சிறுகதை
தேனீர் கடையில் வழக்கம் போல் நான்கைந்து பேர் கண்ணாடி தம்ளரில் டீயை உறிஞ்சிக்கொண்டு நின்றிருந்தார்கள்। பக்கத்திலேயே நன்றாக வளர்ந்திருந்த புங்கை மரம் தாராளமாகவே நிழல் பரப்பியிருந்தது। அதன் கீழே இருந்த பங்க் கடையை ஒட்டி அடுப்பில் பெரிய வாணலியில் வடை, பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தார்கள்। அந்த வாசனை நாசியைத் தூண்டிக் கொண்டிருந்தது . கணேசன் டீ மாஸ்டரிடம் ஒரு தேனீருக்கு சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். அவனுடைய அலுவலகம் எதிரில்தான் இருந்தது. காலை பதினொரு மணி ஆகிவிட்டது.
அலுவலக வேலை இனிமேல்தான் சூடு பிடிக்கும். அப்புறம் சிகரெட் பிடிக்க நேரமிருக்காது. டீக்கடைப் பையன் கணேசனிடம் டீயைக் கொடுத்து விட்டு மூலையில் சாத்தியிருந்த மூங்கில் கம்பை கையிலெடுத்தான்। கம்பை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான் என்று கணேசன் யோசித்துக் கொண்டே டீயை உறிஞ்சினான்। பையன் மரத்தின் அடித்தண்டின் மீது ஏறி மூங்கில் கம்பை மேலே உயர்த்தி எதையோ தொட முயற்சி செய்தான்.
"தம்பி அங்க என்னப்பா பண்ற?" என்றான் கணேசன். பையன் பதிலே பேசாமல் காரியமே கண்ணாக மரத்தின் கிளைகளுக்கிடையில் துழாவிக் கொண்டிருந்தான்.
"கேக்கறாங்க இல்ல?...." - பக்கத்தில் நின்றிருந்த ஆள்...
"அங்க பொந்துல கிளியொண்ணு இருக்குதில்ல, அத்தைப் பிடிக்கணுமின்னு பாக்குறான் பய." தேனீர் மாஸ்டர் பதில் சொன்னார்। "ஏன், வேற வேல ஏதும் இல்லியா உனக்கு? அதைப்பிடிச்சி வெச்சிக்கிட்டு என்ன பண்ணப்போற ?" பையனிடம் கணேசன் கேட்டான்। பையன் கணேசன் சொன்னதைக் காதில் வாங்காதவன் போல கம்பை மரக்கிளைகளுக்கிடையில் செலுத்திக் கொண்டிருந்தான்। கணேசன் காலி கண்ணாடி தம்ளரை பெஞ்சில் வைத்துவிட்டு எழுந்து போய் நின்று பார்த்தான்। மேலே தவழ்ந்த கிளையில் பெரிய பொந்து ஒன்று இருண்ட வட்டமாகத் தெரிந்ததே தவிர வேறொன்றும் புலப்படவில்லை। பையனால் கம்பை பொந்துக்குள் நுழைக்க முடியாமல், முயற்சியில் தளர்வடைந்தவனாக இறங்கி வந்தான்।।"அப்பாடா, தப்பித்தது பொந்தி லிருக்கிற அந்த, அது கிளியோ குருவியோ..." என்று கணேசன் அவசரப்பட்டு நினைத்தது தப்பாகப் போனது। பையன் எங்கிருந்தோ வளைவான இரும்புக் கொக்கியை எடுத்து வந்து மூங்கில் கம்பில் பிணைத்துக் கட்டி மறுபடியும் மரத்தில் விடுவிடுவென்று ஏறினான்। "சொல்றதக் காதுல வாங்கறானா பாரேன் - " என்றார் பக்கத்திலிருந்தவர்। தேனீர் சாப்பிட்டபடி, புகைத்தபடி நின்றவர்கள் எல்லோரும் பையன் செய்வதைத் தலை நிமிர்த்தி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். பையன் ஆவேசமாக கம்பின் நுனியில் பொருத்தியிருந்த கத்தி வளைவை பொந்துக்குள் விட்டுத் துருவ ஆரம்பித்தான். அவ்வப்போது கீச்கீச் என்று சப்தம் கேட்டாலும் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை।
"டேய் அதையேண்டா நோண்டிக் கிட்டிருக்க, எறங்கு கீழ..." கணேசன் பையனை அதட்டினான்।
பையன் தலையைத் திருப்பி, "ஒன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போ," என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு இன்னும் தீவிரமாகத் துழாவ ஆரம்பித்தான்।
"யோவ் அவன எறங்கச் சொல்லுய்யா, வேற வேல இல்ல அவனுக்கு ॥?" என்றான் கணேசன் கடைக்காரனிடம்। எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்த கடைக்காரன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு "த்ச" என்றுவிட்டு கணக்கைத் தொடர ஆரம்பித்தான்। தேனீர் குடித்துக் கொண்டி ருந்தவர்கள் சாலையின் நடுவில் போய் நின்றுகொண்டு மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். வேறொன்றும் செய்ய முடியாமல் சிகரெட்டை இறுதித் திருப்தியாக ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டுதேனீருக்கான காசையும் கொடுத்து விட்டு கணேசன் நகர்ந்தான். அப்போது அவனைக் கடந்து சென்ற சிறிய மோட்டார் சைக்கிள் திடீரென்று க்றீச்சிட்டு நின்ற சப்தம் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. மரத்தின் கீழே மோட்டார் வாகனத்தில் இரண்டு கைகளும் மேலே உயர்ந்து தலைக் கவசத்தை விலக்க கல்லூரி மாணவி போல இளம் பெண்ணொருத்தியின் முகம் பளிச்சென்று வெளிப்பட்டது. "அந்தப் பையன் மரத்துல என்ன செஞ்சுக் கிட்டிருக்கான்...?" என்று பக்கத்தில் இருந்த ஆளிடம் வண்டியிலிருந்து இறங்கி விசாரித்தாள் அந்தப் பெண். "பொந்துல கிளியோ குருவியோ இருக்குது. அதப் புடிக்கப் பாக்குறான் பய." "எதுக்கு அதைப் பிடிக்கணும். பிடிச்சு என்ன பண்ணப் போறான் "என்றாள் அவள்। "சும்மா புடிச்சு வளக்கத்தான்।" "நோ நோ," என்று தலையை வேகமாக அசைத்தாள் அந்தப் பெண்। நிமிர்ந்து விடாமுயற்சியுடன் கழியால் பொந்தைத் துளைத்துக் கொண்டிருந்த பையனை நோக்கி, "தம்பி அதெல்லாம் பண்ணக் கூடாது, கீழே இறங்கு," என்றாள் கண்டிப்பான குரலில்। பையன் பெண் குரல் கேட்டு முதல் முறையாகக் கொஞ்சம் தயங்கினான்। தலையைத் திருப்பிக்கொண்டு கம்பை மறுபடியும் உயர்த்தி பொந்தை நோக்கிக் கொண்டு போனான். "இப்ப எறங்கப் போறியா இல்லையா நீ?" என்று அவள் குரலை உயர்த்தி பையனைப் பார்த்து சத்தம் போட்டாள் அவள். "நீ எறங்கற வரைக்கும் நான் போகமாட்டேன்," என்றாள் அவள். "டேய் எறங்குடா," இப்போது பக்கத்திலிருந்த ஆள் குரல்கொடுத்தான். "புடிச்சு வெச்சுக்கிட்டு என்னத்தைப் பண்ணப் போறே? றக்கையைப் பிச்சிப் புடுங்கி சித்ரவதை பண்ணவா?" என்றார் தேநீரைப் பருகி முடித்த இன்னொருவர். அதுவரை சும்மா இருந்த கடைக்காரன், "கஸ்டமர் வெயிட் பண்ணிக்கிட்டிருக்காங்க, அங்க என்னத்தைப் புடுங்கிக்கிட்ருக்க? கிளாச வந்து கழுவுடா டேய்," என்று அதட்டினான். பையன் தலையைச் சொறிந்தபடி இறங்கி வந்தான். அந்தப் பெண் அவன் கம்பை வைத்துவிட்டு வரும் வரை காத்திருந்தாள். பையன் தலையைக் கவிழ்த்தபடி அவளைக் கடந்து போனான். அவன் திரும்பி வரும்வரை காத்திருந்து, "ரொம்ப தேங்ஸ்," என்று அவள் சிரித்தவாறு சொன்னாள். பையன் நிமிராமல் வேலையைக் கவனிக்கப் போனான். அவள் தன்னுடைய மோபெடை கிளப்பிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தாள். அப்போது சிவப்பு மூக்கு தெரிய, பொந்திலிருந்து மெல்ல ஒரு கிளி தலை நீட்டிக் கீழே நின்ற அவளைப் பார்த்தது. அவள் சிரித்துக்கொண்டே ஹெல் மெட்டை அணிந்து, வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு கணேசனைக் கடந்து போனாள்। அவள் அணிந்திருந்த சல்வார் கமீஸ் கிளிப் பச்சை வண்ணத்திலும், துப்பட்டா, காதணி, தலைக் கவசம் எல்லாம் சிவப்பாகவும் இருப்பதை கணேசன் அப்போதுதான் கவனித்தான்.
(ஜுலை - டிசம்பர் 2003 நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கதை)
Comments