Skip to main content

நேற்று (17.04.2020) நிஸகர்தத்தா பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பதிவை இன்று வெளியிடுகிறேன்.

நேற்று (17.04.2020) நிஸகர்தத்தா பிறந்தநாளை  முன்னிட்டு இந்தப் பதிவை இன்று வெளியிடுகிறேன்.


ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)


( Sri Nisargadatta Maharaj எழுதிய 1 am that'  என்ற புத்தகமும், அவரைப்பற்றியும் என் நண்பரும், கவிஞருமான எஸ்.வைத்தியநாதன் மூலம் தெரியவந்தது.  என் நண்பர் நேரில் அவரை தரிசித்திருக்கிறார். இப்புத்தக படிக்க வேண்டுமென்று நினைத்தபோதெல்லாம், தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்றும் நினைத்துக் கொள்வேன். என் விருப்பப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)


  ஸ்ரீ நிஸர்கதத்தா மஹாராஜின் வாழ்க்கைக் குறிப்புகள் :

பிறந்ததேதியைக் குறித்து கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெயர் மாருதி. அவருடைய தந்தை, ஷிவ்ராம்பன்ட் ஏழை. அவர் பம்பாயில் ஒரு வீட்டில் பணியாளாகப் பணிபுரிந்தவர். அதன்பின் கான்டல்கானில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயியாகப் பணிபுரிந்தவர். - மாருதி 18வது வயதை அடைந்தபோது, அவருடைய தந்தை மனைவி, நான்கு புதல்வர்கள், இரண்டு பெண்கள் விட்டுவிட்டு மரணமடைந்துவிட்டார். மாருதியுடைய மூத்த சகோதரர் பம்பாயிற்குன்.  வேலை தேடிச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து மாருதியும் சென்றார். மாருதி ஒரு அலுவலகத்தில், மிகக் குறைவான ஊதியத்தில், ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். ஆனால் வெறுத்துப்போய் அந்த வேலையை விட்டுவிட்டு சிறுவர்களின் துணிமணிகள், கையால் தயாரிக்கப்படும் சிகரெட்டுகள் விற்கும் சிறிய வியாபாரத்தைத் துவங்கினார். இந்த வியாபாரம் செழுமையாக வளரத் தொடங்கியது. இந்தச் சமயத்தில், அவருக்குத் திருமணமாகி ஒரு புதல்வனும், மூன்று பெண்களும் பிறந்தார்கள்.

மாருதி எல்லோர் போல சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். நடுத்தர வயது வரை அவருடைய வாழ்க்கையில் எந்த முக்கியத்துவமும் நடைபெறவில்லை. அவருடைய நண்பர்களில் ஒருவரான யாஷ்வந்ராவ் பாக்கர், நவ்நத் சம்பரதயா என்ற ஹிந்து மதத்தின் பிரிவின் குருவான ஸ்ரீ சித்தர்ராமேஷ்வரிடம் அவரை அழைத்துப் போனது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகப் படுகிறது. அந்தக் குரு, மந்திரத்தையும், தியானம் செய்யும் சில வழிமுறைகளையும் உபதேசித்தார். ஆரம்பநிலையில் அவருக்கு சில காட்சிகள் தென்பட்டன. அவரை அறியாமல் சமாதிநிலையை அடைவார். அவருக்குள்ளே ஏதோ பிரளயம் நிகழ்ந்து, அவர் பிரபஞ்ச உணர்வை எய்தினார். மிகச் சாதாரண கடை வியாபாரியான மாருதி பிராகசமுள்ள ஸ்ரீ நஸகர்தத்தா மஹாராஜாவாக மாறினார்.

எல்லா மனிதர்களும் இந்த உலகத்தில் சுய உணர்வோடு இந்த உலகத்தைவிட்டுப் பிரிய விருப்பமில்லாமலிருப்பார்கள். அவர்கள் தங்களுக்காகவே வாழ்வார்கள். தன்னுடைய சுயலாபத்தையும், புகழையும் தேடும் விதமாகவே அவர்கள் வாழ்க்கை இருக்கும். ஆனால் அவதார புருஷர்கள் மற்றவர்களைப்போல் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் பிரபஞ்ச உணர்வை உடையவர்களாக இருப்பார்கள். ஸ்ரீ நஸகர்தத்தா மஹாராஜ் இருவித வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடை வியாபாரத்தை நடத்தினார், ஆனால் லாபம் சம்பாத்திக்கும் வியாபாரியாகச் செயல்படாமலிருந்தார். பின், குடும்பம், வியாபாரம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு காலணி கூட அணியாமல் இந்தியாவின் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றார். இமையமலைச் சாரலில் தன் வாழ்நாள் முழுவதும் கழித்துவிட நினைத்தார். ஆனால் அவ்வாறு இருப்பது சரியில்லை என்று திரும்பவும் பழைய இடத்திற்கு வந்தார். அவர் பிரமாதமான ஆனந்தநிலையில் அமைதியாக வாழ்ந்துவந்தார். அவர் தன்னை உணரும் நிலையை அடைந்துவிட்டார்.

        படிப்பறிவில்லாதவராக இருந்தாலும், அவருடைய உரையாடல் உயர்ந்தத் தரத்தில் உள்ளது. ஏழ்மையில் பிறந்தாலும், செல்வந்தர்களைவிட செல்வந்தர் அவர். மி கிவி ஜிபிகிஜி என்ற இப்புத்தகத்தில் 101 உரையாடல்கள் உள்ளன.

                                            (ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)


                                                                                    நான் எனும் உணர்வு


கேள்வி கேட்பவர் : இது தினமும் ஏற்படக்கூடிய அனுபவம். நாம் விழிக்கும்போது இந்த உலகம் திடீரென்று தோன்றுகிறது. எங்கிருந்து இது வருகிறது? |

மஹாராஜ் : எது வருவதற்கு முன்பும் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். எந்த மாற்றமும் இல்லாத பின்னணியில்தான், எல்லாத் தோற்றமும், தோற்றமின்மையும் ஒரு மாற்றத்தை உருவாக்க முன்வரும்.

கே.கே : விழிப்பதற்குமுன், நான் தன் நிலையற்ற நிலையில் உள்ளேன்.

மஹாராஜ் : எந்த அர்த்தத்தில்? எல்லாவற்றையும் மறந்த நிலையிலா? அல்லது எந்த அனுபவத்தையும் உணராத நிலையிலா? உங்களைப்பற்றி உணராத நிலையில் நீங்கள் இருக்க முடியுமா? நினைவாற்றலின் ஒரு குறைபாடு, இல்லாத நிலைக்கு ஒரு சாட்சியா? உங்கள் இல்லாத நிலையை ஒரு உண்மையான அனுபவமாக உங்களால் தெளிவாகப் பேச இயலுமா? உங்கள் மனம் இல்லை என்று கூட உங்களால் சொல்ல இயலாது. உங்களைக் கூப்பிட்டவுடன் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லையா? விழித்துக் கொண்டிருக்கும்போது, 'நான்' என்ற உணர்வு முதலில் வருவது தெரிகிறதா? தூங்கிக் கொண்டிருக்கும்போதோ மயக்கத்திலிருக்கும்போதோ, விதைபோல் தன்னுணர்வு இருந்துகொண்டுதான் இருக்கும். விழித்துக் கொண்டிருக்கும்போது, அனுபவம் இப்படி ஓடும்: "நான்தான் - உடல் - இந்த உலகத்தில்.” ஒரு உலகத்தில் ஒரு உடல் என்ற சிந்தனை கருத்தாக்கம் தொடர்ச்சியாகவும், ஒரே சமயத்திலும் ஏற்படக்கூடியது. மற்றவர்கள் யாரும் இல்லாத தருணத்தில், 'நான்தான் என்கிற உணர்வு ஏற்படுமா? -

கே.கே : ஞாபகங்கள் மூலமாகவும், பழக்க வழக்கங்கள் மூலமாகவும் நான் எப்போதும் மற்றவராகத்தான் உணருகிறேன். எனக்குத் தெரிந்தது இந்த நான் மட்டும்தான்.

மஹாராஜ் : ஏதோ ஒன்று அறிந்துகொள்ளவிடாமல் தடுக்கிறது, உங்களை. மற்றவருக்குத் தெரிந்த ஒன்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்ன செய்வீர்கள், நீங்கள்?

கே.கே: அவர்களின் உத்தரவு படி நான் அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள முயற்சிப்பேன்.

மஹாராஜ்: நீங்கள் வெறும் உடல்தானென்றோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ என்று தெரிந்து கொள்வது உங்களுக்கு முக்கியமாகத். தோன்றவில்லையா? அல்லது எல்லாமே ஒன்றுமில்லையா? நீங்கள் பார்ப்பதில்லையா? உங்கள் பிரச்சினைகள் முழுவதும் உடல் சம்பந்தப்பட்டதென்று - உணவு, உடை, இருப்பிடம், குடும்பம், நண்பர்கள், பெயர், புகழ், பாதுகாப்பு, வாழ்தல் பிரச்சினைகள் என்பதை? இவையெல்லாம் உடல் சம்பந்தப்பட்டவை என்பதை உணர்ந்தால், எல்லாம் அர்த்தமிழந்து போவதை உணர்வீர்கள். -

கே.கே : நான் உடல் மட்டுமல்ல என்று உணர்வதால் என்ன நன்மை இருக்கிறது?

ம : நான் உடல் மட்டுமல்ல என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. ஒருவிதத்தில் நீங்கள்தான் எல்லா உடல் தொகுதிகளும், உணர்வுகளும், மனங்களும், அதற்கு மேலும். 'நான்' என்ற உணர்வை நோக்கி இன்னும் தீவிரமாகச் செல்லுங்கள், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மறந்துபோன அல்லது தவறுதலாக வைத்துவிட்டப் பொருளை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் மனதில் வைத்துக்கொள்வீர்கள். உடனடியாக 'நான்' என்ற உணர்வு முதலில் வெளிப்படும். எப்போது வருகிறது என்பதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் அல்லது அமைதியாக அதைக்கூர்ந்து கவனியுங்கள். உங்கள் மனம், 'நான் என்ற உணர்வில் அசையாமல் இருக்கும்போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதைத்தான் உங்களால் செய்யமுடியும். எல்லா உணர்வு நிலைகளிலும் நான் என்பது எப்போதும் உங்களுடன் இருக்கும்வரை, -உடல், உணர்வுகள், கற்பனைகள், எண்ணங்கள், உடமைகள் போன்ற பல உங்களுடன் பிணைத்துக் கொண்டிருக்கும். இந்த எல்லாச் சுய அடையாளங்களும் குழப்பத்தை உண்டாக்கும். இவற்றால் நீங்கள் உங்களை அறிந்துகொள்ள இயலாத நிலைக்குச் செல்கிறீர்கள்.

கே.கே : அப்படியென்றால் 'நான்' என்பது என்ன?

மஹா : நீங்கள் யார் என்பதை அறிந்துகொள்ளாமலிருப்பதுதான் சரியாக இருக்கிறது. நீங்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை. அறிவு என்பது தெரிந்த எல்லாவற்றையும் பொதுவாகவோ, தனிப்பட்ட முறையிலோ விஜாரிப்பதுதான்! சுய அறிவு என்பது ஒன்றுமில்லை. ஏன்எனில், முழுவதும் உன்னை நிராகரிக்கும்வரை, உன்னால் அதை விவரிக்க முடியாது. பொதுவாக நீங்கள் சொல்லக்கூடியது, 'நான் இது அல்ல, நான் அது அல்ல என்பதுதான். இதுதான் நான் என்ற அர்த்தத்துடன் நீங்கள் சொல்ல முடியாது. அது ஒரு அர்த்தமும் ஏற்படுத்தாது. நீங்கள் சொல்கிற, 'நான் இது அல்ல', 'நான் அது அல்ல என்பதெல்லாம் நீங்களாக இருக்க முடியாது. நீங்கள் நிச்யமாக இன்னொன்றாக இருக்க முடியாது. உங்களை அவதானிக்கவும்முடியாது, கற்பனையும் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் இல்லாமல் அறிதலும் இல்லை, கற்பனையும் இல்லை . இதயம் உணர்வதை, மனம் நினைப்பதை, உடல் செயல்படுவதை உங்களால் கவனிக்க முடியும். அப்படி உங்களால் அவதானிக்கும் செயலால், நீங்கள் என்ன அவதானிக்கிறீர்களோ அது நீங்கள் இல்லை என்று தெரியவரும். நீங்கள் இல்லாமல் அவதானிக்க முடியுமா? உணரத்தான் முடியுமா? ஒரு அனுபவம் தொடர்பு உடையது. உணர்பவர் இல்லாமல் ஒரு அனுபவம் என்பது உண்மையாக இருக்க முடியாது. உணர்பவர்தான் அனுபவத்திற்கு உண்மையைச் சேர்க்க முடியும். ஒரு அனுபவம் உங்களுக்கு ஏற்படவில்லையென்றால் அதனால் உங்களுக்கு எந்த நன்மை கிடைக்கப் போகிறது?

கே.கே: ஓர் அனுபவத்தை உணர்பவரும், 'நான்-தான்' என்ற உணர்வும் கூட அனுபவமாக இருக்க முடியுமல்லவா?

மஹாராஜ் : நிச்சயமாக. உணரக்கூடிய ஒவ்வொன்றும் அனுபவம்தான். ஒவ்வொரு அனுபவத்திற்கும், ஒரு உணர்பவர் தானாக உருவாகி விடுவார். ஆனால் ஞாபகம் அதன் தொடர்ச்சியின் பிம்பத்தை உருவாக்கும். உண்மையில் ஒவ்வொரு அனுபவத்திற்கும் உணர்பவரும் உண்டு. உணர்பவர் - அனுபவம் உறவின் அடிப்படையில் தன்னை அறிதல் என்பது பொதுப்படையான ஒன்று. தன்னை அறிதலும், தொடர்ச்சியும் ஒன்றல்ல. ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு நிறமுண்டு ஆனால் எல்லா நிறமும் ஒரே வெளிச்சத்திலிருந்து வெளிப்படுகிறது. அதேபோல் எல்லா உணர்பவர்களும் பிரிக்கமுடியாத நுணுகமுடியாத அனுபவத்தில் தோன்றினாலும், ஒவ்வொருவர் நினைப்பும் வேறு வேறு. ஆனால், அடிப்படை சாரத்தில் சமம். காலத்திற்கும், வெளிக்கும் அப்பாற்பட்டு நிகழக்கூடிய எல்லா அனுபவத்திற்கும் இந்தச் சாரம்தான் அடிப்படியான ஊற்று.

கே.கே: எப்படி நான் அதை அடைய முடியும்?

மஹாராஜ் : நீங்கள் அதைப் பெறுவதற்கு போகத் தேவையில்லை. நீங்களேதான் அது. அது உங்களை அடையும், நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால். உங்களுடைய பற்று உண்மையற்றதை நோக்கிப் போகட்டும். உண்மை தானாகவே மெதுவாக வந்து சேரும். நான்தான் இதை நடத்துகிறேன் அதை நடத்துகிறேன் என்ற கற்பனையை - விட்டுவிடுங்கள். அடிப்படையான உணர்வின் சாரத்தை உணருங்கள். அப்போது மகத்தான அன்பு வந்தடையும். அது உங்கள் விருப்பத்தைச் சார்ந்ததுமல்ல முன் தீர்மானித்ததுமில்லை. ஒரு சக்தி எல்லாவற்றையும் அன்பு மயமாக உருவாக்கும். அன்பைப் பொழியக்கூடியதாகவும் இருக்கும்.
65

Comments

Popular posts from this blog