இன்று இடம் கிடைத்துவிட்டது
அழகியசிங்கர்
இன்று என் திருமண நாள். திருமணம் நடந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது ஞாபகம் வருகிறது. மைலாப்பூரில் உள்ள சிருங்கேரி மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது. என் அலுவலகத்திலிருந்து 100 பேர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள். பின்னால் சாப்பிட வந்தவர்களுக்கு ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. பலர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்கள்.
ஆகஸ்ட் செப்டம்பர் என்றால் பல திருமணங்கள் நடைபெறுகின்றன. நேற்றும் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன். நானும், கிருபானந்தனும் மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். திருமணம் நடக்குமிடம் கூடுவாஞ்சேரி. அசோக் நகரில் பஸ் பிடித்து தாம்பரம் போய்விட்டோம். பின் சரவணாவில் காப்பி சாப்பிட்டோம். கூடுவாஞ்சேரி பஸ்ûஸப் பிடிக்க நிற்கும்போதுதான் தெரிந்தது, நேற்று செங்கல்பட்டு வரை போகும் மின்சார வண்டிகள் ரத்து செய்யப்பட்டதென்று. ஓலாவிற்காகக் காத்திருந்தோம். 20 நிமிடம் ஆனபின்னும் கார் கிடைக்கவில்லை. வீட்டிற்குத் திரும்ப யோசித்தோம். அவ்வளவு தூரம் வந்து திரும்பிப் போக விருப்பமில்லை. திரும்பவும் முயற்சி செய்தபோது பஸ் கிடைத்தது. கல்யாண மண்டபத்தை அடையும்போது மணி இரவு 8.15 ஆகிவிட்டது. இலக்கிய நண்பரை மேடையில் பார்த்தேன். உற்சாகமான சிரிப்புடன், கனத்த குரலுடன் தென்பட்டார். அவரைப் பார்க்கும்போது ஒரு குட்டி ஜெயகாந்தனைப் பார்ப்பதுபோல் தோன்றியது. அவருடைய பையனுக்குத்தான் திருமணம்.
மேடையை விட்டு கீழே இறங்கியபோதுதான் ஒன்றைக் கவனித்தேன். பயங்கர கூட்டம். சாப்பாடு மேடைக்குப் போனேன். அங்கே இடம் பிடித்து சாப்பிட முடியாது போல் இருந்தது. எல்லா இடங்களிலும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். பின்னால் சாப்பிடப்போகிறவர்கள் நின்றுகொண்டே இருந்தார்கள். கடைசியில் இடம் பிடித்துச் சாப்பிட முடியாது போல் தோன்றியது. கிருபானந்தன் ஐஸ்கிரிம் வாங்கிக்கொண்டார். நான் பீடாவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். பின் பஞ்சு மிட்டாயும், பாப்கார்னும் வாங்கிச் சாப்பிட்டோம். ஒரு கல்யாணத்திற்குப் போய் சாப்பிடாமல் போவது இதுதான் முதல்தடவை எனக்கு.
நாங்கள் அவதிப்பட்டு அங்கு சென்றதால், அவதிப்படாமல் வீட்டிற்குப் போனால் போதுமென்று தோன்றியது. கல்யாணத்திற்கு வந்திருந்த நண்பரின் உதவியால் அவர்கள் காரில் தொற்றிக்கொண்டோம். தாம்பரம் வரை விடும்படி கேட்டுக்கொண்டோம். பெரிய மனசுடன் அவர்கள் எங்களை தாம்பரத்தில் விட்டுவிட்டார்கள். பின் நாங்கள் தாம்பரத்தில் உள்ள வஸந்த் பவன் போய் தோசை சாப்பிட்டோம்.
பஸ் பிடித்து அசோக்நகருக்கு வரும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. எனக்கு இந்தத் திருமணத்திற்கு வந்ததே பயங்கர கனவுபோல் இருந்தது.
என் அலுவலக நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நாங்கள் சாப்பிட உட்கார்ந்துகொண்டு சாப்பிடப் போகிறோம். இலையெல்லாம் போட்டாகிவிட்டது. பாதார்த்தங்கள் பரமாறிக்கொண்டிருந்தார்கள். அப்போது கூரையிலிருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. திகைத்துப் போய மேலே பார்த்தோம். பூனை மூத்திரம். உடனே அருவெறுப்புடன் எல்லோரும் சாப்பிடாமல் எழுந்து விட்டோம்.
இதோ இன்று மாலை என் உறவினர் வீட்டுத் திருமணம். மேடையில் மணமக்களைப் பார்த்து கை குலுக்கி விட்டு, கீழே இறங்கி வந்தபோது சாப்பாடு கூடத்தில் சாப்ப்பிட இடம் கிடைத்து விட்டது. சாப்பிட்டு விட்டு ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன். ஆனால் கல்யாணம் என்றால் சாப்பிடத்தான் போக வேண்டுமா? கல்யாணத்திற்குப் போகாமல் இருந்தால் என்ன? கல்யாண பரபரப்பில் யாருடனும் நாம் பேச முடியவில்லை.
Comments