசியபன்.. அசடு என்ற நாவலை எழுதியவர்,ýý என்று அறிமுகப் படுத்தினேன்.
அந்த அதிகாரி காசியபனைப் பாரத்தவுடன் திகைத்துவிட்டார்.  உடனே லைப்ரரி ஆர்டர் கொடுத்து விட்டார்.  அப்படித்தான் அசடு என்ற நாவலை முதலில் விற்றேன். அதன்பின் இன்னொரு முறை அசடு நாவலை பல ஆண்டுகள் கழித்து புத்தகமாகக் கொண்டு வந்தேன்.  அந்த அசடு நாவல்தான் இன்னும் என்னைவிட்டுப் போகாமல் பாக்கேட் பாக்கேட்டாக இருந்து கொண்டிருக்கிறது.  அதன் பிறகு வியூகங்கள் என்ற நாவலையும் கொண்டு வந்தேன். அதற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்ததால் தப்பித்தது அந்த நாவல். 
காசியபனின் முஹம்மது கதைகள் கணையாழியில் தொடராக வந்தது.  அவற்றைத் தொகுத்து கோணல் மரம் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.   
நான் இங்கே சொல்ல வந்தது அவருடைய நாவல்கள், சிறுகதையைப் பற்றி அல்ல..முடியாத யாத்திரை என்ற அவர் கவிதைத் தொகுதியைப் பற்றி.  காசியபன் கவிதை எழுதுவதில் வல்லவர்.  அவருடைய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வரவேண்டுமென்று விரும்பினார்.  அவரே முடியாத யாத்திரை என்று ஒரு பெரிய நோட்டில் கவிதைகளை வரிசையாக எழுதி வைத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அதைக் கொடுத்து விட்டார்.  üஇதை எப்படியாவது புத்தகமாகக் கொண்டு வா,ý என்று வேண்டுகோள் விடுத்தார்.  
முடியாத யாத்திரை என்ற அவர் கவிதைத் தொகுதியைக் கொண்டு வரும்போது, அவருடைய யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. மொத்தம் 63 பக்கங்கள் கொண்ட இக் கவிதைத் தொகுதியில் முடியாத யாத்திரை என்ற கவிதை ஒரு நீண்ட கவிதை.  அதை இன்று காலை எடுத்துப் படித்தபோது, காசியபன் அவர் மனைவியிடம் பேசுவதுபோல் கவிதை ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அந்தக் கவிதையின் ஒரு பகுதியைத் தருகிறேன் :

                 எங்கள் பழைய வீட்டின்
இருள் அடர்ந்த கூடத்தில்
கற்றூண்கள் பார்த்திருக்க
மின்குழல் வெளிச்சத்தில்
அவளுடைய வெள்ளி மயிர் 
(பண்டு கறுப்பாக இருந்தது)
பளபளக்க
எங்கள் மூக்குக் கண்ணாடிகள் வழி
ஒருவரையொருவர் நோக்கி
இரு நாற்காலிகளில் வீற்றிருக்கிறோம்

என்று சொல்லிக்கொண்டு போகிறார்.  வயதான காலத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் கசடுகளை சுமந்துகொண்டு. 

ஒருமுறை இபியிலிருந்து வந்திருப்பதாகக் கூறி அவர்கள் வீட்டிலிருந்து நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு போய்விட்டான்.  காசியபன் இதையும் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.  இன்னொரு முறை காசியபனும் அவர் மனைவியும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  காலையில் காசியபன் எழுந்து விட்டார்.  மனைவி எழவில்லை.  மனைவி இறந்து விட்டாள் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிகிறது.  என்ன துயரம் இது.  அதன் பின் நான் காசியபனை சென்னையில் பார்க்கவில்லை.  கேரளாவில் இருக்கும் அவர் பெண் வீட்டிற்குப் போய்விட்டார்.  

வியூகங்கள் என்ற அவருடைய நாவலுக்கு ஒரு போட்டோ அனுப்பும்படி கேட்டிருந்தேன்.  அவர் அனுப்பியிருந்தார்.  அந்தப் போட்டோவைப் பார்த்து நான் பயந்து விட்டேன்.  ரொம்பவும் குண்டாக அந்தப் போட்டோவில் காட்சி கொடுத்திருந்தார்.  அவர் மரணம் அடையும் முன்பே கையெழுத்துப் பிரதியாக இருந்த அவருடைய வ்யூகங்கள் நவாலை அச்சில் பார்த்துவிட்டுத்தான் இறந்தார். 

அவர் இறந்தபிறகு அவர் விரும்பியபடி அவருடைய கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரையைக் கொண்டு வந்து விட்டேன்.  63 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் பெரிய பெரிய கவிதைகள் உண்டு.
திருவனந்தபுரத்தில் காசியபன், நகுலன், ஷண்முக சுப்பையா மூவரும்
பலமுறை சந்தித்து கவிதைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

நகுலனுக்கு பதில் கூறவதாக கவிதையைக் குறித்து கவிதை எழுதி உள்ளார்.

சொல்நயமும் பொருள்நயமும்
நன்றாக வந்துவிட்டால்
சித்திரப் படிமங்கள்
சீராக வீழ்ந்துவிட்டால்
மெத்த நல்ல கவிதையென்று
முரசு அடிக்கின்றீர்...

இந்தக் கவிதைத் தொகுதியை நான் டிசம்பர் 2012ல் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்தேன்.  இதே 2017 என்று இருந்தால் 32 பிரதிகள்தான் அடித்திருப்பேன்.  இந்த 300 பிரதிகள் கொஞ்சங்கூட என்னால் விற்க முடியவில்லை. இன்னும் இந்தப் பிரதிகள் என்னிடம் உள்ளன.  

என் வீட்டில் இப் புத்தகப் பிரதிகள் வீட்டின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.  அதனால் கீழ்க்கண்டவாறு இப்புத்தகத்தை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளேன். 

1. பேப்பர் கடையில் எடைக்குப் போடுவது
2. விருட்சம் என்ற பத்திரிகை சந்ததாரர்களுக்கு இலவசமாக பத்திரிகையுடன் அனுப்பி விடுவது
3. என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.  அங்கு ஒரு முறை சுந்தர காண்டம் என்ற ராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார்கள்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம். அதுமாதிரி காசியபனின் முடியாத யாத்திரை புத்தகத்தையும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்
4. ஒவ்வொரு முறை வரும் புத்தகக் கண்காட்கியில் புத்தகம் வாங்க வருபவரிடம் இலவசமாகக் கொடுத்து விடலாம்
5. புத்தகம் விலை ரூ.60.  புத்தகத்திற்காக ரூ. 10 அனுப்புங்கள் 
புத்தகம் அனுப்புகிறேன் என்று அனுப்பி விடலாம்.

காசியபனின் கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி தன் யாத்திரையைத் தொடங்காமல் இருக்கிறது.  ஆனால் காசியபன் என்ற மகத்தான எழுத்தாளரின் யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. 

Comments