Skip to main content

கௌதம புத்தர்


அழகியசிங்கர்
'வீலா ஜார்ஜ்' எழுதிய 'கௌதம புத்தர்' என்ற புத்தகத்தைப் படித்தேன். 'நேஷனல் புக் டிரஸ்ட்' மூலம் வந்துள்ள புத்தகம் இது. இந்தப் புத்தகத்தைப் படித்தால் புத்தர் வாழ்க்கை சரிதம் முழுவதையும் தெரிந்து கொண்டு விடலாம். 

நான் இதுவரை புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர முழுவதுமாக புத்தரைப் பற்றி படித்ததில்லை.  அதேபோல் பல கதைகள் நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர முழுவதும் புத்தகங்களாகப் படித்ததில்லை.  உதாரணமாக ராமாயணம், மகாபாரதம், காந்தியைப் பற்றி இப்படியெல்லாம். முன்னதாக வாய்ப்பேச்சில் நமக்குக் கதைகள் தெரிந்து விடும்.  முழுதாகப் படிக்க வேண்டுமென்பதில்லை.  

உதாரணமாக சிலப்பதிகாரம் கதை.   ராமலிங்க அடிகளார், பட்டினத்தார், அருணகிரிநாதர். 

324 பக்கங்கள் கொண்ட 'தர்மானந்த கோஸம்பி' எழுதிய 'பகவான் புத்தர்' என்ற புத்தகத்தை கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிபெயர்த்துள்ளார்.  சாகித்திய அகாதெமி புத்தகம் இது. அதை எப்போது எடுத்து வாசிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.  சுருக்கமாக புத்தரைப் பற்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட இப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.

இதில் உள்ள தகவல்களை இங்கு அளிக்க விரும்புகிறேன்:

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் சாக்கியர்கள் என்ற ஓர் இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுடைய அரசர் சுத்தோதனர்.  அரசி மகாமாயா.  கபிலவஸ்து என்ற அழகிய நகரமே அவர்களது தலைநகரம்.

மகாமாயா கருத்தரித்தாள்.  உரியக் காலம் நெருங்கியதும் ராணி தாய் வீட்டுக்குக் கிளம்பினாள்.  ஆனால் வழியிலேயே, லும்பினி நகரில் சால மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பில் ஒரு  குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  அசித முனிவர் ஒரு நாள் குழந்தையைக் கையில் எடுத்தபடி தாங்கொணாத மகிழ்வுடன் “ நிச்சயமாக இவன் ஒரு மகான் ஆவான் என்று வியந்தார்.  அசிதரின் பேச்சைக் கேட்டு அரசரும் அரசியும் மகிழ்ந்தனர்.  குழந்தைக்கு சித்தார்த்தன் என்று பெயரிட்டனர்.   குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் ராணி இறந்து விட்டாள்.  மன்னரின் இரண்டாவது மனைவியும் மகாமாயாவின் தங்கையுமான பிரஜாபதி சித்தார்த்தனைத் தன் மகனைப் போலவே வளர்த்து வந்தாள்.

எல்லா பண்டிதர்களும் மகன் குருவாகப் புகழ் பெறப் போகிறான் என்று கூறுகிறார்கள்.  மன்னர்களுக்குரிய வீரத்தைக் கடைப்பிடித்து உலகை வெல்ல வேண்டுமென்று சுத்தோதனர் விரும்புகிறார். மகன் துறவியாகாமல் இருக்க வேண்டுமென்றால் துயரங்கள் எதுவும் தெரியாதபடி வளர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்.  மகனுக்காக மூன்று அரண்மனைகள் கட்டுகிறார். நிழல்தரும் நெடிய மரங்கள் சூழ்ந்தது ஒன்று, பெரிய அரங்கங்கள் கொண்ட அரண்மனை   இரண்டாவது, உள்ளேயே பலவித விளையாட்டுகளுக்கு வசதியான மழைக்காலத்துக்கு உகந்தது மூன்றாவது.

இளவரசன் ஆடம்பரத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறான்.  சூடு குளிர் ஏதுமறியாத வாழ்க்கை.  அவனது தேவைகளைக் கவனிக்க நூற்றுக்கணக்கான சேவகர்கள்.  தேவதத்தன் என்ற உறவினனும் அமைச்சர் மகனான காலூதயினும் அவன் தோழர்கள். 

ஒருநாள் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் நடை பயின்று கொண்டிருக்கும்போது, தலைக்கு மேலே அன்னப் பறவைகளின் கூட்டமொன்று பறந்து சென்றது.  எங்கிருந்தோ ஒரு அம்பு விர்ரென்று காற்றைக் கிழித்துக்கொண்டு வந்தது.  ஒரு பறவை துடிதுடித்தவாறு கீழே விழுந்தது.

சித்தார்த்தன் பறவையிடம் விரைந்து சென்று மெல்ல அந்த அம்பை உருவி எடுத்தான்.  காயத்தைக் கழுவி, கட்டுப் போட்டான்.  அப்போது தேவதத்தன் அங்கு வந்து பறவையைத் தன்னிடம் தரச் சொன்னான்.  சித்தார்த்தன் தர மறுத்து விட்டான். 

தேவதத்தன் மன்னரிடம் சென்று, 'நான் வீழ்த்திய பறவையை சித்தார்த்தன் தர மறுக்கிறான்' என்று முறையிட்டான்..சுத்தோதனர் மகனை அழைத்துக் கேட்டார்.  'தேவதத்தன் இந்த அன்னத்தைக் கொல்ல முயன்றான்.  நான் அதைப் பிழைக்க வைத்தேன்.  ஒரு உயிர் அதை அழிக்க முயல்கிறவனிடம் சேர வேண்டுமா அல்லது அதைக்  காப்பாற்ற முயல்கிறவனிடமா?'  சித்தார்த்தன் இந்தக் கேள்வி முக்கியமானது.  மன்னன் அவன் பக்கம்தான் தீர்ப்புக் கூறினான்.  பின்னால் புத்தனாக மாறுவதற்கு முன்னாலேயே சித்தார்த்தனுக்கு உயிர்வதைக் கூடாது என்பது தெரிந்திருக்கிறது.  இந்த நிகழ்ச்சியே அதற்கு ஒரு உதாரணம்.”

                                                                               (இன்னும் வரும்)


Comments

Popular posts from this blog