short story
அவள் எனக்கு மஹாராணிதான். என்னுடைய நினைவுகளையும், கனவுகளையும் அரசோச்சும் அழகு ராணி. என்னுடைய ராணி ஓர் மயிலும் கூட - நடனத்தில்.
எனது மயில்....ஸாரி, மயிலின் பெயரைச் சொல்லாமலே....பெயரென்றால்? காலேஜ் ரிஜிஸ்டரில் அவள் - ஸில்வியா ஆன்டர்ஸன். காலேஜ் கேம்பஸிற்குள், தோளுடன் தோள் உராயும் தோழியருக்கு - அவள் ஸில்லி. எனக்கு, என்னுடைய சுகமான நினைவுகளுக்கு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கனவுகளுக்கு - அவள் பெப்பி பெப்பி பெப்பி........
பெப்பி - என் நினைவே, என் கனவே.......ப்ரு காப்பியின் முறுகல் நுரை போலிருக்கும் என் மயிலின் சிரிப்பு. அவளுக்குத் தொடைகள் என்ன மயிலின் பட்டுத் தொகைகளா? - இந்த புஷ்கி அரைக் கண்ணைத் திறந்து கொண்டு; அரை வாயைத் திறந்து கொண்டு அத்தனை சுகமாகத் தூங்குகிறதே மயிலின் மடியில். சொல்லவே சுகம். மீண்டும் சொல்கிறேன். 'என் மயிலின் மடியில்.' ஏய் புஷ்கி. எனக்கு உன்மேல் பொறாமை. யார் இந்த புஷ்கி? யாருமில்லை. மயில் வீட்டுப் பொமரேனியன். மயிலுக்குக் குழந்தை மாதிரி. இரவிலும் கூட இந்த புஷ்கி என் மயிலுடன் பஞ்சு மெத்தைக்குள்; போர்வைக்குள்..போகட்டும்.
ஸில்வியாவை நான் மட்டும் ஏன் பெப்பி என்கிறேன்? சொல்கிறேன். உங்கள் வீட்டில் பியானோ இருக்கிறதா? பெப்பி ஆரோமெல்லோ என்ற இளைஞனின் பியானோ இசையில் உங்களுக்குப் பைத்தியம் உண்டா? மயிலிடம் இரண்டும். எனது மயிலும் பிரமாதமாக பியானோ வாசிக்கும். அதனால்தான் பெப்பியென்று என் மயிலை நான் மட்டும்...
லைட் ப்ளு வர்ண சுவர்கள். மூலையில் ரெட் கார்ப்பெட்..பியானோ. மயில் பியானோ வாசிக்கிறது. மயிலின் டிரஸ் குரு ரெட்டில். மயிலின் பொன் வர்ணக் கூந்தல் - தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு அருவி அமைதியாக வழிவதைப் போல. மயிலின் அருவியை மெதுவாக ஸ்பரிக்க ஒரு மலராத ரோஜாவை அந்தப் பொன் வர்ணக் கூந்தலில் சூட்ட நான் - பைத்தியமாக...
பெப்பி எனக்கு இன்ஸ்பிரேஸன். எனக்கு அவள் அடுத்த வீட்டுப் பெண். அதனாலா மயிலை நான் 'படோசன்' பார்க்க அழைத்துப் போனேன். மயிலுக்கு இந்திப் படம் பிடிக்கவில்லை. ஆனால் நஸீம் பானுவின் பெண்ணைப் பிடித்தது. 'ஸி ஹர் அய்ஸ்' என்றாள். பார்த்தேன். மயிலின் கண்களை; நீல நிற விழிகளில் நான்.
எனக்கு மயிலின் வீட்டில் மிகவும் சுதந்திரம். அந்த சுதந்திரம். அந்த சுதந்திரத்தின் ஆரம்பம் - புத்தகம். மயிலின் அப்பா - அவருக்கு எல்லா இடங்களிலும் ஒரே பெயர்தான். மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 50 வயது ஜென்டில் மேன். பார்த்தால் 30 வயது. மிஸ்டர் தாமஸ் ஒரு புத்தகப் பூனை. நான் சொல்லவில்லை. எல்லாம் என் மயில்தான். தூங்குவதும்கூட மயிலின் அப்பாவிற்குப் புத்தகத்தில்தான். புத்தகத்தில் தூங்கினால் பூனையா? அப்படியானால் நானும்தான்.
மகளை மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன் சொல்வார் : "மகளே நீ கூட நமது புஸ்ஸி போல," புஸ்ஸி? யெஸ், மயில் வீட்டுப் பூனைக்குட்டி.
"பரிஹரின் டெரிடோபைட்டைப் படிக்கும்போது தான் நினைத்தேன். உன் அம்மாதான் சொன்னாள் - ஜெனிடிக்ஸ் படிக்கும்போதுதானாம்.. பரீட்சையிலும் போய் தூங்காதே மகளே..."
நானும் மனதிற்குள் சொல்கிறேன்.. "பரீட்சையிலும் போய் தூங்காதே மயிலே..." என்னுடைய மயில் பாட்டனி ஸ்டூடண்ட்..எனக்கென்ன தெரியும் பாட்டனியில்? ஆங்கிலம் தெரியாதவனுக்கும் எ பி ஸி டி என நான்கு எழுத்துக்கள் தெரியும்போது. எனக்கும் பாட்டனியில் தேலோபைட்டா, பிரையோபைட்டா என இரண்டு பெயர் சொல்லத் தெரியும். பூக்கும் தாவரம் பூக்காத தாவரம் என்று மயில் பெரிய லெக்சரை ஆரம்பிப்பாள். பாதியில் நிறுத்தி, 'போரடிக்கிறேனா,' என்பாள். நான் என்ன சொல்வேன்? பேசாமல் இருப்பேன்.
நான் இல்லாமல் மயிலின் வீட்டில் கிறிஸ்துமஸ் இல்லை. மயிலின் பிறந்த நாள் இல்லை. எப்படி இவ்வளவு நெருக்கமானேன்? சொல்கிறேன். எனக்கு முதலில் அறிமுகம் மயில் இல்லை. மயிலின் அப்பாதான்.
ஒருநாள் தலைமைச் செயலகம் பக்கம். சிகப்பு வர்ண பஸ் நின்றுவிட்டது. பஸ் போகாதுயென்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் அந்த மஞ்சள் வர்ண ஹில்மன் கேம்பிரிட்ஜி. நிலைமை புரிந்து, என்னைப் பக்கத்து வீட்டுக்காரனாகத் தெரிந்து கொண்டார் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 'கெட் இன்' சொல்லிக் கதவைத் திறந்தார். முன் ஸீட்டில், அவருக்கு வலது பக்கம் நன்றி சொல்லி உட்கார்ந்தேன். அறிமுகப் பரிமாற்றம், கார் போகிறது என்பதை 'வார் மெமோரியலைப் பார்த்துத்தான் தெரிந்தேன்.
"என்ன அது புத்தகம்?" - தாமஸ் கேட்டார்.
"சாத்தர் - ட்ரபிள்ட் ஸ்லீப்..." தாமஸ் ஆச்சர்யப்படவில்லை. சந்தோஷப்பட்டார்.
"சாத்தரில் வேறு என்ன படித்திருக்கிறீர்கள்?"
"த ஏஜ் ஆஃப் ரீஸன்."
"வேர்ட்ஸ்?"
"படித்ததில்லை."
"அவசியம் படியுங்கள்."
"வேர்ட்ஸ் எனக்குக் கிடைக்கவில்லை."
"நான் தருகிறேன்..." சாந்தோம் வந்தது. க்ரீன் வேஸ் ரோட் வந்தது.
'பொகைன் வில்லா' மயிலின் வீட்டிற்குப் பொருத்தமான பெயர்தான். சுற்றுச்சுவர் பூராவும் வெள்ளையாய், ஆரஞ்சாய். இரண்டும் கலந்ததாய் - பொகைன்விலா பூக்கள் - இலைகளே இல்லாமல.
தாமஸ் ஆண்டர்ஸன் என்னை வீட்டிற்குள் அழைத்தார். போனேன். மயிலையும் மயிலின் அம்மாவையும் அறிமுகம் செய்தார். வெளிச்சமான ஃப்ரிஜ்ஜிலிருந்து புகை நெளியும் கொக்காகோலா.
மயிலின் அப்பாவிடம் எவ்வளவு புத்தகங்கள்......ஒரு புத்தகம் வாங்கப் போனவன் இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டு வந்தேன். ஆஸ்கர் வயில்டின் - தாஸ்தாவ்ஸ்கியின் - இன்னும் நிறைய...
மயிலின் அறையிலும் நிறைய புத்தகங்கள்.. என்ன புத்தகங்கள்? கார்ட்டூன்ஸ். நாய் வளர்ப்பு. பூனை வளர்ப்பு. மீன் வளர்ப்பு. வீட்டை அலங்கரிப்பது. தோட்டக் கலை. இவைகளைத் தவிர்த்து பெரிய பெரிய உறை போட்ட வால்யூம்கள் - இசையைப் பற்றி... இசை விற்பன்னர்களைப் பற்றி; அவர்களுடைய சாதனைகள் பற்றி...போகட்டும்.
மயிலைப் பற்றிய பிற விஷயங்கள் - ஸ்டெல்லா மேரீஸில் பி எஸ்ஸி இறுதி ஆண்டு. பாட்டனி மெயினில் முன் வரிசையில். கல்லூரி முழுவதுக்குமே கனவுக் கன்னியாக.
என்னைப் பற்றி - ப்ரசிடென்ஸியில் எம்.ஏ இறுதியாண்டு - ஆங்கில இலக்கியத்தில் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம். புரபஸர் உறுதி சொல்லி இருக்கிறார். ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அப்புறம்? பான் அமெரிக்கனில், பாரிஸ் வழியாக, சுதந்திரச் சிலை வரவேற்க - யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. ஹார்வர்ட் யுனிவாஸிட்டியில் மஞ்சள் நிறப் பூக்கள் உதிர்ந்த விரிப்பாய் விரிந்திருக்கிற மைதானத்தில், மூடுபனியில், பக்கத்தில் மயில். மயிலின் அருவி என்னுடைய தோளில்..சபையரில் மீசை வைத்த மஹாராஜாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மஹாராணியுடன் சுதந்திர சிலையைப் பார்த்து வருவேன்.
என் மயிலை, என் பெப்பியை நான் காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய காதலை அவளிடம் நான் வெளிப்படுத்தவில்லை. காரணம்? காதலுக்கு அர்த்தம் காதல் இல்லையாம். பின்? காதலுக்கு அர்த்தம் செக்ஸôம்? என் மயில்தான் சொல்கிறாள். இதை என் பகுத்தறிவும் இருதயமும் ஒப்புக் கொள்ளவில்லை;. காதல் வெறும் செக்ஸ் இல்லை என்பதை எப்படி விளக்குவேன்? காத்திருக்கிறேன்; காலத்திற்காக.
என்னுடைய மயிலைப் பியானோ பைத்தியம் என்றேன். பியானோவுக்கு மட்டுமல்ல, இசைக்கே அவள் பைத்தியம். இசைக்குஞ்சு என் மயில். கிளாரினெட்டில் தனித்வம் காட்டியவன் மொஸôர்ட் என்பாள். ஷைக்காவ்ஸ்கியின் ஃபிரான்ùஸஸ்கா - டி - ரிமினியாம். அதை அந்த ஸ்டீரியோவில் போட்டுக்கொண்டு ரெட் கார்பெட்டில் மயில் ஆடும் ஆட்டம்... ஆடு மயிலே ஆடு. பொன் வர்ணக் கூந்தலுக்கு பீர் ஊற்றிக் குளிக்குமா என் மயில்? அவளின் கூந்தல் அந்த வர்ணமாய்; அந்த நுரைபோல்...
ஃப்ரான்ஸ் ஷ÷பருக்கு பித்தோவன் கடவுள் மாதிரியாம். இசைஞர்களைப் பற்றி மயிலுக்குத் தெரியாத விஷயமே கிடையாதோ?
ஸம்மர். மயில் அப்பாவோடும் அம்மாவோடும் லோனாவாலாவில். லோனாவாலா என்ற பெயரைக் கேட்டாலே என் மயிலின் கண்கள் ஒரு மயக்கம் மயங்கிச் சிரிக்கும். கண்களுமா சிரிக்கும்? சிரிக்கும். என் மயிலுக்கு மட்டும். பத்து நாட்கள் மயில் அந்த மலைச் சரிவுகளின் ஈரக் காற்றில. அதெல்லாம் பித்தோவன் ரசனை மாதிரியாம். லோனாவாலா ரசனை. போகட்டும்..
மணக்கும் எங்கள் பாத்ரூம். ஜில்லென்ற ஷவரின் கீழ் பச்சை நிற ரப்பரின் மேல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். பெப்பி பெப்பி பெப்பி.. மயிலே மயலே. என்னென்னவோ நினைக்கிறேன். மயில் பீர் வர்ணக் கூந்தல். ரெட் கார்பெட். ஜ÷ம் ரீவ்ஸ். ஜøலி ஆண்டரூஸ். ரசனை. ஓவியம். வாஷ்கோ. ரசனை. சீன்கானரி 007. ரெக்யல் வெல்ச். ரசனை, மயில், ரசனை. கண்டு பிடித்து விட்டேன். கண்டு பிடித்து விட்டேன். ஷவருக்கும் பச்சை நிற ரப்பருக்கும் இடையே போய் போய் வந்தேன். குளிரும் ஷவரில் ஷேக்.
மயிலே. நீ இறகு போடப் போகிறாய். குயிலாக இந்த ஷோல்டரில் சாய்ந்து பாடப் போகிறாய். ஆர்க்கமிடிஸ் போல ஓடினால் என்ன? பாம்பே டையிங்கின் கதகதப்பில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறேன். ஷவரை நிறுத்துகிறேன். நீர் சொட்டுச் சொட்டாக பச்சை நிற ரப்பரில் உருண்டு உருண்டு ஓடுகிறது.
கதவுக்கு வெளியே தங்கையின் குரல். "அண்ணா, என்ன பண்ணுகிறாய்? குளிக்கிறாயா, இல்லை பாத்ரூமை கழுவி விட்டுக்கொண்டு....." "ஷட்டப்," கதவைத் திறக்கிறேன்.
"லிட்டில் நெல் ; இந்த பாத்ரூமில் நான் ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறேன்.."
"உனக்கென்னப்பா, நீ பெரிய ஆர்க்கிமிடிஸ்."
எங்கள் வீட்டில் லிட்டில் நெல் பிரியம் வந்துவிட்டால் வீட்டில் எல்லோரையும் போப்பா வாப்பா என்றுதான் பேசும். ஒன்றும் சொல்லக்கூடாது. அருமையான குழந்தை..
என் அறைக்குள் ஓடுகிறேன். என் மயிலுக்கு ரோஜா நிறக் காகதிதங்களில் காதலுக்கு ஒரு தீஸிஸ். என்னுடைய காதல் ராணிக்கு காதல் சாசனம் எழுதுவது இந்தப் பட்டையடித்த லுங்கியைக் கட்டிக்கொண்டா? சுருட்டி எரிகிறேன். டார்க் ப்ளூ பேண்ட். சில நிமிடங்கள் மயிலின் கூந்தல் நினைப்பில். எழுத ஆரம்பிக்கிறேன்.
அன்புத் தோழி பெப்பி,
உன் நண்பன் ஆனந்த்ஷங்கர் எழுதும் இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியத்தைத் தருகிறதா?பிரியமுள்ள பெப்பியே. எங்கள் வீட்டு பாத்ரூமில் நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறேன். அது என்ன? எழுதுகிறேன். பெப்பி; கோடை வந்தால் நீ லோனாவாலா, லோனாவாலாயென்று ஓடிப் போகிறாயே.... அதை என்ன வென்று சொன்னாய்? ரசனையென்று. இப்போதும் இல்லையென்று மறுக்க மாட்டாய். உதகமண்டலத்தை விட அந்த லோனாவாலா உனக்கு சுகமாக. இனிமையாக..லோனாவாலா ரசனை. இது உன் ரசனை. உன்னுடைய இன்னொரு ரசனை - நிறைந்து வழியும் பீர் கிண்ணத்தில் பொங்கிப் பூரிக்கும் பொன்னிற நுரைகள் உரசி நொறுங்கும் ஓசை எப்படி இருக்கும்? நீ சொல்வாய் - ஜøலி ஆண்ட்ரூஸ் குரல் போல்யென்று. அந்தப் பீர் நுரைக் குரலுக்காக 'நட்சத்திர' படத்தை மூன்று தடவைப் பார்த்தது நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய் என் அம்மாவிற்கும் ஜøலி ஆண்ட்ரூஸ் ரசிக்குமா? ரசிக்கவில்லை. அவளுக்கு டி.கே பட்டம்மாளின் ஆலாபனை. சங்கராபரணம். புன்னாகவராளி. இது அவள் ரசனை.
இன்னும் உன் ரசனைகளின் அட்டவணை.
சௌன்ட் ஆஃப் ம்யூஸிக் ஏழு தடவை ஏன்? அந்த ரெஸ்பிகி அவனுடைய ரோமாபுரி ஊற்றுக்கள். ஜிம் ரீவ்ஸ். க்ளிப் ரிச்சர்ட். கார்லோ பான்டியின் மனைவியும் அவளுடைய நடிப்பும் - இவை அத்தனையுமே உனது ரசனை ரசனை ரசனை. அந்த ரசனை சுகமானது. ஆனந்தமானது - இதயத்திற்கு; அதன் உணர்வுகளுக்கு. இந்த சுகானுபவமான ரசிப்புக்குச் சரியான பொருள்தான் காதல். ஒப்புக்கொள். கர்ஸ்ங்ழ் ர்ச் அழ்ற்ள் என்றால் அர்த்தம் என்னவோ - காதலுக்கு அர்த்தம் அதுதான். அவசரப்பட்டு விடாதே பேபி. ரசனை எல்லாமே காதலா? உனக்கு ஒப்புக்கொள்ள சங்கடமாக இருக்கலாம். விளக்கமாகச் சொல்கிறேன். கவனமாய்ப் படி.
லோனாவாலாவின் அமைதியான புல்வெளியில் ஓடி ஓடி வண்ணத்துப் பூச்சி பிடிக்கிற உன்னுடைய ரசனை; ஜøலி ஆண்ட்ரூஸின் பாட்டில் மயங்கும் உன் ரசனையின் சுகம் - இவற்றிலெல்லாம் செக்ஸ் - பாலுணர்வு ஒட்டி இருக்கின்றதா? அல்லது இதற்கு அடிப்படை செக்ஸô? சொல்வாயா நீ? சொல்ல மாட்டாய். ஜாக்கிரதையாக வாசி தோழி. இது ப்ரையோபைட்டா இல்லை. ரசனை என்பது காதல்தான். செக்ஸ் அல்ல. காதல் வேறு, செக்ஸ் வேறு. இரண்டையும் ஏன் பிணைத்து நோக்க வேண்டும்? கூடாது - அது தப்பு. செக்ஸ் என்றால் என்ன?
Sex is an instinct ; A biological need. காதல் அது போன்ற instinct அல்ல. உடல் பூர்வமான தேவையும் அல்ல. பாலுணர்வு எல்லோருக்குமே பொதுவாக. ஆனால் காதல், ரசனை - எல்லோரிடமும் இருக்கிறதா சொல்? இல்லை. எல்லா மனிதர்களுமா காதலிக்கிறார்கள்? சொல் பேபி. அப்பாவின் அறையில் 'கிங்ஸ்' ஸ்டோரி இருக்கும். படித்துப்பார். எல்லோருக்குமே பொதுவான பாலுணர்வோடு எல்லோருக்கும் பொதுவாக இல்லாத காதலையும் ரசனையும் பிணைப்பது கூடாது. காதல் வயப்படும் ஒரு ஆண் பெண் இருவரிடையே பாலுணர்வு கிடையாது என்பதல்ல நான் சொல்லிக் கொண்டு வருவது. அந்தக் காதலுக்கு அடிப்படை பாலுணர்வு உடலில் இருந்து - அதாவது Physical. காதலுணர்வு உள்ளத்தில் இருந்து - அதாவது psychical.
உடலின் உஷ்ணமான எழுச்சியும்; ஹிருதயத்தின் ஆன்ம ரசிப்பும் ஒன்றா பேபி? இப்போது நீ ஒப்புக் கொள்வாய் - காதல் செக்ஸ் அல்ல என்பதை. காதல் ஒரு ரசனைதான். ஆனால் ரசனைகள் எல்லாமே காதலா? சந்தேகம் வரலாம் உனக்கு. சொல்கிறேன். ஒரு பொருளின், இசையின், நபரின் மீது நமக்கு ரசனை உள்ளது என்றால் அந்த ரசனை என்பதுதான் முதல் கட்டம் என்பதல்ல. ரசனை நமக்கு ஏற்பட்டிருக்கிற பொருளின் மீது முதலில் ஏற்படுவது அட்மிரேஸன்தான. அந்த அட்மிரேஸன் நேற்று இன்று நாளை என்ற அப்பியாசத்தில்தான் ரசனையாக மலர்கிறது. கவனமாகப்படி. அந்த ரசனையின் பரிணாம மலர்ச்சிதான் காதலா? பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல - ஒரு பெண்ணின் இயல்புகளை ரசிக்கின்ற ஆண் மகனை அதே பெண்ணும் ரசிக்கும்போது ஒருமிக்கின்ற ரசனைதான்; ரசனையின் பரிவர்த்தனை காதல.
என் அன்புள்ள பெப்பியே ; இனியும் நீ காதல் என்றால் செக்ஸ் என சொல்லமாட்டாய். மை டியர் ஸில்வியா ஆண்டர்ஸன், காதலைப் பற்றி இவ்வளவு நீண்ட விளக்கத்தை உனக்கு எழுதியிருப்பது, காதல் செக்ஸ் அல்ல என்பதை வெறுமே விளக்குவதற்கு மட்டும்தானா? இல்லை பெப்பி, இல்லை. இக் கடிதம் வெறும் காதல் பற்றிய சாஸனம் அன்று. என் காதலின் வெளிப்பாடு. உன்னுடைய குயில் இசையை நான் ரசித்த ரசிப்பும்; அந்த ரெட் கார்பெட்டில் அண்டனியாக ஹாம்லெட்டாக எனது நடிப்பாற்றலை நீ ரசித்த ரசிப்பும் உன் நாட்டியத்தில் நான்; கீட்ஸிற்கு ஒப்பாக கிதை இயற்றும் என் கவித்துவத்தில் நீ; உன் ஆடை அலங்காரத்தில் நான்; ஷேக்ஸ்பியரின் முப்பத்தேழு நாடகங்களையும் பிளந்து பிளந்து சொல்லித் தருகிற என் ஆங்கில இலக்கியப் புல1மையில் - நீ இப்படி உன்னில் நானும், என்னில் நீயும் கொண்ட, பாலுணர்வின் நெடியே அற்ற ஒருமித்த ரசனையின், ரசனைப் பரிவர்த்தனையின் அர்த்தம் என்ன சொல் தோழீ? ஸôரி நான் அழுகிறேன். என்னைச் சில நாட்கள் காணாமல் நீயும், உன்னைச் சில நாட்கள் காணாமல் நானும் எப்படி சோகமாகிச் சோர்வடைந்து போகிறோம். ஏங்கிக் கலங்கிப் போகிறோம். மீண்டும் கண்டதும் அந்த ரெட் கார்ப்பெட்டில் நீ ஆடும் ஆட்டம் என்ன, பாடும் பாட்டென்ன? - இதற்கெல்லாம் பொருள் என்ன ராணி? நான் சொல்லட்டுமா கோடிட்டு எழுதுகிறேன். லவ். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அட்மிரேஸன் ரசனையாக உயர்ந்து காதலாக மலர்ந்திருப்பதை நீ புரியவில்லையா? உணர்வு வயப்பட்டுக் கண் கலங்கி எழுத முடியாமல் தவிக்கிறேனே - அதே கண்ணீரும் உணர்ச்சி நெரிசலும் உன்னில் ஏற்படவில்லையா? அந்த மன நெரிசலை காதல் என நீ புரிந்து கொண்டால் - தோழி; உனக்காக எட்டாம் தேதி மாலை 5 மணிக்கு மெரீனா ரெஸ்டாரண்ட்டில் காத்திருப்பேன் - அன்புடன் வந்து சேர்...
உன் அன்பு நண்பன்
ஆன்ந்த் ஷங்கர்
கடிதத்தை முடித்தேன். தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டி போல சிகப்பு நிற தகர டின்; என் காதல் ராணிக்குத் தூது போகிற காதல் அஞ்சலும் இதற்குள் தானா? ஒரு பால் வெள்ளை அன்னம் கொண்டு செல்லாதா? ஒரு பஞ்சு மேனி பொமரேனியன் எடுத்துப் போகாதா? வழியில்லை. கடிதத்தைத் தெரு முனை பாக்ஸில் போடுகிறேன்.
ஏழாம் தேதி இரவு நான் தூங்கவில்லை. மகத்.தான காதல் காவியங்களை எடுத்து வாசிக்கிறேன்.
எட்டாம் தேதி. சரியாகச் சாப்பிடவில்லை. யாரோடும் பேசவில்லை. என் மயில் வராவிட்டால்? என் காதலை நிராகரித்து விட்டால்? என்ன செய்வேன் நான்? ஸலீம் மாதிரி கண்ணீர் விடுவேனா? தாடி வைத்துக்கொண்டு தாஜ்மஹாலில் பெப்பி பெப்பி யென்று அலைவேனா? இல்லை - அண்டனியைப் போல கண் கலங்கியது.
கலகத்திலும் கவனமாய் ட்ரெஸ் செய்கிறேன். கிளம்புகிறேன். மயில் வீட்டுப் போர்டிகோவில் மஞ்சள் நிற ஹில்மன் கேம்பிரிட்ஜ். டேவிட் அதைத் துடைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு வியர்க்கிறது. மயிலைச் சுமந்துகொண்டு அந்த மஞ்சள் வர்ணம் புறப்படுமா? காதல் தேவதையைப் பிரார்த்திக்கிறேன்.
பஸ்ஸில் கிளம்புகிறேன். 4.46 சாந்தோம். 4.48 ராணிமேரி. 4.50 மெரீனா. இறங்கி நடக்கிறேன். 5 மணி. ரெஸ்டாரண்ட்டில் மஞ்சள் வெயில் முகத்தில் அடிக்கிறது. பிரதான வாயிலில் கூர்க்காவின் ஊதல். மஞ்சள் வர்ணமா? இல்லை. வேறு கார். 5.05. வருவதெல்லாம் எம்எஸ் க்யு; எம்எஸ்ஆர்..எங்கே அந்த சிசி. எங்கே என் மயிலின் மயில் வாகனம்?
கூர்க்கா ஒரு முட்டாள். ஊத மறந்து நிற்கிறான். ஹில்மன் கேம்பிரிட்ஜ் ஆகாயத்திலிருந்து வழிந்து வருவதைப் போல..டிரைவிங் ஸீட்டல் மயில. மயிலின் கண்களில் சிரிப்பு. தாமரை இதழ் என்னை நோக்கி அசைகிறது. அழைக்கிறது. சிரிக்கிறேன். ஓடுகிறேன். கதவைத் திறக்கிறேன். மயிலுக்குப் புடவை என்ன அழகாய்...
மயிலின் கண்கள் ஆனந்த ஷங்கரின் கண்களை. ஆனந்த் ஷங்கரின் கண்கள் மயிலின் கண்களை. ஜுய்க் பாக்ஸ் பாட்டுப் பாடி எங்களை வரவேற்கிறது.
ப்ளு டயமண்டில் ரோஸ் மேரீஸ் பேபி. கேலார்டில் ரத்தச் சிகப்புக் கம்பளத்தின் மேல் வெளிச்சமான நடனங்கள். ட்ரைவ் இன். கடற்கரைக் கோயில்.
மயில் ஒரு நாள் என்னிடம் சொன்னது : "தாடி வைத்துக் கொள்ளுங்கள்." நான் சொன்னேன் : "நானென்ன ஆப்ரஹாம் லிங்கனா? ஆஃப்ட்ரால..." க்யூடெக்ஸ் முலாமிட்ட மயிலின் நகங்கள் என் உதடுகளை மூடின. மயில் கேட்டாள். "யாரெல்லாம் உங்கள் குருஜிகள்; யாருக்கெல்லாம் நீங்கள் அட்மைரரர்?" தொடர்ந்தும் மயிலே சொன்னாள்.
"ஷேக்ஸ்பியர்?"
"யா.."
"ஷா.."
"யா.."
"டால்ஸ்டாய் அன் ஹேமிங்வே?"
"யா.."
"யுவர் செகால்."
"யா.."
அவர்களைப் போலவே நானும் தாடி வைத்தேன். தாடியுடன் நான். என்னுடன் மயில். எங்களுடைய காதலை எப்போது வீட்டில் சொல்லப் போகிறோம்? விரைவில் மயிலின் அப்பா தெரிந்தால் சந்தோ1ப் படுவார். ஆனந்த் ஷங்கர் ஒரு நவீன ஷேக்ஸ்பியர் ஆயிற்றே...என் அம்மாவிற்குத் தெரிந்தால்? மயிலுக்கும் காது குத்தி வைரத்தோடு போடுவேன் என்பாள்.
நானும் மயிலும் கலாம் கனியக் காத்திருக்கிறோம்.
ஓடியன் கடைசி வரிசையில் நானும், மயிலும். எல்லோரின் கண்களும் எங்கள்மேல்.
'க்ராஜ்யேட்' ஆரம்பத்தில் மயில் வெட்கமடைந்தது. அப்புறம் சிரித்தது. பின் மௌனம். சந்தோஷம். வருத்தம். கடைசியில் அதிகமான பூரிப்பு. அருமையான திரைப்படம். பின் மயில் ஏனோ சிந்தனையானாள். மஞ்சள் வர்ணத்தை மௌனமாகச் செலுத்துகிறாள். ஒரு வாரமாகவே அவள் ஏதோ சிந்தனையில்.
ஒரு நாள், என்ன மழை என்ன காற்று. ஸ்வப்னாவிலிருந்து நாங்கள். காரின் கண்ணாடிகளில் பனிப்போர்வை. குளுமையாக, மஞ்சள் தேய்த்துக் குளித்தது போல ஹில்மன் கேம்பரிட்ஜ் நீர் வழிந்து அதன் மஞ்சள் வர்ணமே கரைவது போல். நாங்கள் இருவரும் மௌனமாக.
வைப்பர்கள் இயங்குகின்றன. கார் கிளம்புகிறது. அண்ணாசாலை, சேப்பாக், மாநிலக் கல்லூரி...க்வின் மேரிஸ்.
மயில் என்னைப் பார்க்காமலே, "ஆனந்த்; உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்..."
சாந்தோம். க்ரீன்வேஸ்ரோட்...
'பொகைன்வில்லா - ஈரம் சொட்டச் சொட்ட..
ஒட்டப்பட்ட வெள்ளைக் கவரை என்னிடம் நீட்டுகிறாள்.
"குட் நைட்.."
"குட் நைட்"
மேலே மேகங்கள் முட்டி மோதி வெடிக்கின்றன. கடிதத்துடன் என்னுடைய அறைக்கு ஓடுகிறேன். கதவைப் பூட்டுகிறேன். மயிலின் கடிதத்தைப் பிரிக்கிறேன்.
அன்புள்ள நண்பரே -
ஐந்து தினங்களுக்கு முன்பாக ஷைக்காவ்ஸ்கியின் குளிர்காலக் கனவுகளை ரிக்கார்ட் ப்ளேயரில் போட்டேன். எனக்கு என்ன ஆகிவிட்டது? சிவப்பு விரிப்பில் என்னைக் கூத்தாட வைக்கும் அந்த இசை வறண்டு போயிருந்தது. மயங்கி மயங்கி நான் ரசித்த ரசிப்பெல்லாம் எப்படி எதனால் சலித்துப் போயிற்று. பாதியில் நிறுத்தினேன். சிந்தித்தேன். ரசனையும் சலித்துப் போகுமா?
ஒவ்வொரு சம்மருக்கும் லோனாவாலா இன்னும் சலித்துப் போகவில்லையா? அங்கு போய்ச் சேரும் நாளில் நான் எப்படி மகிழ்ச்சி கொள்வேன்? பிரியும்போது எப்படி மனம் கனத்துக் கலங்குவேன். அப்படிப் பிரிந்து வந்து விடுவதாலேயேதான் அந்தப் பள்ளத் தாக்குகளின் மேல் உள்ள ரசனை மாறாமல் சலிக்காமல் இருக்கிறேனா? அதை விட்டு வர முடியவில்லை என்பதற்காக அந்தப் பள்ளத்தாக்கிலேயே என் வாழ்க்கையை நிரந்தரமாகப் பிணைத்துக் கொண்டால், அப்படிப் பிணைத்துக் கொள்வதாலேயே என் ரசனை என்ன வாகும்? காலத்தில் உலர்ந்து ஆவியாகிப் போகும்.
- அப்படி உலர்ந்து போய்விடக்கூடாது என் ரசனை. அந்த ரசனையின்; காதலின் இனிமையை உலரவிட மாட்டேன் நான். அந்த லோனாவாலாவைப் பிரிந்திருக்கிற பிரிவுதான்; அந்தப் பிரிவின் ஏக்கம்தான் - ரசனையின் காதலின் ஜீவன். சாரம். லோனாவாலாவிலேயே என் வாழ்வைப் பிணைத்து ரசனையின் சுக உயிரை இழப்பதைவிட அதைப் பரிந்திருந்து காலமெல்லாம் கரையாத காதலுடன் வாழவே நான் விரும்புகிறேன்.
ஆனந்த் : வாழ்க்கையில் நாம் நம்மை நிரந்தரமாக பிணைத்துக் கொண்டு சலிப்படையக் கூடாது. பெரு மூச்சுக்களின் உஷ்ணத்தில் நம் காதல் கனலாகிவிடக் கூடாது. நம் நெஞ்சங்களின் ஆழத்தில் என்றும் அது ஜீவ ஊற்றாக ஜீவித்திருக்க. நம் நினைவுகளிலும் கனவுகளிலும் காதல் என்றைக்கும் உயிர்த்திருக்க ; பசுமையாக நிலை பெற்றிருக்க - நாம் நம்மைப் பிரித்துக் கொள்வோம். பிரிவின் ஏக்கம்தான்; அந்தக் ஏக்கத்தின் கண்ணீர் தான் நம் காதலுக்கு உரம். அந்த உரத்துடன் வாழ்ந்திருப்போம் - கண்ணீருடன்; மாறாத காதலுடன் உங்களுடன் விடை பெறுவது - ஸில்வியா ஆண்டர்ஸன் என்ற - உங்களின் பெப்பி...
நான் கண்ணீர் விட்டேன். பெட்ரூமில். பாத்ரூமில். இனி நான் என்ன செய்யப் போகிறேன்? யாரிடம் சொல்வேன்? மயிலின் பொன் வர்ணக் கூந்தலை வாரிவிடாமல்; அவளின் நீல நிற விழிகளைக் காணாமல் - இவ்வளவு அருகாமையில் என்னால் சிறைப்பட்டிருக்க முடியாது. நான் போய் விடுகிறேன். ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. உறுதி செய்து விட்டேன்.
ஸாண்டாகுரூஸ். அப்பா, அம்மா, புரபஸர் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன்; நீலவிழிகளில் நீர்படிய என் மயில்...
ஜூஹிவில் இருந்து குளிர்ந்த உப்பங்காற்று. அந்தக் காற்றில் பொன் வர்ணக் கூந்தல் தலைதெறிக்க விடை தருகிறது. குலுக்கிய தாமரைக் கையை ஒரே ஒரு முத்தம்? முடியவில்லை.
விமானத்தின் கதவுகள் மூடுகின்றன.
ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டியில் ; மஞ்சள் நிறப் பூக்கள் விரிப்பாய் உதிர்ந்திருக்கின்ற மைதானத்தில்; மூடு பனியில் - நான் மட்டும்.....கண்ணீருடன்
ஸ்டெல்லாபுரூஸின் நீண்டகால நண்பர் ஸ்ரீ தேவராஜன் விருப்பப்படி இக்கதையைப் பிரசுரித்துள்ளேன். - ஆசிரியர் நவீன விருட்சம் 79-80வது இதழில் பிரசுரமான கதை
Comments
A lovely story.
மயிற்தோகையின் மென் தொடலாய் ஒரு ப்ரமாதமான காதலனுபவத்தை உணரச் செய்தது.
கருத்துரையில் வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கி விட்டால் கருத்துரையிடுபவர்களுக்கு சுலபமாயிருக்கும். யோசிக்கவும்.