Skip to main content

உஷாதீபனின் பால் தாத்தா


அழகியசிங்கர்





நான் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணி பத்திரிகை வாங்குவது வழக்கம்.  அதில் குறைந்தபட்சம் இரண்டு கதைகள் தென்படும்.  

பத்திரிகை வாங்கினாலும் உடனே படிக்க மாட்டேன்.  பிறகு படிக்கலாமென்று வைத்துவிடுவேன்.  அப்படியே படிக்காமல் மறந்தும் போய்விடுவதுண்டு.  குறிப்பாகக் கதைகள்தான் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன். இதுமாதிரி தினமணி கதிர் பத்திரிகைகளை அடுக்கடுக்காக வீட்டில் வைத்திருக்கிறேன்.  

என்னிடம் இப்படியே பல கதைகள் சேர்ந்து விட்டன.  ஒரு கதையைப் படிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு மேல் போகாது.  ஆனாலும் படிப்பதில்லை.  என்ன காரணம்?  பிறகு படிக்கலாம் பிறகு படிக்கலாமென்று தள்ளிப் போடுவதுதான் காரணம். 

இப்போது கொரோனா நேரமாக இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது.  ஒரு தினமணி கதிர் இதழை முழுவதும் படித்து விடலாம்.  அல்லது குறைந்த பட்சம் கதைகளாவது படிக்கலாம்.

வழக்கம்போல் 19.04.2020 அன்று வந்த தினமணி கதிர் இதழ் மிகக் குறைவான பக்கங்களுடன் அச்சிடப்பட்டிருந்தது.   16 பக்கங்கள்தான் பத்திரிகையே.

அதில் 'உஷா தீபன்' எழுதிய 'பால் தாத்தா' என்ற கதை வந்திருந்தது.  எடுத்து வைத்துக்கொண்டேன்.  படித்து விடுவதென்று.  சில நிமிடங்களில் படித்து முடித்து விட்டேன்.  இன்றைய சூழ்நிலையில் சிறுகதைகள் எழுதுவதில் பலர் வல்லவர்களாக இருக்கிறார்கள். யாரும் இதையெல்லாம் கவனிப்பதில்லையே என்று எனக்குத் தோன்றும். 

பலர் சின்ன சம்பவத்தை வைத்துக்கொண்டு எளிதாகக் கதை எழுதி விடுகிறார்கள்.  ஒரு கதையைப் பற்றிப் பேசும் போது கதையின் தன்மையைப் பற்றித்தான் பேசவேண்டும்.  இந்தக் கதை இலக்கியத் தரமானதா இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை என்று தோன்றுகிறது.

'உஷாதீபன்' எழுதிய பால் தாத்தா என்ற கதை ஒரு நேர் வர்ணனை.  நேர் வர்ணனை செய்பவன் ரமணன்.  அவன் மூலமாக மொத்தக் கதையையும் நம் முன்னால் உஷாதீபன் சொல்கிறார்.  

தினமும் காலையில் முனைக் கடைக்குப் போய் பால் வாங்கிக்கொண்டு வருகிறான்.  கடையில் வாங்கிக்கொண்டு வரும் பால் நாலைந்து முறை திரிந்து விடுகிறது.  இது உறுத்தலாகப் படுகிறது ரமணனுக்கு.  ஏனென்றால் அவன் மனைவி உமா கரித்துக் கொட்டுவாள்.  ஏன் பால் திரிந்து விடுகிறது என்று ரமணனுக்குத் தெரியவில்லை.  

எப்போதும் பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்துதான் காய்ச்சுவான்.  வீதி கார்ப்பரேஷன் தொட்டியிலிருந்து குடத்தில் பிடித்து வரும் தண்ணீரைத்தான் கலப்பான்.  25 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வாங்கிக்கொண்டு வரும் தண்ணீரைக் கலக்கமாட்டான். ஏனென்றால் மினரல் தண்ணீரைக் கலந்ததால் ஒரிரு முறை பால் கெட்டுவிட்டது.  அது சரிப்பட்டு வராது என்று ரமணன் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை.  பாலை காய்ச்சப் பயன்படுத்தும் பாத்திரம் மீது அவனுக்குச் சந்தேகம் வரும்.  அலம்பிய பாத்திரத்தில் க்ளீனிங் பவுடர் படிந்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறான்.  அதனால் பால் திரிய வாய்ப்புண்டு என்றும் முடிவு செய்கிறான்.  ஏன் திரிந்து போகிறது என்று எதையுமே அவனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.  இந்தச் சம்பவமெல்லாம் காலை 4 மணிக்கு நடக்கிறது. இங்கே காலை நேரத்தைப் பற்றி உஷாதீபன் இப்படி வர்ணிக்கிறார்.

........'ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் இப்படி ஹாரணை அலற விடத்தான் வேண்டுமா? ஒரு காலத்தில் நகர்ப் பகுதிக்குள், ஏர் ஹாரன் உபயோகிக்கக் கூடாது என்றிருந்தது.  இப்போது அந்தக் கண்டிஷனெல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சு போலும்.  தண்ணி லாரி வருவதற்கு அடையாளமாய் ஓரிரு முறை அடித்தால் போதாதா?  அந்த ஓரிருமுறை கூட சகிக்க முடியாதுதான். மென்னியைப்  பிடிப்பது போல அலறல்'.....

உண்மையில் பால் திரிந்து போவதைப் பற்றி ரமணன் பயப்பட வில்லை.  உமாவின் ஏச்சுக்குத்தான் பயப்படுகிறான்.  

உமா சண்டை போடும்போது பால் வாங்குகிற கடையை மாற்றச் சொல்கிறாள்.  மாற்றுவதால் கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும். 

..'.ஆனா நீங்க போக மாட்டீங்க..சோம்பேறித்தனம்.  காலை வீசி நடந்து போயிட்டு வந்தா நல்லதுதான?  தெனமும் வாக்கிங் போகிற மாதிரியும் ஆச்சு'...என்கிறாள்.

ஒவ்வொரு முறையும் இதே ஆலாபனை இதுமாதிரி அவர்களுக்குள் சண்டை வரும்போது அந்தக் கிழவர் ஞாபகம் ரமணனுக்கு வந்து கொண்டிருக்கிறது. வீடுகளுக்குப் பால் விநியோகிக்கும் கிழவன்.  87 வயதாகும் கிழவரைப் பார்க்கும் ரமணனுக்கு தந்தை ஞாபகம் வருகிறது.   

..'.அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன்...பார்த்த நாளிலிருந்தே இவனுக்குத் தன் தந்தையின் நினைவு வந்து கொண்டே யிருக்கிறது.  அவரும் இப்படித்தானே? ஐம்பாதாண்டுகளுக்கும் குறையாமல் இந்த விடிகாலை நாலு மணிக்கு எழுந்தவர்தானே..அவரும்? எழுபத்தைந்து வயதுக்கும் மேலே உழைத்து ஓடாய்ப் போனவர்தானே? பக்கவாதம் வந்ததால்தானே படுத்தார்...இல்லையெனில் ஆளை இருத்த முடியுமா?...' என்று உஷாதீபன் விவரிக்கிறார்..

அதோ பால் தாத்தா போய்க் கொண்டிருக்கிறார்.  இந்த உலகம் இன்னும் இம்மாதிரித் தியாக சீலர்களால்தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

தாத்தாவிடம் பால் கொண்டு வந்து போடச் சொல்கிறான் ரமணன்.  ரூ.40க்கு இரண்டு பால்  பாக்கெட்டுகளை. தாத்தா முகத்தில் மகிழ்ச்சி.  அந்தப் பொக்கைவாய்ச் சிரிப்பு இவனை ஆட்கொள்கிறது. 

மறுநாள் காலை நாலரை மணிக்கு ரமணன் தாத்தா வருகிறாரென்று பார்த்து பால் வாங்க கீழே போகிறான். 

தாத்தா தினமும் பால் கொண்டு வந்து போடுவதற்கு மனைவியும் அங்கீகாரம் கொடுக்கிறாள்.  மனைவி சொல்கிறாள்...'சொல்லப்போனா இந்த ஏரியா ஜனங்கள் பூராவும் அவரை ஆதரிக்கணும்.  அதுதான் அவர் உழைப்பை மதிக்கிறதன்மை.  அப்பத்தான் நல்ல ஜனங்கள்னு அர்த்தம்..பத்து ரூபாய் சேர்த்து ஐம்பதாகக் கொடுங்கள்,' என்கிறாள் மனைவி

'அவளுடைய விடிகாலைப் பேச்சு என்னைக் குளிர்விததது,' என்கிறான் ரமணன்.  இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு ரமணனுக்கும், மனைவிக்கும் சண்டை வருவதில்லை. 

பக்க்த்து வீட்டு மாமி உமாவிடம், கரண்டால் பால் திரிஞ்சு போயிடறது என்கிறாள். இதைக் கிண்டல் செய்கிறான் ரமணன்.  'மூணாமத்த ஆள் சொன்னாத்தான் நம்ப அருமை தெரியும் போஙூருக்கு..கிரகம்டா சாமி' என்று.

கற்புர புத்தி..பக்கத்தாத்து மாமி சொன்னதும் கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாளே...திரியாத தெளிந்த மனசு என் அன்பு மனைவி உமாவுக்கு..அதற்குப் பின் வாயே திறக்கவேயிலலையே..சார்?  என்கிறான் ரமணன் 

கதை இங்கே முடிந்து விடுகிறது.  ரன்னிங் கமெண்டரி மாதிரி உஷா தீபன் இந்தக் கதையை எழுதியிருப்பது சிறப்பாகப் படுகிறது.  ஒரு சாதாரண விஷயம்தான்.  எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது.  

Comments