நவீன விருட்சம்
அழகியசிங்கர் 17।10।2008
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு மேற்கு மாம்பலம் சென்னை 600 033
அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்।
நவீன விருட்சம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக காலாண்டு இலக்கியச் சிற்றேடு நடத்தி வருகிறேன்। கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.
நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் பிரதிகள் தமிழ் புத்தகங்கள் வாங்க உத்தரவு இட்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்। பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தவிர, இன்று தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு। மேலும் தமிழில் எழுதும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் மோசமானது। அவர்கள் எழுதும் எழுத்தால் சாதாரண நிலையைக் கூட அவர்களால் எட்ட முடியாது.
நான் கல்லூரியில் படித்தபோது, தமிழ் ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதோடல்லாமல், தமிழ் வகுப்புகளே கிண்டலுக்குரிய இடமாகக் காட்சி அளிக்கும்।அதுமாதிரியான தருணத்தில் தமிழில் ஆர்வம் கொண்டு எழுதுவது என்பது சிரமமானது। எழுதும் எழுத்து புத்தகமாக வருவதும், பத்திரிகைகளில் பிரசுரமாவதும் அவ்வளவு சுலபமானதில்லை.
நவீன விருட்சம் என்ற என் பத்திரிகையில் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக கவிதைகளையே பெரும்பாலும் வெளியிட்டு வருகிறேன்। கவிதைகள் வெளியிட்டு வந்தாலும், கவிதையைப் போல கிண்டலுக்குரிய ஒன்று தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா என்பது தெரியவில்லை. அதேபோல் கவிதை எழுதுபவர்களிடையே பல பிரிவுகள். இப் பிரிவுகள் ஒன்றை ஒன்று சாடுவதோடல்லாம், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் பெரும்பாலான காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றன.
என் பத்திரிகையை ஆயிரம் பேர்களுக்கு மேல் படிப்பதில்லை என்றே நினைக்கிறேன்। இது தமிழ் ஜனத்தொகையை எடுத்துக்கொள்ளும்போது, ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.
இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகம் கொண்டு வர வேண்டியுள்ளது.
புத்தகம் கொண்டு வந்தாலும், விற்பது என்பது அசாதாரண விஷயமாகத் தோன்றுகிறது. அசாதாரண விஷயம் மட்டுமல்ல, விற்கவே முடியாத நிலைதான் உருவாகி உள்ளது. கவிதைப் புத்தகம் விற்க வாய்ப்பே இல்லை. என்னைப் போன்றவர்கள் நூலகத்தையே சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக ஓராண்டில் நான் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களுக்கு மேல் கொண்டு வர மாட்டேன். 2006 ஆம் ஆண்டில் மட்டும் 6 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். 6 புத்தகங்களில் 4 புத்தகங்கள் மட்டும் கவிதைப் புத்தகங்கள். இந்த முறை எனக்கு நூல்கள் வாங்க வந்த உத்தரவில் கவிதைப் புத்தகங்களுக்கு மட்டும் ஆதரவு கிட்டவில்லை. இது எனக்குப் பெரிய ஏமாற்றம். கவிதை எழுதுவதில் திறமைப் படைத்த முதல்வர் ஆட்சியில், கவிதைப் புத்தகங்களுக்கு நூலக ஆதரவு இல்லை. என் வருத்தம் கவிதைகள் எப்படியானாலும் விற்கவும் போவதில்லை. நூலக ஆதரவை ஒட்டியே கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும். அதற்கு நூலக ஆதரவு இல்லை என்றால், புத்தகங்களைக் கட்டுக் கட்டாக வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விற்காமல் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பதைப் போல் வேறு எதுவும் இல்லை. நான் இப்படிப் பல புத்தகங்களை வைத்துக்கொண்டு வீட்டில் திட்டும் வாங்கிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவன். முழுநேரமும் எழுத்தையே நம்பி இல்லாமலிருப்பதால் தப்பித்தேன்.
முதல்வர் அவர்களே, நான் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் அண்ணாவைக் குறித்து எழுதிய கவிதையை உங்கள் குரலிலேயே வானொலியில் ஒலி பரப்பினார்கள். அதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் கவிதையைப் பொருத்தவரை நீங்கள் எழுதுவது வேறு விதம், நாங்கள் எழுதுவது வேறு விதம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான கவிதை மனம் என்ற ஒன்று இருக்கும். ஏன் தங்கள் புதல்வி கனிமொழி அவர்கள் எழுதும் கவிதைகள் நீங்கள் எழுதும் கவிதைகளைவிட முற்றிலும் வேறுவிதமானவை. கவிதையை ஆதரிக்கிற, எழுதுகிற ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு ஆட்சி செய்யும்போது, கவிதைக்கும் அவருக்கும் வெகுதூரம் என்ற கருத்தில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. சுபோத் சர்கார் எழுதிய அக் கவிதையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.சிறிய கவிதையான அதை தங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன்.
பூதமும் கவிதைப் புத்தகம் வாங்குபவரும்
மீன் பிடிப்பவர் கவிதை வாசிப்பதில்லை
தேன் விற்பவர் கவிதை வாசிப்பதில்லை
நோயாளியான இளைஞனும்,
சகோதரனும் கவிதை வாசிப்பதில்லை
மிஸ்டர் ஜோதிபாசு கவிதை வாசிப்பதில்லை
கவிதைப் புத்தகம் வெளயிடுபவர்
கவிதை வாசிப்பதில்லை
கல்லூரி ஆசிரியர் கவிதை வாசிப்பதில்லை
பின் எந்தப் பூதம் கவிதைகளை வாசிக்கும்?
யார்தான் கவிதைப் புத்தகங்களை வாங்குவார்கள்?
கவிதையின் இன்றைய அவலநிலையைக் குறித்துதான் இக் கவிதை।
2006 ஆம் ஆண்டு நூலக ஆதரவு கிட்டாத 4 கவிதைத் தொகுதிகள் குறித்து சிறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்।
விருட்சம் கவிதைகள் தொகுதி 1 - இப் புத்தகம் 94 கவிஞர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட நூல். இப் புத்தகத்தில் வெளியான கவிதைகள் 1988ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளில் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி நூல். தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பல முக்கிய கவிஞர்களின் கவிதைகள் உள்ள நூல் இது. ஒரு பல்கலைக் கழகம் கூட இப்படி ஒரு தொகுதியைத் தயாரிக்க முடியாது.
2. அழகியசிங்கர் கவிதைகள் : 183 கவிதைகள் கொண்ட என் தொகுதி நூல். 1975 ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறேன். என் கவிதைகள் சில ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. இந் நூலுக்கும் ஆதரவு கிட்டவில்லை. வல்லிக்கண்ணன், சுஜாதா, தமிழவன், வெங்கட் சாமிநாதன் முதலியவர்கள் என் கவிதை நூலிற்கு விமர்சனம் எழுதி உள்ளார்கள்.
3. ரா ஸ்ரீனிவாஸன் கவிதைகள் : என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸனின் தொகுப்பு இது। ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு இந் நூல் வெளி வந்துள்ளது. ரா ஸ்ரீனிவாஸனின் கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
4. நீல பத்மநாபன் எழுதிய ஐயப்பப் பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும் என்ற புத்தகம் மலையாளப் படைப்பாளியான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தி உள்ளன. நீல பத்மநாபன் அவருடைய தோழரான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகள்.கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்।।
கவிதை சம்பந்தப்பட்ட இந்த நான்கு புத்தகங்களுக்கும் நூலக ஆதரவு கிட்டவில்லை. தங்கள் பார்வைக்கு இந்த நான்கு புத்தகங்களையும் அனுப்பி உள்ளேன். உங்களுக்கு இக் கடிதத்தைப் படிக்க நேரம் இருக்குமா என்பது தெரியாது. மேலும் நான் அனுப்புகிற இப் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கக்கூட உங்களுக்கு நேரம் இருக்குமா என்பதும் தெரியாது. உங்கள் பார்வைக்கு இக் கடிதம் வருமா என்பதும் தெரியாது. உங்களுக்கு அனுப்பும் இக் கடிதத்தை navinavirutcham.blogspot.comசேர்த்துள்ளேன்.
அன்புடன்
அழகியசிங்கர்
Comments
நாகார்ஜுனன்
http://nagarjunan.blogspot.com/2008/10/blog-post_21.html
Pls let me know where i can buy your books !
I am not able to find it anywhere !
my contact details
selvam.manickam@gmail.com
98866-41326.
Selvam
Pls ignore my previous post.
Will come and collect books from below address.
நவீன விருட்சம்
அழகியசிங்கர்
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை 600 033
Thanks and regards
Selvam
good joke.you dont need a university to do this. one
person is more than enough.
i think there are thousands
(perhaps lakhs) of poets in tamil and hundreds of poetry
collections are published
every year in tamil.
if the govt. wants to buy
all of them each 300/400 copies
a good portion of the funds
for libraries will go only
for buying poetry collections.
இதில் என்ன joke இருக்கிறது. கவிதைகளைப் பற்றி அறிவு உள்ளவர்களில் ஒருவர் இருந்தால் போதும் விருட்சம் கவிதைகள் போன்ற தொகுதி நூல் தொகுக்க முடியும். அதை ஏன் பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வருவதில்லை. படைப்பிலக்கியத்திற்காக எதாவது பிரிவு பல்கலைக் கழகத்தில் உள்ளதா? கவிதை கதை எப்படி எழுத முடியும் என்ற பாடம் நடத்துகிறார்களா? பல்கலைக் கழகம் படைப்பிலக்கியத்திற்காக என்ன புத்தகம் கொண்டு வந்துள்ளது.
என் தொகுதி ஒரு சிறுபத்திரிகையில் ஐந்தாண்டுகளாக எழுதப்பட்ட முயற்சி. அதிலிருந்த எடுக்கப்பட்ட கவிதைகள். இன்று கவிதை எழுதுபவருக்கு உதாரணமாக இருக்கக் கூடிய தொகுதி.
நூலகம் கவிதைகளை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்க முயலுவதில்லை. கோடிக்கணக்கான பணத்தில் நூலகங்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்கள் வாங்குகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான என் அனுபவத்தில் கவிதைப் புத்தகத்திற்கு நூலகம் பெரிதாக ஆதரவு தருவதில்லை. Anonymous என்ற பெயரில் எழுதாமல் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள். கடிதங்களை இனி எடிட் செய்து வெளியிடப்படும். பெயர் குறிப்பிடப்படாமல் எழுதப்படும் கடிதங்களை இனி பிரசுரம் செய்யப் போவதில்லை.
அழகியசிங்கர்