Skip to main content

நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம்

ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜெகனும், மோகினியும் 'ஹாப்பி டிராவல்ஸ்' பஸ் பிடித்து மயிலாடுதுறையில் உள்ள வள்ளலார் கோயில் சன்னதித் தெருவில் காலை 5 மணிக்கு இறங்குகிறார்கள்। அவர்களை ஆவலுடன் வரவேற்று தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார் அழகியசிங்கர்।
அழகியசிங்கர் : நீங்கள் இருவரும் என்னைத் தேடி வந்ததற்கு நன்றி.
ஜெகன் : உங்களைப் பார்க்க வேண்டுமென்று மோகினிதான் சொன்னார்.
மோகினி : ஜெகனுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்து சற்று வருத்தமாக இருந்தது. அதனால் உங்களைப் பார்க்க ஆவல்.
அழகியசிங்கர் (வீட்டிற்குள் நுழைவதற்கு முன்) : பார்த்து வாருங்கள். இந்த இடத்தில் குறுகலான படிகள். தலை இடித்துவிடும். (ஜெகனும், மோகினியும் குனிந்துகொண்டு வருகிறார்கள்)
அழகியசிங்கர் (சிரித்துக்கொண்டே) : வலது காலை எடுத்துவைத்து வாருங்கள். இங்கே நான் உங்களுக்கு எதுவும் தரமுடியாது. ஆனால் பக்கத்தில் 'மயூரா லாட்ஜ்' என்ற ஓட்டல் இருக்கிறது. அங்கே போய் டிபன் சாப்பிடலாம்.
மோகினி : ஏன் 'மயூரா லாட்ஜில்' டிபன் நன்றாக இருக்குமா?
அழகியசிங்கர் : இங்கே 'மயூரா லாட்ஜ்'தான் புகழ்பெற்றது. நான் இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொருமுறையும் இந்த ஓட்டலில் ஒரு ஊத்தப்பத்தை ஆர்டர் செய்து முழுதாக சாப்பிட நினைப்பதுண்டு. இதுவரை முடிந்ததில்லை.
ஜெகனும், மோகினியும் சிரிக்கிறார்கள்.
ஜெகன் : இத்தனைப் பெரிய இடத்தில் நீங்கள் தனியாக இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது.
அழகியசிங்கர் : தனிமை சிலசமயங்களில் மோசமான எண்ணங்களையும் உருவாக்கும்
மோகினி : அலுவகத்திற்கு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : 'தமிழ்' பஸ்ஸில் செல்வதில்லை. சென்னையிலிருந்து பஜாஜ் வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதில்தான் தினமும் பயணம். காலை 9.10 - க்குக் கிளம்பினால், 9.45 - க்கெல்லாம் போய்விடலாம். பசுமையான 'வாணாதிராஜபுரம்' என்ற ஊர். அதன் வழியாக வண்டியில் போனால் ஊட்டியில் உள்ள ஒரு சாலையில் போவது போல் இருக்கிறது. தெருவின் இருபுறங்களிலும் அடர்த்தியாக நீண்ட நீண்ட மரங்கள். அதேபோல் வேலூர் என்ற ஊர் வழியாகப் போகும்போது, பாதைகளின் இருபக்கங்களிலும் வயல்கள் சூழ ஆட்கள் நடமாட்டமில்லாத பிரதேசத்தில் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. சென்னையில் கூட்ட நெரிசலில் மின்சார வண்டியில் சென்று கொண்டிருந்த என் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அலுவலகம் முடிந்து திரும்பி வர இரவு ஆனால், நான் காலையில் பார்த்த காட்சி முற்றிலும் மாறி விடுகிறது. கிராமம் வழியாக வரும்போது, நீண்ட நீண்ட பனை மரங்கள், பிசாசுக்களைப் போல் காட்சி அளித்து என்னைத் துரத்துவதுபோல் இருக்கும்.
ஜெகன் : சரி, இங்கே வந்து என்ன செய்தீர்கள்?
அழகியசிங்கர் : அலுவலகம் போய்விட்டு வந்தாலே நேரம் முழுவதும் போய்விடும். படிப்பதற்கும் எதாவது எழுதுவதற்கும் நேரம் கிடைக்காது. இருந்தாலும் Milan Kundera வின் The Unbearable Lightness of Being என்ற அற்புதமான நாவலைப் படித்து முடித்தேன். மற்றபடி தி லைப் ஆப் பை என்ற நாவலில் 70 பக்கம் வரைப் படித்திருப்பேன்। அந்தப் புத்தகத்தின் மீது என் மனம் ஒன்றவில்லை. 4 அல்லது 5 கவிதைகள் எழுதியிருப்பேன்.
மோகினி : சென்னையில் நீங்கள் இருந்திருந்தால், இதையெல்லாம் செய்திருக்க முடியுமா?
அழகியசிங்கர் : சென்னையில் வேறுமாதிரி இருந்திருப்பேன். படிப்பதும், எழுதுவதும் இயல்பாக நிகழும் நிலையிலிருந்து மாறிவிட்டதாகத்தான் நினைக்கிறேன். எழுதுகிறவர்களுக்குப் பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டுமென்ற ஆர்வம் குறைந்துகொண்டு வருவதாகத்தான் தோன்றுகிறது.
ஜெகன்: ஆனால் ஏகப்பட்ட பத்திரிகைகள் வந்து கொண்டி ருக்கின்றன॥எல்லோரும் எழுதாமலில்லை.
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு சிலரே எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதுகிறார்கள்। இலக்கியப் பத்திரிகைக்கு தீனி போடுபவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். இவர்களிடம் கேட்டு வாங்கிப் போட்டால் ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு உருவம் வந்துவிடும். ஒரு பத்திரிகையைப் பார்த்து இன்னொரு பத்திரிகை வந்து விட்டது. கணையாழி மாதிரி இன்னொரு பத்திரிகை. 'காலச்சுவடு' மாதிரி ஒன்று வந்து விட்டது. இன்னும் எத்தனை பத்திரிகைகள் வருமோ தெரியாது.
மோகினி : பத்திரிகைகள் அதிகரிக்க அதிகரிக்க வாசகர் எண்ணிக்கைக் குறைகிறது என்று சொல்ல வருகிறீர்களா?
அழகியசிங்கர் : வாசகர் எண்ணிக்கைப் பற்றி சொல்ல வரவில்லை। குமுதம் எடுத்துக்கொண்டால், தமிழ் நாட்டு ஜனத்தொகையுடன் ஒப்பிடும்போது அதனுடைய வாசக எண்ணிக்கைக் குறைவு என்று என் நண்பர் ஒருவர் குறிப்பிடுவார்.
ஜெகன் : சிறு பத்திரிகைகள் வாசக எண்ணிக்கையைப் பற்றியெல்லாம் கவலைப் படாதவை.
மோகினி : ஆனால் குமுதம், 'இலக்கியம்', 'பக்தி', 'ஜோசியம்', 'பெண்களுக்கான பத்திரிகை' என்றெல்லாம் தொடங்கிவிட்டது।
ஜெகன் : அதற்கு போட்டி ஆனந்தவிகடன்.
மோகினி : குமுதம் 'தீரா நதி' என்ற பெயரில் இலக்கியப் பத்திரிகை கொண்டு வருகிறதே, அது சிறுபத்திரிகைகளுக்குப் போட்டியா?
அழகியசிங்கர் : நிச்சயமாக இல்லை। எந்தந்த மூலைகளிலிருந்தும் சிறுபத்திரிகைகள் உற்பத்தி ஆனவண்ணம் இருக்கும்। நிற்கும். திரும்பவும் வரும். குறிப்பிட்ட காலத்திற்குள் கொண்டு வரவேண்டுமென்ற நோக்கமும் இல்லை. வாசக எண்ணிக்கை பற்றி கவலைப்படவும் படாது. எப்படி ஒரு பத்திரிகை இருக்க வேண்டுமென்ற வரைமுறையும் கிடையாது.
ஜெகன் : விருட்சம் 17வது ஆண்டாக வர உள்ளது। வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அழகியசிங்கர் : நான் வாசகர் என்று சொல்வதில்லை। வாசிப்பவர் என்று சொல்வேன்। வாசிப்பவரே, நவீன விருட்சம் என்ற இப் பத்திரிகை தொடர்ந்து 16 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அடுத்த இதழிலிருந்து 17 வது ஆண்டு துவங்குகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்குள் விருட்சத்தை நடத்துவது சாத்தியமில்லை. அதனால் விருட்சம் இதழ் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு, உதாரணமாக 17வது ஆண்டு என்றால் இதழ் 65 முதல் 68 வரைக்கான சந்தாவாக ரூ.40.00 அனுப்புங்கள்.
ஜெகன், மோகினி : 'முதலில் நாங்கள் எங்கள் நன்கொடையை உங்கள் பத்திரிகைக்கு அளிக்கிறோம்,' என்று நன்கொடை செக் அளிக்கிறார்கள்।
(செப்டம்பர் 2004 ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் வெளிவந்த தலையங்கக் கட்டுரை)

Comments