Skip to main content

எதையாவது சொல்லட்டுமா - 46

பலருக்கு நான் கை பார்த்துப் பலன் சொல்வது வழக்கம்.  அவர்கள் பெரும்பாலும் என்னைக் கேட்பது, 'நான் மேலை நாடுகளுக்குப் போவது உண்டா?' என்பது. எனக்கும் புரியாத விஷயம் மேலை நாடுகளுக்குப் போவது பற்றி.  கையில் எந்த ரேகை அப்படிச் சொல்கிறது என்று யோசிப்பேன்.  நான் ஒரு அரைகுறை கை பார்ப்பவன்.   ஒருமுறை நகுலனுக்குக் கை பார்த்தேன்.  அவர்  தொந்தரவு செய்ததால்.  அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி : ''நான் இன்னும் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன்,'' என்று.  நான் முழித்தேன். கையைப் பார்த்து ஒருவர் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பார் என்று துல்லியமாகக் கூற முடியாது.  நான்,''ஒரு 75வயதுவரை இருப்பீர்கள்,'' என்று சொன்னேன்.  சும்மாத்தான்  சொன்னேன்.  அவர் அதை ஒரு பேட்டியில் வேறு கூறிவிட்டார்.  ஆனால் அவர் 75 வயதுக்குமேலும் இருந்தார்.  என் உறவுக்காரப் பெண்மணி அடிக்கடி என்னிடம் கையை நீட்டி, 'எப்போது மேலை நாட்டிற்குச் செல்வேன்?' என்று  கேட்டுக்கொண்டே இருப்பார்.

இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு.   நானும்  போவதற்கு எல்லா வாய்ப்பும் உண்டு என்று சொல்வேன்.  அதன்படியே அவர் அமெரிக்கா சென்றார்.  முதல் தடவை இல்லை.  பல முறை.  அவருடைய பையனும், பெண்ணும் அமெரிக்காவில் குடியேறிகளாக மாறிவிட்டார்கள்.  உறவினர் ஆண்டுக்கு ஒருமுறை அங்கு போய் 6 மாதம் வரை இருப்பார். இப்போதெல்லாம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.

இப்போதெல்லாம் என் இலக்கிய நண்பர்கள் பலர் அமெரிக்கா டொராண்டா என்றெல்லாம் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். வெகு சுலபமாக அவர்கள் குடும்பத்தில் உள்ள புத்திரர்கள் அல்லது புத்திரிகள் அமெரிக்காவில் லண்டனில் படிக்கப் போய்விடுகிறார்கள். அல்லது இலக்கிய நண்பர்கள் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். என் அலுவலகத்தில் உள்ள பலர் அவர்கள் மகன்களை மகள்களை படிக்க அனுப்புகிறார்கள். இதெல்லாம் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தியமா என்று தெரியவில்லை.  என் நண்பர் ஒருவர் அலுவல் பொருட்டு அமெரிக்கா சென்றதை நடக்க முடியாத விஷயம் நடப்பதாக நினைப்பேன். எனக்கும் அந்த நண்பரைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும்.  ·பாங்கில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலை நாடுகளுக்குப் போவது சாத்தியமே இல்லை என்று நினைப்பேன்.  அமெரிக்கா எப்படி இருக்கும்.  அது புரிபடாத நாடாக இருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன்.  எனக்கு பிரமிப்பு கூடிக்கொண்டே போகும்.  என் சகோதரர் அலுவல் பொருட்டு ஜப்பான் சென்று ஒரு மாதம் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஆனந்தவிகடனில் பணிபுரிந்த மணியன் என்ற எழுத்தாளர் உலக நாடுகள் முழுவதும் சுற்றியவர்.  அதேபோல் ஜெயகாந்தன், அசோகமித்திரன் வெளி நாடுகளுக்கு முன்பு சென்றவர்கள்.

இப்போது பலர் போய் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.  கவிஞர் வைதீஸ்வரன் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் என் புதல்வன் பணிபுரிவதால், நானும் அமெரிக்கா செல்ல ஆவல் கொண்டேன்.  முதலில் பாஸ்போர்ட்டை தடுமாறி வாங்கி வைத்துக்கொண்டேன்.  பின் விசாவிற்கு விண்ணப்பித்தேன்.
என் அலுவலகத்தில் அ¦மெரிக்கா செல்ல அனுமதி கேட்டேன்.  கொடுத்தார்கள்.  ஜூலை மாதம் செல்வதற்கு மே மாதமே அனுமதி பெற்றுக்கொண்டேன்.

பொதுவாக சீர்காழியிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு சனிக்கிழமை வரும்போது என் கால்கள் வீங்கிவிடும்.  அந்த அளவிற்கு பஸ்பயணம் நரகமாக இருக்கும். நெருக்கடியான கூட்டத்தில் அமர்ந்துகொண்டு சித்திரவதைப்பட்டு வரவேண்டும்.  பின் உடனே ஞாயிறு ரயிலில் திரும்பவும் சீர்காழி வர வேண்டும்.  திங்கள் கிழமை அலுவலகம் செல்வது வேண்டா வெறுப்பாக இருக்கும்.  ஆனால் 12ஆம் தேதி ஜூலை மாதம் நான் அமெரிக்கா செல்வதற்கு இரவு 1.30 மணிக்கு தயாராகிவிட்டேன்.  ஊருக்குச் செல்லும் நினைப்பில் 11ஆம்தேதி முழுவதும் அலைச்சல். பயணம் கடுமையாக இருக்கும் என்று பையன் எச்சரித்திருந்தான்.  2 மணிக்கு ஏர்போர்ட் வந்துவிட்டோம் மனைவியும், நானும்.  பின் விமானத்தில் 6 மணிக்கு ஏறினோம்.  அது விமானம் மாதிரி இல்லை.  ஏதோ பெரிய இடமாக இருந்தது.  300க்கு மேற்பட்டவர்கள் நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள்.  விமானம் பெரிய ராட்சதப் பறவைபோல் இருந்தது. நானும், மனைவியும் ஜன்னல் பக்கத்தில் உள்ள இடத்தில் அமர்ந்துகொண்டோம்.  விமானம் மெல்ல மெல்ல நகர்ந்து மேலே மேலே சென்றது.  கிட்டத்தட்ட 16 மணிநேரம் வானத்தில் பறந்து லண்டன் வந்து இறங்கியது.  என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  லண்டனில் வந்து இறங்கியவுடன் திரும்பவும் அமெரிக்காவில் உள்ள மியாமி என்ற இடத்திற்குச் செல்ல அவசரம் அவசரமாக இன்னொரு விமானத்தில் ஏறினோம்.  நாங்கள் காலையில்தாம் ஏறினோம்.  ஆனால் லண்டனில் வந்து இறங்கியபோது திரும்பவும் பகல் 12 மணிதான்.  ஆனால் நாங்கள் பயணம் செய்தது 16 மணி நேரங்களுக்குமேல்.  நான் விமானப் பயணம் முடித்துக்கொண்டு பையன் வீட்டிற்கு வந்தபோது, என் கால்கள் வீங்கவில்லை.

Comments

கடுமையான சிக்கலான வலைப்பின்னல்களிலிருந்து எழுந்து பறந்த உற்சாகம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. ஆனாலும் உங்களுக்கொரு அசௌகரியம்... பணத்தை கையில் எடுக்கிற போதெல்லாம் உங்கள் வங்கிப் பணியின் கடுமை உங்களை நினைவுப் படுத்தும். சந்தோஷமாக பயணத்தை அனுபவியுங்கள்... உங்கள் பார்வையில் அமெரிக்காவை அறிவோம் நாம்.
பயணம் சவுகரியமாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி.
K V SURESH said…
Nice to read.. Please continue...