அழகியசிங்கர்
இந்த இரண்டு அமைப்புகளும் இந்தியாவில் உள்ள பல மொழிகளிலிருந்தும் தமிழில் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன. பல தமிழ் அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் இவற்றைச் சாத்தியமாக்கி உள்ளார்கள். இவர்கள் கொண்டு வருகிற புத்தகங்களும் மிகக் குறைவான விலையில் உள்ளன.
நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். முதல் பதிப்பு 1975ஆம் ஆண்டு. புத்தகம் பெயர்.கறையான். வங்காளத்தில் குண்பேகா. எழுதியபர் சீர்ஷேந்து முகோபாத்யாய. இது இவருடைய முதல் நாவல். 1971ஆம் ஆண்டு எழுதிய இவருடைய இன்னொரு நாவலான பாரா பாரும் என்ற வங்காளி நாவலையும் படிக்க விரும்புகிறேன். ஆனால் மொழி பெயர்க்கப்பட்டதா என்பத தெரியவில்லை. கறையான் என்ற நாவலை வங்காளி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகத்தை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன். நேரிடையான மொழிபெயர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்புத்தகத்தை ரசித்துப் படித்தவன். திரும்பவும் எடுத்துப் படிக்கும்போது நான் ரசித்த நாவல்களில் இது ஒன்று என்ற எண்ணம் இருந்தது தவிர என்ன மாதிரியான நாவல் என்பது ஞாபகத்தில் இல்லை.
திரும்பவும் இந்த நாவலை எப்படியாவது படித்து முடிக்க வேண்டுமென்று எடுத்துப் படிக்கும்போது ஒவ்வொரு பகுதியாக இப் புத்தகம் பொடிப் பொடியாக கிழிந்து விடுகிறது. இப்போது எடுத்துப் படிக்கும்போது இப் புத்தகத்தின் அட்டைப் படம் போய்விட்டது. உடைந்து உடைந்து போயிற்று, இப்போதோ பக்கங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் எப்படியாவது படித்துத் தீர வேண்டுமென்று தீர்மானித்துள்ளேன். ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். மடிக்கக் கூட இல்லை. படிக்கப் படிக்க சீக்கிரம் முடிந்து விடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் 100 பக்கங்கள் வரை முடித்துவிட்டேன். இன்னும் 46 பக்கங்கள்தான் படிக்க வேண்டும். படித்துவிட்டு ஜாகக்ரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று சென்னையில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகம் சென்று இந்தப் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டேன். திரும்பவும் அச்சிடப் போவதாக சொன்னார்களே தவிர எப்போது என்று சொல்லவில்லை.
இந்த நாவலில் வரும் ஷ்யாம் வித்தியாசமானவன். அவன் அலுவலகத்தில் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தவன். அவன் அப்படியே தொடர்ந்து பணியில் இருந்தால், ஒரு வீடு வாங்கிவிடுவான். இன்னும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வான். அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஆனால் அவனைவிட அதிகாரி ஒருவன், ஒருநாள் கோபத்தில் ஷ்யாமை வேசி மகனே என்று திட்டி விடுகிறான்.
இதை ஏதோ ஆத்திரத்தில் சொல்லிவிட்டான் என்று விட்டுவிடலாம். ஆனால் ஷ்யாமால் அதைத் தாங்க முடியவில்லை. அவன் யோசித்து வேலையை ராஜிநாமா செய்து விடுகிறான். இப்படிப் போகிறது இந்தக் கதை.
வேற்று மொழியிலிருந்து குறிப்பாக இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளிலிருந்து நமக்கு இதுமாதிரியான மொழிபெயர்ப்பு நூல்கள் படிக்கக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நம் அறிவு விலாசமடையும். ஆனால் நம் படைப்புகள் மற்ற மொழிகளுக்கு மாற்றப்படுகிறதா என்பது நமக்குத் தெரியாது.
பரிசுப் பெற்றவர்களின் படைப்புகளைத்தான் இந்த நிறுவனங்கள் மொழிபெயர்க்கும். ஆனால் பரிசு எதுவும் கிடைக்காத எத்தனையோ திறமையான படைப்பாளிகளின் படைப்புகள் நமக்குத் தெரியாமல் போகத்தான் போகும். இது ஒரு குறைதான் என்றாலும், இந்த அளவிற்காகவாவது இந்தத் தேசிய நிறுவனங்கள் பெரிய முயற்சியைச் செய்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.
அதேபோல் üமன்னும் மனிதரும்ý என்ற சிவராம காரந்த நாவலை வைத்திருக்கிறேன். சாகித்திய அகாதெமி கொண்டு வந்துள்ள புத்தகம். முதல் பதிப்பு 1967ல் வந்துள்ளது. இப்போது இரண்டாவது பதிப்பு வந்துள்ளது. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
Comments