Skip to main content

கௌதம புத்தர் - 5அழகியசிங்கர்
கபிலவஸ்துவையும் விட்டுத் தான் கண்டறிந்த உண்மைகளை எங்கும் பிரசாரம் செய்ய புத்தர் புறப்பட்டார்.  சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய தரிசனத்துக்காகவும், அவருடைய பேச்சைக் கேட்கவும் வந்து கூடினர்.  பலர் அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டு புத்த மதத்தில் சேர்ந்தனர்.

புத்தரின் பிரிய மாணவர் ஆனந்தனுடன் புத்தர் அங்குத் தங்கியிருக்கும்போது வழக்கம் போல் ஆனந்தன் ஒரு நாள் காலை எழுந்து பிச்சை எடுக்க நகரத்தினுள் திருவோடு ஏந்தியபடி புகுந்தார்.
திரும்பும்போது அவருக்குத் தாகமெடுத்தது.   அருகிலிருந்து கிணற்றுக்குப் போனார்.  தாழ்த்தப்பட்ட சண்டாள ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் நீரெடுத்துக் கொண்டிருந்தாள்.

"தங்கையே, தாகமாயிருக்கிறேன்.  தண்ணீர் தருவாயா?"  இதைக் கேட்ட அவள் வியப்போடு "நான் சண்டாளப் பெண்.  தெரியாதா?" என்றாள்.

"அம்மா, உன் குடி என்ன, கோத்திரமென்ன என்றா நான் கேட்டேன்.  உன்னிடம் தண்ணீர் தாராளமாக இருந்தால் எனக்கும் கொஞ்சம் கொடு.  தாகமாயிருக்கிறேன்," என்றார்.

சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகளை புத்தர் ஏற்கவில்லை.  குறிப்பாகத் தீண்டாமைப் பழக்கத்தை மனித இனத்துக்கே அவமானமென அவர் கருதினார்.  தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட சண்டாள இனத்தில் பிறந்த அந்தப் பெண்ணிடம் ஆனந்தனைத் தண்ணீர் கேட்க வைத்தது அந்தக் கொள்கைதான்.

தன் கருத்தைத் தெளிவுபடுத்த சில சமயங்களில் அவர் கதைகளையும் உவமைகளையும் பயன்படுத்தினார்.  தினமும் போல் ஒருநாள் புத்தர் காலையில் பிச்சைக்குப் புறப்பட்டார்.  ஒரு அறிவில்லாத இளைஞன் அவரை காரணமே இல்லாமல் திட்டினான்.  புத்தர் அமைதியாக, மகனே! ஒருவன் தனக்குத் தரப்பட்ட அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது யாருக்குச் சொந்தம்? என்று கேட்டார்.  

அப்போது அது கொடுத்தவனையே மீண்டும் சேரும் என்று சொன்னான் அந்த இளைஞன்.  

நீ என்னை திட்டினாய், நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  எதிரொலி ஒலிக்குச் சொந்தம், நிழல் அந்தந்தப் பொருளுக்குச் சொந்தம்.  இல்லையா?  அதேபோல் தீய செயல்கள் அவற்றைச் செய்தவனையே சென்றடையும் என்றார் புத்தர்.

இன்னொரு கதை.  வாரணாசி மன்னன் கதை.  வாரணாசி மன்னன் மிகவும் பலம் வாய்ந்தவன்.  கோசலநாட்டின் பலவீனத்தைக் கண்டு அவன் அதைத் தாக்கினான்.  ராஜாவும் ராணியும் அஞ்சி ஓடி வாரணாசியில் ஒரு மண்பாண்டத் தொழிலாளி வீட்டில் வாழ்ந்து வருகையில் அங்கு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.  திகவு என்று பெயர் வைத்தனர்.  திகவு சிறுவனாக இருக்கும் பொழுதே அவர்கள் சரணாகதியாக இருந்ததை காசிராஜன் கண்டுபிடித்து அவனது தாய்தந்தையருக்கு மரண தண்டனை விதித்தனர்.  தப்பித்துக் கொண்ட திகவு கொலைக்களம் சென்றான்.  அவனது தந்தையின் இறுதி வார்த்தைகள். 'வெறுப்பு வெறுப்பை அகற்றாது.  வெறுப்பைத் தவிர்ப்பதன் மூலமே வெறுப்பை நீக்கலாம்' என்பதே.

திகவு வளர்ந்து பல கலைகளும் கற்று காசிராஜன் அரண்மனையிலேயே வேலையில் சேர்ந்தான்.  விறுவிறுவென்று நம்பிக்குரிய ஒரு பதிவியிலமர்ந்த அவனை மன்னனே மிகவும் நேசித்தான்.  ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற மன்னன் தன் குழுவினரைப் பிரிந்து விட்டான்.  அவனும் திகவும் மட்டும் தனித்து விடப்பட்டனர். களைப்பினால் மன்னன் இவனது மடிமீது தலை வைத்து உறங்கிப்போனான்.

இதற்குத்தான் திகவு இத்தனை நாள் காத்திருந்தான்!  உறையிலிருந்து உருவிய வாளுடன், 'என் பெற்றோரை நீ கொன்றாய்.  இப்போது என்னுடைய நேரம் வந்து விட்டது,' என்று முழங்கினான்.

ஆனால் மின்னலைப்போல் தந்தையின் இறுதி மொழிகள் நினைவு வந்தன.  வாளைத் திரும்பவும் உறைக்குள் போட்டுவிட்டு, நடுங்கிய மன்னனை திகவு அரண்மனைக்கே அழைத்து வந்தான். 

இந்தப் பெருந்தன்மையான மன்னிப்பு மன்னனை உலுக்கி விட்டது.  மனம் வருந்தி, கோசல மன்னனிடம் கைப்பற்றிய அனைத்தையும் திருப்பிக்கொடுத்து திகவுக்கு தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான்.  திகவு போல மன்னிக்கும் குணம் வேண்டுமென்று புத்தர் மக்களுக்கு உபதேசித்தார்.  

Comments

Popular posts from this blog