Skip to main content

கௌதம புத்தர் - 7


அழகியசிங்கர்
புத்தர் முதுமை அடைந்தார்.  அவரைப் பார்த்துக்கொள்ள யாராவது வேண்டும் என்கிற நிலையும் உண்டாயிற்று.  குருநாதருக்குப் பணிவிடை செய்யத் துறவியருக்குள் போட்டா போட்டி.

'நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன், குருவே' என்றார் சாரிபுத்ரா.

'அல்ல! அது என் பணி,' என்றார் மொகல்லானா. 

புத்தர் சிந்தித்தார். இருவருமே முக்கியமானவர்கள்.  சங்க நிர்வாகத்துக்குத் தேவையானவர்கள்.  அவர்களைத் தன் உதவிக்கு ஏற்றால் சங்கம் நிலை தடுமாறும்.  அதோடு அவர்களும் வயோதிகர்கள்.  இவ்வாறு எண்ணி தன் உறவினரும் வயதில் இளைஞருமான ஆனந்தனைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனந்தன் புத்தரின் அன்புச் சீடராய் ஆன ஆரம்ப காலத்திலிருந்து இருபது ஆண்டுகள் அவரைக் கவனித்துக் கொண்டார்.  எண்பது வயதிலும் புத்தர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார்.  லிச்சாவிக்குடியரிசின் தலைநகரான வைசாலி நகர் அருகே புத்தர் கடைசியாகத் தங்கி இருந்தார்.  ஆம்பபாலி என்ற நடனமாதின் மாந்தோப்பில் அவர் தங்கி இருந்தார்.  சாக்கிய மகாமுனி தன் தோட்டத்தில் தங்கியிருப்பதறிந்து அவள் அவரை வணங்க வந்தாள்.  அன்றைக்கே அவரைக் காண வைசாலியை அரசுபுரிந்து வந்த லிச்சாவி தலைவர்களும் வந்தனர்.  அவர்களும் அழைத்தனர்.  நான் ஏற்கனவே ஆம்பபாலி வீட்டுக்கு வருவதாக வாக்களித்து விட்டேன் என்று அவர் மறுத்தார்.

கேவலம் ஒரு நாட்டியக்காரிக்காக எங்களை ஒதுக்குவதா என்று அவர்கள் முறையிட்டனர்.  புத்தர் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.  அவரது பார்வையில் எல்லோரும் சமம்.  அவர்களைக் காட்டிலும் ஆம்பபாலிக்கே தன் பரிவும் கருணையும் அதிகமாகத் தேவை என்பது அவர் முடிவு.

வைசாலியில் இருந்த துறவியரைக் காட்டி தனது இறுதிச் செய்தியை அறிவித்தார்.

'ஒவ்வொருவரும் தன்னில் தானே சரணடைக.  சுயக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றுங்கள் அது ஒன்றினால் மட்டுமே உண்மையை உணர முடியும்.  நல்ல வாழ்வு வாழ முடியும்' என்பதே அந்தச் செய்தி.

அங்கிருந்து மல்லர்கள் நாடான ருசி நகரத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயணப்பட்ட புத்தர் வழியல் கண்டா என்ற இரும்புத் தொழிலாளியின் விருந்தோம்பலை ஏற்றார்.  அப்போதைய அவர் உடலநிலைக்கு ஏற்றபடி அது எளிய உணவாக இல்லை.  ஆனால் அந்தக் கொல்லரின் மனம் நோகக்கூடாதென்று புத்தர் அதை ஏற்றுக்கொள்ள, அவர் உடல்நிலை மோசமாயிற்று.  இருந்தும் அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.  ருசி நகரம் சென்றதும் இரு சால மரங்களின் இடையே ஒரு சுத்தமான விரிப்பை விரிக்குமாறு ஆனந்தனிடம் கூறி அங்கு ஓய்வெடுத்தார்.  காணவந்த மல்லர் இனப்பிரப்புக்களைக் கண்டு உரையாடினார்.  அவர்கள் சென்றதும் மீண்டும் களைப்பாறினார்.

அந்த நேரம், சுபத்தர் என்ற சாது அங்கே வந்து புத்தரைக் காண விரும்பினார்.  ஆனந்தன் களைத்த நிலையில் குருநாதர் ஓய்வெடுப்பதைக் கூறினார்.  அதைச் செவியுற்ற புத்தர் அந்தச் சாதுவை அப்போதே சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மரணப் படுக்கையில் கூடத் தன்னிடம் ஆலோசனைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப அவர் விரும்பவில்லை.  புத்தரின் புனித மொழி கேட்டு சுபத்தர் மடத்தில் சேர்ந்தார்.  புத்தரால் சங்கத்தில் சேர்க்கப்பட்ட கடைசித் துறவி இவரே.  புத்தரின் உடல்நிலை மேலும் மோசமானது.

அக்கம் பக்கத்துத் துறவியர் வந்து கூடினர்.  'சாவது இயற்கை. எனவே நல்லோராய் வாழுங்கள்' என்று புத்தர் இறுதி போதனை செய்தார்.  மகாகுரு காலமானார்.  அவர் ஆன்மா நிர்வாணமுற்று விடுதலை பெற்றது.

இன்று, அவர் பரிநிரவாணமடைந்து இரண்டாயிரத்து ஐந்நூறு  ஆண்டுகளுக்குப்பிறகும், மக்களுக்கு அவர் போதித்த சன்மார்க்கத்தின் சின்னமான தர்மசக்கரம் நமது தேசியக் கொடியை அழகு செய்கிறது.

அவர் மரணத்துக்குப்பின் அவர் போதனைகள் பிற நாடுகளுக்கும் பரவின.  அசோக சக்கரவர்த்தியின் ஆர்வம் இதற்குப் பெரும் காரணமாகும்.  புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரம் முழங்கலாயிற்று.  இதன் பொருள் இதுவே. 
 
புத்தரைச் சரணடைகிறேன்
தர்மத்தைச் சரணடைகிறேன்
சங்கத்தைச் சரணடைகிறேன்.                           

Comments

Popular posts from this blog