Skip to main content

திருக்குறள் சிந்தனை 12


அழகியசிங்கர்



கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.  இப்படியெல்லாம் நான் படித்ததில்லை.  மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பஸ்ஸில் அலுவல் விஷயமாகத் தினமும் போயக் கொண்டிருப்பேன்.  பஸ்ஸில் பதிந்திருக்கும் திருக்குறளைப் படிப்பேன்.  ஒரு குறளை அப்படிப் படிக்கும்போது வள்ளுவர் தவறாகச் சொல்கிறார் என்று கூடத் தோன்றியது.  அது புகழ் பற்றிய குறள்.  அது குறித்து கூட விருட்சம் பத்திரிகையில் எழுதினேன்.  ஆனால் வள்ளுவர் சரியாக சொல்லியிருக்க மாட்டார் என்பதை இப்போது  நம்பவில்லை.  அக் குறளை நான் திரும்பவும் படிக்க நினைக்கிறேன். அப்படிப் படிக்கும்போது முன்பு என் மனதில் தோன்றிய எண்ணம் மாறிவிடும்.   
இப்போது இன்னொரு குறள் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை. 

இந்தக் குறளில் மழை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.  11வது குறளில் மழை என்ற வார்த்தையைச் சொல்லாமல் மழையைப் பற்றி சொல்கிறார்.  
தாகம் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உணவு உற்பத்தி செய்வதற்கும் மழை தேவை.   எப்படியென்றால் உணவு இல்லையென்றால் உயிர் வாழ முடியாது.  உணவு உற்பத்தி செய்ய மழை கட்டாயம் வேண்டும்.  உணவை உண்ணும்போது  தாகம் தீர்க்கவும் மழை வேண்டும்.  மழையே இல்லாவிட்டால் என்ன ஆகும்.  உலகமே அழிந்து விடும்.
இந்தக் குறளைப் படிக்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.  என்னதான் முயன்றாலும் என்னால் இக் குறளை ஞாபகப்படுத்தி சரியாகச் சொல்ல முடியாது.  இக்குறளில் துப்பார்க்கு என்ற வார்த்தை இரண்டு இடங்களிலும் அதேபோல் துப்பாய என்ற வார்த்தையும் இரண்டு இடங்களில் வருகிறது.  இந்தக் குறளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்று இப்போதுதான் கவனித்து வருகிறேன்.  எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது.  துப்பார்க்கு, துப்பாய என்ற இரண்டு வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொண்டால் இந்தக் குறள் இனிமேல் எளிதாக ஞாபகத்திற்கு வந்து விடும்.  அந்தக் காலத்தில் வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றி எழுதியிருக்கிறாரே என்று கிண்டலாக அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். 



Comments