கதையை வாசகனிடம் முடித்து விடுகிறார்
அழகியசிங்கர்
முதன் முதலாக அசோகமித்திரன் கதையான ரிக்ஷாவைத்தான் படித்தேன். இக் கதை 1965 ல் அசோகமித்திரன் எழுதிய கதை. அப்போது எனக்கு வயது 12. நான் கிட்டத்தட்ட இன்னும் 10 வருடங்கள் கழித்து தி நகரில் உள்ள நூல்நிலையத்திலிருந்து அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையைப் படித்தேன். இந்தக் கதை 3 பக்கங்களில் முடிந்து விடும். இக் கதை முழுவதும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது.
நான் அதுவரை படித்தக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல் இருந்தது அவர் கதை. இப்படிச் சொல்வதால் நான் மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் புறக்கணிக்கவில்லை.
ரிக்ஷா என்ற கதையில் பையன் ரவி ரிஷ்கா என்கிறான். அவனுக்கு ரிக்ஷா என்று சொல்ல வரவில்லை. அவனை ரிக்ஷா சொல்லும்படி வற்புறுத்துகிறார். பல முயற்சிக்குப் பிறகு அவன் ரிக்ஷா என்று சொல்ல வராமல் தடுமாறுகிறான். அப்பா அவனை திருத்த முயற்சித்துத் தோல்வியைத் தழுவுகிறார்.
இந்தக் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது.
உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது.
இந்தக் கதையைப் படிக்கும்போது இப்படி ஒரு வரியை எழுதியிருக்கிறாரே என்று அசந்து விட்டேன். அன்றிலிருந்து அசோகமித்திரன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். நான் மற்ற எழுத்தாளர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தவறுவதில்லை. ஆனால் அசோகமித்திரன் மீது எனக்கு அலாதியான மரியாதை. மதிப்பு. யாரிடமாவது பேசும்போது நான் அசோகமித்திரன் கதையைப் படிப்பேன் என்று சொல்வேன். என் ஞாபகத்திலிருந்து அகலாமல் இருக்கும் ரிக்ஷா கதையைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பேன். அதை ஒரு குறும்படமாகக் கூட எடுக்க என் ஆசை. ஐந்து நிமிடங்களில் இப் படத்தை எடுத்து விடலாம். இந்தக் கதையை அவர் 10965ல் எழுதி உள்ளார். கதையை எழுதியிருந்த ஆண்டில் என் வயது 12தான். ஆனால் கல்லுரியில் படிக்கும் சமயத்தில்தான் இந்தக் கதையைப் படித்தேன். அதுவும் அவருடைய கதைப் புத்தகத்தை புத்தகச் சாலையில் வாங்கி வந்து படித்தேன்.
அசோகமித்திரன் எழுத்து நடையைப் பார்க்கும்போது அவர் சொற்களை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார். உண்மையில் இரண்டு உத்திகளை அவர் கதைகளில் பயன்படுத்துவதாக நினைக்கிறேன். ஒன்று சொற் சிக்கனம். இரண்டாவது கதையில் எதாவது சொல்வார் என்று நினைக்கும்போது நழுவிப் போகிற தன்மை. புதியதாக அசோகமித்திரன் கதையைப் படிப்பவனுக்கு அவர் என்ன எழுதுகிறார் என்பது அவ்வளவு சுலபமாகப் புரியாது.
உதாரணமாக ரிக்ஷா என்ற கதையை இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு வரியை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது என்ற வரிதான் அது.
ரிக்ஷாவில் போய்விட்டு வா என்றேன் என்கிறான் கணவன். மனைவி கேட்கிறாள்: ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி காதில் விழுந்தது. என்று.
இந்த இடத்தில் அசோகமித்திரன் கதையை முடித்துவிட்டிருக்கலாம். ஆனால் கூட ஒரு வரி வருகிறது. நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருக்கிறான். .
இந்தக் கதையைப் படிக்கும்போது எந்த இடத்தில் அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை நாம் கொண்டு போய் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. உலகத் தரமான எழுத்தாளராகத்தான் அவர் எனக்குத் தென் படுகிறார்.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் அவர் கதை ஒவ்வொன்றையும் வாசகனிடம் முடித்து விடுகிறார். அவர் கதையைப் படித்த வாசகன்தான் கதையைப் படித்த பரவசத்துடன் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.
Comments