அவனுக்கு மட்டும் எப்படி
தபால்பெட்டியில் கார்டு மாதிரி
தன் உடம்பைக் கிணற்றுக்குள்
போட்டுவிட முடிகிறது?
தன் வாழ்வைக்
குப்பைக் கடுதாசி போல்
எட்டாம் மாடியிலிருந்து
விட்டெறிந்து விட முடிகிறது?
தற்கொலை செய்து கொள்வது,
தண்ணீரில் குளிப்பதைப் போல்
மனசில் ஒட்டாத விஷயமா?
உயிர் வெறும் எச்சிலா
'பச்' சென்று துப்பிவிட?
பிறவியில்
உயிரை உடம்புக்கு வெளியில்
ஒட்டிக்கொண்டு வந்தானா
ஆறாவது விரலாக?
வேண்டியபோது வெட்டி விட।
பட்டப் பகலில்,
முன் கூட்டியே பாலை
எதிர்த்த வீட்டில்
வாங்கி வைத்துக்கொள்ள
ஏற்பாடு செய்து விட்டு,
பின்கதவை பூனை வராமல்
இழுத்து மூடி,
அடுப்பில் கொதிக்கும் கிழங்குகளை
இறக்கி வைத்து மூடிவிட்டு
''எதற்கும் கவலைப் படாதே,
குழந்தையைப் பார்த்துக்கொள்
போகிறேன்,''என்று முத்தமுடன்
காகிதம் எழுதிப் பார்வைக்குத்
தப்பாத இடத்தில் பத்திரப் படுத்திவிட்டு,
வாசலில் சோறு வைத்துவிட்டு
பொருத்தமான கறுப்பு உடுப்புகளை
இறுக்கமாகப் போட்டுக்கொண்டு,
தூளிக் கயிறு, காலைவாரி விடாதவாறு
ஒருமுறைக்கு இருமுறை
இழுத்துப் பார்த்துவிட்டு,
உத்தரக் கம்பியின்
உயரத்தை அளந்து கட்டி
கழுத்து முடிச்சுகளை
கச்சிதமாகப் போட்டுக்கொண்டு
நாற்காலியை தள்ளி விட்டு
நாசூக்காய் உயிர்விட முடிகிறது
அவனால் எவ்விதம்?
நிஜமாக இது அவனுக்கு
ஒரே காட்சி।
கடைசி காட்சி, என்றாலும்
நான் அவனே போல்
அடிக்கடி இக் காட்சியை
ஒத்திகை பார்த்துக்கொள்கிறேன் எனக்குள்
மிக இயல்பான
தன் முயற்சியற்ற தோற்றமாக,
உலகம் என்னிழப்பால்
உருகி ஓலமிட வேண்டுமென்ற
பேராசையால்
அல்லும் பகலும் அக்கறையாய்
நான் காட்சிகளின் கோர்வைகளை
மனனப் படுத்துகிறேன்। திரும்பத் திரும்ப,
இருந்தாலும்,
வேளைகளில் விளக்கணைந்து
காட்சி மாறும் கண்ணிமைப்பு
நேரத்தில,
நான் தப்பி ஓடிப்போய்
பார்வையாளர் முதுகுக்குள்
பதுங்கிக்கொண்டு விடுகிறேன்।
என்னையும் மீறி।
என் மறைவால்
எவனுக்கும் கவலை தோன்றவில்லை।
ஓரத்தில் தயாராய் காத்திருக்கும்
கறுப்பான 'டூப்' நடிகன்,
நாற்காலியை உருட்டிவிட்டு
நாக்கு நீண்டு தொங்குகிறான்।
மேடையில்।
உச்ச வியப்பால்
உருக்கமான காட்சியால்
உலகத்தில் பார்த்தவர்கள்
''ஒன்ஸ் மோர்'' என்று
கத்துகிறார்கள்
எனக்கு விதித்திருந்த
அனுதாபத்தை அபகரித்துவிட்ட
நடிகனை கோபத்தால் ஓயாமல்
கொலை செய்கிறேன்।
நாற்காலியை உலகத்திற்கு எதிரே
நிமிர்த்தி வைத்து,
காட்சிக்கு என்னை
மீண்டும் தயார் செய்து கொள்கிறேன்
'ஒன்ஸ் மோர்।'
(சமீபத்தில் விருட்சம் கவிதைகள் தொகுதி 2 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 1993-1997 வரை உள்ள காலகட்டத்தில் விருட்சத்தில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி இது. 93 கவிஞர்களின் கவிதைத் தொகுதி இது. இத் தொகுதியில் உள்ள வைதீஸ்வரின் கவிதை இது.)
1
Comments