Skip to main content

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென

ஒரு வலிய திரை

ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று


பசப்பு வரிகளைக் கொண்ட

பாடல்களை இசைத்தபோதும்

வெறித்த பார்வையோடு தான்

துயருறுவதாகச் சொன்ன போதும்

பொய்யெனத் தோன்றவில்லை

ஏமாறியவளுக்கு

இருள் வனத்திலொரு ஒளியென

அவனைக் கண்டாள்


புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன

வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன

அவனது கைகள்

ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன

தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்


அவளது கைகளைப் பிணைத்திருந்தது

அவனிட்ட மாயச் சங்கிலி

விலங்கிடப்பட்ட பறவையென

காலடியில் வீழ்ந்துகிடந்தாள்

சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன

கூரிய நகங்களைக் கொண்ட

அவனது விரல்கள்

பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு

விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்


நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்

இருவரையும் நனைத்தது மழை

அவளது குருதியும் வேதனையின் ஓலமும்

தடயமழிந்து போயிற்று

என்றென்றைக்குமவளது

சாபங்களைச் சுமப்பவனானான் அவன்

Comments

Anonymous said…
//சாபங்களைச் சுமப்பவனானான் அவன் //
சரிதான்..