சிறுகதை தேனீர் கடையில் வழக்கம் போல் நான்கைந்து பேர் கண்ணாடி தம்ளரில் டீயை உறிஞ்சிக்கொண்டு நின்றிருந்தார்கள்। பக்கத்திலேயே நன்றாக வளர்ந்திருந்த புங்கை மரம் தாராளமாகவே நிழல் பரப்பியிருந்தது। அதன் கீழே இருந்த பங்க் கடையை ஒட்டி அடுப்பில் பெரிய வாணலியில் வடை, பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தார்கள்। அந்த வாசனை நாசியைத் தூண்டிக் கொண்டிருந்தது . கணேசன் டீ மாஸ்டரிடம் ஒரு தேனீருக்கு சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். அவனுடைய அலுவலகம் எதிரில்தான் இருந்தது. காலை பதினொரு மணி ஆகிவிட்டது. அலுவலக வேலை இனிமேல்தான் சூடு பிடிக்கும். அப்புறம் சிகரெட் பிடிக்க நேரமிருக்காது. டீக்கடைப் பையன் கணேசனிடம் டீயைக் கொடுத்து விட்டு மூலையில் சாத்தியிருந்த மூங்கில் கம்பை கையிலெடுத்தான்। கம்பை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான் என்று கணேசன் யோசித்துக் கொண்டே டீயை உறிஞ்சினான்। பையன் மரத்தின் அடித்தண்டின் மீது ஏறி மூங்கில் கம்பை மேலே உயர்த்தி எதையோ தொட முயற்சி செய்தான். "தம்பி அங்க என்னப்பா பண்ற?" என்றான் கணேசன். பையன் பதிலே பேசாமல் காரியமே கண்ணாக மரத்தின் கிளைகளுக்கிடையில் துழாவிக் கொண்டிருந்தான். ...