அழகியசிங்கர் நான் ஒரு புத்தக விரும்பி. எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி விடுவேன். பெரும்பாலும் பிளாட்பாரத்தில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கிக் குவித்துவிடுவேன். அதே சமயத்தில் பதிப்பகத்திற்கும் சென்று புது புத்தகங்களை வாங்குவேன். இப்படி நான் புத்தகங்களை வாங்கி சேர்ப்பதில்தான் எனக்கு ஆபத்தாக இருக்கிறது. சிலர் என்னிடம் புத்தகம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனக்குப் பெரிய மனது கிடையாது. அவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க. நான் எத்தனையோ சிரமப்பட்டு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலிருந்து அசோக் நகர் பேப்பர் கடை வரைக்கும். பங்களூர் சென்றால் ப்ளாசம்ஸ் போய்ப் புத்தகங்கள் வாங்கி வருகிறேன். என் மனைவி என்னுடன் வரும்போது புத்தகம் எதுவும் வாங்கக் கூடாது என்று கட்டளை இடுவாள். புத்தகக் காட்சி வந்தால் இன்னும் குதூகலமாகி விடுவேன். தேடித்தேடிப் போய் புத்தகங்கள் வாங்குவேன். நான் புத்தகமும் அச்சிடுகிறேன். என் புத்தகங்களையும் விற்கிறேன். ...