Skip to main content

திருக்குறள் சிந்தனை 7


அழகியசிங்கர்





காலையில் எழுந்தவுடன் ஒரு குறளைப் படிக்கலாம் என்று எண்ணிப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படிப் படிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. சில குறள்கள் படிக்கும்போதே நேரிடையாகவே நமக்குப் புரியும். சில குறள்களைப் படிக்கும்போது உரையின் தயவு நமக்குத் தேவைப்படும். பரிமேலழகர் உரையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் சிரமம் என்று என் நண்பர்கள் பலர் கூறி உள்ளார்கள். என்னிடம் பரிமேலழகர் உரை இல்லாததால் நான் முயற்சி செய்யவில்லை. இப்போது இந்தக் குறளைப் பார்க்கலாம்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்குவமை இல்லாதான் யார்? கடவுள் என்கிறார் நாமக்கல் கவிஞர். அந்தப் பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவு ஆசைகள் குறைந்து மனக்கவலை இல்லாமல் வாழலாம் என்கிறார் . நாவலரோ அறிவாற்றலில் சிறந்த சான்றோர் என்கிறார். அந்தச் சிறந்த சான்றோர் யார் என்று கண்டுபிடித்து ஆசைகளைக் குறைத்துக்கொண்டு அவர்கள் வழியில் சென்று மனக்கவலையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இதில் கடவுளையோ சான்றோரையோ நான் சொல்ல விரும்பவில்லை. மனக்கவலை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஆசைகளைக் குறைத்துக்ùôள் என்று பூடகமாக திருவள்ளுவர் சொல்கிறார் என்று நினைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதனால் திருவள்ளுவர்தான் சான்றோர். திருவள்ளுவர்தான் கடவுள். இக்குறளில் எனக்குப் பிடித்த வரி : மனக்கவலை மாற்றல் அரிது.


Comments