Skip to main content

வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கிறோம்

அழகியசிங்கர்




நம் வாழ்க்கையில் நாம் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கிறோம்.  நம்மிடம் மிகக் குறைவான அதிகாரமே உள்ளது.  நேற்று அப்பாவிற்கு மாதம் ஒரு முறை நடக்கும் சடங்கு நடந்து கொண்டிருந்தது.  அப்போது ஏதோ ஒயர் பொசுங்கும் நாற்றம் வீசியது. கொஞ்சம் பயம் பற்றிக்கொண்டது. மின்சாரத்தில் எதாவது மின் கசிவு ஏற்பட்டிருக்குமா என்ற பயம்தான்.  அப்படிப் பற்றிக்கொண்டால் இடமே நாசமாகிவிடும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை.

மதியம் நானும் நண்பர் கிருபானந்தனும் திருவல்லிக்கேணி சென்று விருட்சம் 102வது இதழ் எடுத்துக்கொண்டு வந்தோம்.  தி நகர் வழியாக வரும்போதுதான் தெரிந்தது, ஒரு பிரபல துணிக்கடை பற்றி எரிந்து கொண்டிருந்தது.  ஒரே புகை.  நாங்கள் காரில் வந்து விட்டோம்.  சென்னை சில்க்ஸ் என்கிற அந்த 7 மாடிக் கட்டிடம் எரிந்து கொண்டிருக்கிறது.  நானோ ஒன்றும் சொல்லத் தெரியாத வேடிக்கைப் பார்க்கும் மனிதன்.

தீயை அணைக்க பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நல்லகாலம்.  எந்தவித உயிர் சேதமும் இல்லை.  ஆனால் 200 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள.
ஒவ்வொரு முறையும் போதீஸ் வாசலில் நிற்கும்போது ஏசியின் காற்று ஜில்லென்று அடிக்கும்.  என்னடா இது தெருவில் நிற்கும் நமக்கே இப்படி காற்று வீசுகிறதே என்று நினைத்துக் கொள்வேன்.

மாசம் இவர்கள் எத்தனை ரூபாய் மின்சாரத்திற்காக பணம் செலவு செய்கிறார்கள் என்று யோசிப்பேன். வேடிக்கைப் பார்க்கிற ஒரு சாதாரண மனிதனான எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.  அந்தத் துணிக்கடையில் போய் என் விருப்பத்திற்கு ஏற்ப துணியை வாங்கும் அதிகாரம்தான் இருக்கிறது.  பிடிக்கவில்லை என்றால் அந்தத் துணிக்கடையிலிருந்து திரும்பவும் வந்துவிடலாம்.

இவ்வளவு பெரிய இடம் கட்ட எந்த அரசாங்கம் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்.  நிச்சயமாக விதி முறைகளை மீறித்தான் கட்டிடம் கட்டியிருப்பார்கள்.  அரசாங்கத்திற்கும் இது தெரியும்.  ஆனால் நாம் வேடிக்கைப் பார்ப்பவர்கள்.  இதையெல்லாம் வேடிக்கைத்தான் பார்க்க முடியும்.

ஆனால் இது மாதிரி இடங்களில் பணிபுரியும் யாரும் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்க முடியாது.  அவர்களுடைய வாழ்க்கை முறை பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கும்.  சென்னை சில்க்ஸ் உரிமையாளர் நிச்சயமாக வேடிக்கைப் பார்ப்பவராக இருக்க முடியாது.  இந்தத் தீ விபத்து அவர்களை உண்டு இல்லை என்று செய்திருக்கும்.

சில வருடங்களுக்கு முன்னால் என் உறவினர் ஒருவர் வட்டிக்கு ஆசைப்பட்டு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாமல் தனியார்களிடம் பணத்தை டெபாசிட் செய்தார்.  நான் சொல்லியும் கேட்கவில்லை. அவருடைய பணம் எல்லாம் ஓய்வுப் பெற்றப்பின் கிடைத்தத் தொகை. எல்லாம் போய்விட்டது.  அவருக்கு அந்த அதிர்ச்சி பெரிய பிரச்சினையாகி இருக்கும் என்று நினைத்தேன்.  நல்லகாலம் அவர் தப்பித்தார்.  ஏன் என்றால் நாம் வேடிக்கைப் பார்ப்பவராக மட்டும் இருந்தால் நமக்கு ஒன்றும் ஆகாது.  ஆனால் நாமும் இதுமாதிரியான சம்பவத்தின் போது பங்கு பெறுபவர்களாக இருக்கும்போது, என்ன ஆகுமென்று சொல்ல முடியாது.  2015ல் அரசாங்கத்தின் அலட்சியத்தால் வெள்ளம் எங்கள் தெருவிற்கே வந்து விட்டது.  முதல் மாடியில் குடியிருந்த நாங்கள் பயந்து அலறி அடித்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றோம்.  வேடிக்கைப் பார்ப்பவர்கள் நாங்கள் பயந்துடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. யாரிடம் என்ன சொல்ல?

சென்னை சில்க்ஸ் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பதைப்பதைப்பு இருக்கும்.  அவர்கள் வேடிக்கைப் பார்ப்பவராக இருக்க முடியாது.  அந்தப் பகுதியில் வாழ்வர்களுக்கு பெரிய அவதியாக இருக்கும்.  அவர்கள் வேடிக்கைப் பார்ப்பவராக மட்டும் இருந்து இதை ரசிக்க முடியாது.  எங்கே நம் உடமைக்கு, உடலுக்கு தீங்கு வருமோ என்று பயந்து கொண்டிருப்பார்கள்.

இதோ அந்த இடத்திலிருந்து வரும் என்னைப் போன்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள்.  ஒரு சினிமா காட்சியைப் போல் இது இருக்கும்.  இதோ வீட்டிற்கு வந்து டிவியைப் பார்க்கிறோம்.  எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.  நாங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள்.  ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேள்வி கேட்க முடியாது.  அமைச்சர்கள் தரும் அறிக்கைகளையும் நாங்கள் வேடிக்கைப் பார்க்கிறோம்.  இந்தக் காட்சி அரங்கேறி முடிந்த பிறகு இன்னொரு காட்சி அரங்கேறும் அதையும் வேடிக்கைப் பார்ப்போம்.  அதிகாரமற்றவர்கள் நாங்கள்.  வேடிக்கைதான் பார்க்க முடியும்.

Comments