Skip to main content

தமிழ் இனி மெல்ல ஓடிப் போய்விடுமா?


அழகியசிங்கர் 



சில தினங்களுக்கு முன் உறவினர் வீட்டிற்குப் போயிருந்தேன்.  உறவினர் வீட்டில் இரண்டு செய்தித்தாள்கள் வாங்குகிறார்கள். இரண்டும் ஆங்கிலம்.  ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியா, இன்னொன்று ஆங்கில இந்துப் பத்திரிகை.  தமிழில் ஒரு பத்திரிகை வாங்கக் கூடாதா என்று கேட்டேன்.  அதில் ஒன்றும் இல்லை.  விபரமாய் எதாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் முடியும் என்றார்.  அந்தப் பதில் சற்று ஏமாற்றமாக இருந்தது. உறவினர் வீட்டு ஏழாம் வகுப்புப் படிக்கும் பெண் குழந்தையும் ஆங்கிலத்தில்தான் புத்தகம் படிக்கிறது.  தமிழ் வேப்பங்காய் மாதிரி கசக்கிறது.  எல்லோரும் தமிழில் தினசரியோ புத்தகமோ படிக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் என்ற ஒன்றே படிக்கத் தெரியாமல் போய்விடுமோ? இன்றைய பிள்ளைகள் தமிழில் புத்தகங்களோ தினசரி செய்திகளோ படிப்பதில்லை.  இதன் பாதிப்பு போகப் போக மோசமாக இருக்கும்.

இன்னொரு நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவருடைய நடவடிக்கை எனக்கு சோர்வை ஏற்படுத்தியது.  அவர் டிவியை ஆன் செய்துவிட்டு வெறுமனே அமர்ந்திருக்கிறார்.  ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளனவாம்.  எதுவும் படிக்கப் பிடிக்கவில்லையாம். அவரிடம் சொன்னேன்.  உங்களை விட வயதில் பெரியவராய் இருந்த அசோகமித்திரன் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார் 86வயதில் என்றேன்.  தமிழில் படியுங்கள் எதையாவது படியுங்கள் என்று அவரை நோக்கி கத்த வேண்டுமென்று தோன்றியது.

மூன்றாவது நபர் அயோத்தியா மண்டபம் எதிரில் நின்றிருந்த ஓய்வுப் பெற்ற வங்கி அதிகாரி.  என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்று கேட்டேன்.  சும்மா இருக்கிறேன் என்றார்.  உங்களை முதன் முதலாக எங்கே சந்தித்தேன்.  இலக்கியக்கூட்டத்தில்தான் என்றார்.  இப்போதெல்லாம் படிப்பதுண்டா? என்று கேட்டுத் தொலைத்தேன். அதெல்லாம் இல்லை.  முன்னே படிப்பதுண்டு.  அதுசரி, அமுதசுரபி, கல்கி, மஞ்சரி பத்திரிகையெல்லாம் வருகிறதா என்று திருப்பிக் கேட்டார்.

எல்லாம் வருகின்றன.  நீங்கள் பார்ப்பதில்லையா என்றேன்.  இன்றைய இளைஞர்கள் படிப்பது மாதிரி தெரியவில்லையே என்ற அடுத்தக் கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார். ஆமாம் இன்றைய இளைஞர்களில் புத்தகம் படிக்கும் எண்ணம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது.  அதுவும் தமிழில் வெளிவரும் புத்தகத்தை யாராவது படிக்கிறார்களா?

சமீபத்தில் ஒரு நாளேடில் ஒரு கவிஞர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்த்தக் கவிதைகள் சரியாக இல்லை என்று அரைப்பக்கம் டேமேஜ் பண்ணி எழுதியிருந்தார்கள்.  ஏன் இப்படிச் செய்தார்கள் என்பது புரியவில்லை. மோசமாக அப் புத்தகம்  இருந்தால் அதைக்குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது சாலச் சிறந்தது.  ஏற்கனவே எத்தனையோ சிபாரிசு செய்தாலும் தமிழில் புத்தகம் படிக்க வர மாட்டேன் என்கிறார்கள்.  இதில் இப்படி எழுதினால் இன்னும் மோசமாகப் போய்விடும்.  விமர்சனம் செய்பவருக்கு இது ஏன் புரியவில்லை?

ஒருமுறை விருட்சம் கூட்டத்தில் சாருநிவேதிதா,  தமிழ் என்கிற மொழியே சில ஆண்டுகளில் மறைந்து விடும் போல் தோன்றுகிறது என்று பேசினார்.  அன்று அதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. அவர் சொன்னது உண்மை.  ஆனால் அப்படி நினைக்கும் மனநிலையில் நான் இல்லை.   என் குடும்பத்தில் உள்ளவர்களில் என்னைத் தவிர தமிழில் யாரும் படிப்பதில்லை. ஆனால் என்னிடமோ ஏகப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள்.  

ஒரு நண்பர் என் வீட்டிற்கு வந்திருந்து நான் வைத்திருக்கும் தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.  சரி, நீங்கள் எப்போது இதையெல்லாம் படித்து முடிப்பீர்கள் என்பதுதான் அவர் கேள்வி.

என் நினைவெல்லாம் புத்தகம் படிப்பதில்தான் இருக்கிறது.  அதுவும் தமிழில் எது எழுதியிருந்தாலும் நான் படிக்கத் தயாராக இருக்கிறேன்..ஆனால் நீங்கள் சொல்வதுபோல் எல்லாவற்றையும் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றேன்.  திடீரென்று ஒருநாள் தோன்றியது.  தமிழில் படியுங்கள் என்று ஒரு பிட் நோட்டீஸ் அடித்து எல்லோருக்கும் கொடுக்கலாமா என்று.  இதை ஒரு நண்பரிடம் சொன்னபோது அவர் வாய்விட்டுச் சிரித்தார். இப்போது  தமிழில் எது எழுதியிருந்தாலும் படியுங்கள் என்பதுதான் என் முழக்கம்.  
 

Comments