அழகியசிங்கர்
நாங்கள் இறங்கிய இடம் ப்ளோரிடா. விஸ்தாரமான இடம். என் பையன் இருக்கும் வீட்டிலிருந்து எங்கு செல்வதாக இருந்தாலும் காரில்தான் செல்ல வேண்டும். ஒரு காய்கறி வாங்குவதற்குக்கூட காரில்தான் பயணம் போக வேண்டும். நடந்துபோக முடியாது. ஒரு பெரிய நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பத்து அபார்ட்மெண்டுகள். வீடுகள் ஓடுகளால் வேயப்பட்டிருக்கின்றன. காரை இடது பக்கமாகத்தான் ஓட்ட முடியும். இதுவே இந்தியாவில் உல்டாவாக இருக்கும். தெருவில் கார் செல்லும் இடம் விஸ்தாரமாக இருக்கிறது. ஒரே சமயத்தில் 3 கார்கள் வரிசையாகப் போவதற்கும் வருவதற்கும் ரோடு வழிவகுத்துக் கொடுத்து இருக்கிறது. ஹைவேஸில் ஓட்டுவதாக இருந்தால் வேகமாக ஓட்ட வேண்டும். குறைந்தது 100 மைல் வேகத்தில் வண்டியை ஓட்ட வேண்டும். சிதம்பரத்திலிருந்து சென்னை வரும் தூரத்தை பையன் 2 மணி நேரத்தில் கடந்து விட்டான். அங்கு என்றால் 5 மணி நேரம் மேல் ஆகும். ஆனால் எங்கும் மனிதர்களே தென்படவில்லை. வீடுகள் கார்கள் மட்டும் கண்ணில் படும். மனிதர்கள் யாராவது உள்ளார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
பையனுக்கு வீட்டிலேயே பணி என்பதால், நான், பையன், மனைவி மூவரும் ஒரே இடத்தில் 24 மணி நேரமும் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட Pre retirement rehersal மாதிரி எனக்குத் தோன்றியது. ஆனால் சென்னையில் இருந்தால் அலை அலையென்று அலைந்து கொண்டிருப்பேன்.
@@@@@@@
நான் இங்கு வரும்போது, நிறையப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வரவேண்டுமென்று நினைத்தேன். எடுத்து வந்தால் என் மனைவி என்னுடன் வரமாட்டாள் என்பதால் சில புத்தகங்களை மட்டும் எடுத்து வந்தேன்.
அவசரம் அவசரமாக வந்ததால் கையில் கிடைத்தப் புத்தகங்களை எடுத்து வந்தேன். மேலும் ஏற்கனவே படித்த புத்தகங்களாக எடுத்து வந்தேன். ஒரு புத்தகத்தை நிதானமாக மிக நிதானமாகப் படிக்க அதிகமான நேரம் இங்கு கிடைத்துள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் நாங்கள் எங்கும் சுற்ற முடியாது. நான் பார்த்த 2 இடங்களை பின்பு சொல்லாம் என்று நினைக்கிறேன். நான் இதெல்லாம் கூட எனக்காகத்தான் சொல்கிறேன். மற்றவர்களுக்காகச் சொல்கிறேன் என்பதுகூட ஆனவமாகத் தெரியும். நான் எழுதிப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏன்என்றால் எல்லாம் மறந்து விடுகிறது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு டைரி மாதிரி எழுதிக் கொள்கிறேன்.
2000ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நான் அசோகமித்திரனை அவர் வீட்டில் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். அப்போது அவர் கையெழுத்திட்டு ஒரு புத்தகம் படிக்கக் கொடுத்தார். இந்தப் புத்தகத்தை ரொம்ப நாட்களாக அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஞாபகமாக எனக்கு அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அப்புத்தகத்தின் பெயர் 'மானசரோவர்'. அந்த நாவலை ரொம்ப வருடங்களுக்கு முன்னால் நான் படித்து முடித்திருந்தேன். பின் 2000-ல் கொடுத்தப் புத்தகத்தை நான் திரும்பவும் 2011-ல் அமெரிக்காவில் இன்றுதான் படித்து முடித்தேன். ஆனால் அப்போது படித்தபோது அந்தக் கதையில் ஒரு சித்தரை சந்திப்பதாக நிகழ்ச்சி வரும் என்ற ஞாபகம் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை. திரும்பவும் படிக்கும்போது புதியதாக இந்த நாவலை எடுத்துப் படிப்பதாகத் தோன்றியது.
இந்நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் மாறி மாறி கதையைக் கொண்டு போகிறது. ஒரு காதாபாத்திரம் சத்யன்குமார். இன்னொரு கதாபாத்திரம் கோபால். ஒரு பாத்திரம் ஒரு வட இந்திய சினிமா நடிகர். இன்னொரு பாத்திரம் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். கோபால் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
கோபால் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவம் நம்மை திகைக்க வைக்கிறது. கதையின் இந்தப் பகுதியை blow up பண்ணாமல் கொண்டு செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு வர்ணனையும் மிக முக்கியமானது. கோபால் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பயங்கரத்தை பல அத்ததியாயங்கள் கொண்டு செல்லலாம்.
'சியாமளா குழந்தையோடு என் வீட்டு வாசலில் காத்திருந்தாள். நான் கதவைத் திறக்க, டாக்டரோடு அவளும் உள்ளே போனாள். எங்களைக் கண்டதும் ஜம்பகம் கத்த ஆரம்பித்தாள். அவளுடைய புடவையெல்லாம் நனைந்திருந்தது. இன்னுமா ராஜா தூங்குகிறான் என்று அவன் படுத்திருந்த அறைக்குச் சென்றேன். அவன் ஒரு தலையணையை கொண்டு முகத்தை மூடியபடி படுத்திருந்தான். நான் தலையணையை எடுத்தேன். அவனுடைய மூச்சு நின்றிருந்தது.'
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் எப்படி இருக்கும்? பையனின் உயிரைப் பறிக்கிற அளவிற்கு சியாமளா ஏன் சென்றாள்? கோபாலின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படும்படி அவள் சத்தம் போட்டாலும் அதில் எந்தவித நியாயமும் இல்லை.
இன்னொரு கதாபாத்திரம் சத்யன்குமார். கோபால் மீது அவர் வைத்திருப்பது என்ன? சத்யன்குமார் கோபாலைச் சந்திப்பதையே முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார். கோபால் வாழ்க்கையில் அவர் செய்த தவறை எப்படியும் சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கிறார். கேபால் ஆனால் அதைச் சொல்ல விடுவதில்லை. சுவாமிஜிதான் அதைப் போட்டு உடைக்கிறார்.
'என்ன சொல்ல வேண்டும். கோபால் வீட்டில் இல்லாதபோது நீ அவன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்தாய். அல்லது அவள் உன் கையைப் பிடித்திழுத்தாள். இதை அவன் பெண்ணும் பிள்ளையும் பார்த்து விட்டார்கள். இதைவிட வேறென்ன இருக்க முடியும்?' என்று சொல்லும்போது கதையின் புதிர் விடுபடுகிறது. சத்யன்குமாரின் இந்த நிகழ்ச்சிக்காக கோபால் ஆத்திரப்படவில்லை. அசோகமித்திரன் ரொம்பவும் subtle ஆக எடுத்துக்கொண்டு போன விதம் எனக்குப் பிடித்திருந்தது.
Comments